Home பெண்கள் பெண்குறி Girls Sex Part இனப்பெருக்க உறுப்பில் நீடிக்கும் கிளர்ச்சி

Girls Sex Part இனப்பெருக்க உறுப்பில் நீடிக்கும் கிளர்ச்சி

38

இனப்பெருக்க உறுப்பில் நீடிக்கும் கிளர்ச்சி உணர்வு என்பது, பெண்களின் பாலியல் ஆரோக்கியத்துடன் தொடர்புடைய ஒரு பிரச்சனை. இப்பிரச்சனை உள்ளவர்களுக்கு திடீரென்று பெண்ணுறுப்பில் கிளர்ச்சி ஏற்படும். ஆனால் புணர்ச்சிப்பரவசநிலை ஏற்பட்டாலும் கிளர்ச்சி அடங்காது. மேலும், பாலியல்ரீதியான தூண்டுதல் மட்டுமின்றி, (பாலியல் அல்லாத) சாதாரண தூண்டுதலுக்கும் இக்கிளர்ச்சி ஏற்படுவதால் அது மன அழுத்தத்திற்கு வழிவகுக்கக்கூடும். PGAD பிரச்சனையை ஓய்வற்ற இனப்பெருக்க உறுப்பு நோய்த்தொகுப்பு (ReGS அல்லது RGS) என்றும் அழைக்கிறோம்.

PGAD பிரச்சனையானது வயதான பெண்கள், இளம்பெண்கள், திருமணமான பெண்கள், திருமணமாகாத பெண்கள், எதிர்பாலினத்தவரிடம் பாலியல் நாட்டம் கொண்டவர்கள், ஒத்த பாலினத்தவரிடம் நாட்டம் கொண்டவர்கள், மாதவிடாய் நிற்பதற்கு முந்தைய நிலையில் உள்ள பெண்கள், மாதவிடாய் நிற்பதற்கு சற்று முந்தைய காலகட்டத்தில் உள்ள பெண்கள், மாதவிடாய் நின்றுவிட்ட பெண்கள் என எவருக்கும் ஏற்படலாம்.

காரணங்கள் (Causes):

இப்பிரச்னைக்கான காரணங்கள் என்ன என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை எனினும், பின்வரும் காரணங்களால் ஏற்படலாம் எனக் கருதப்படுகிறது:

நரம்பியல் காரணங்கள்
மைய நரம்பு மண்டலம்: டாரெட்ஸ் சின்ட்ரோம், மைய நரம்பு மண்டலத்தில் உட்புறமாக அல்லாமல் வெளியே ஏதேனும் அடிபடுதல், கால்கை வலிப்பு, இரத்தக் குழாய்களின் குறைபாடுகளுக்காக செய்யப்படும் நரம்பியல் அறுவை சிகிச்சை போன்ற நிகழ்வுகளுக்குப் பிறகு இந்தப் பிரச்சனை ஏற்படலாம்.
புற நரம்பு மண்டலம்: பெண்ணுறுப்பில் நரம்பு சிக்கிக்கொள்ளுதல் அல்லது உணர்திறன் அதிகரிப்பு போன்றவற்றால் ஏற்படலாம்.
உளவியல்: மனக்கலக்கம் மற்றும் மன அழுத்தத்தால் ஏற்படலாம்.
இரத்த நாளம் சம்பந்தப்பட்ட காரணங்கள்: தமனி மற்றும் சிரைகளின் குறைபாடுகள். அதாவது கிளிட்டோரிஸ் பகுதியின் தமனிகளும் சிரைகளும் தொடர்புகொள்ள முடியாமல் போவதால் ஏற்படலாம்.
ஹார்மோன் மாற்றங்கள்: மாதவிடாய் நின்ற பெண்களுக்கு ஹார்மோன் சிகிச்சை தொடங்குதல், இடையில் விட்டுவிடுவது, கடையில் கிடைக்கும் மூலிகை ஈஸ்ட்ரோஜெனை அதிகமாகப் பயன்படுத்துவது போன்றவற்றுக்குப் பிறகு ஏற்படலாம்.
மருந்து சம்பந்தமான காரணங்கள்: குறிப்பிட்ட சில ஆன்டிடிப்ரசன்ட் மருந்துகளை (ட்ராசொடோன்) ஊசி வழியே செலுத்துதல் அல்லது SSRI (செலக்டிவ் செரட்டோனின் ரி-அப்டேக் இன்ஹிபிட்டர்ஸ்) மருந்துகளை நிறுத்துவதால் ஏற்படும் நோய்த்தொகுப்பு போன்றவற்றின் காரணமாக இப்பிரச்சனை ஏற்படலாம்.
மற்றவை: தன்னிடம் யாரேனும் பாலியல்ரீதியாக தவறாக நடந்துகொண்ட அனுபவம் அல்லது அதீத பாலியல் செயல்பாடு.
அறிகுறிகளும் அடையாளங்களும் (Symptoms and Signs):

இனப்பெருக்க உறுப்புத் திசுக்களில் (பெண்ணுறுப்புக் காம்பு (கிளிட்டோரிஸ்), யோனி இதழ், பிறப்புறுப்பு, பெரினியம் மற்றும் ஆசனவாய்) இடைவிடாத, விரும்பத்தகாத, அதுவாகவே அத்துமீறி ஏற்படுகின்ற, எப்போதும் நிலைத்திருக்கின்ற, தானாக ஏற்படுகின்ற அழுத்தம்/அசௌகரியம், இரத்தத் தேக்கம், துடிப்பு, தொடர்ச்சியான உந்துதல் மற்றும் அழுத்துவது போன்ற உணர்வுகள்.
இனப்பெருக்க உறுப்புப் பகுதியில் இரத்தக் குழாய்களில் இரத்தம் தேங்குதல் மற்றும் உணர்திறன் அதிகரிப்பு (பாலியல் கிளர்ச்சிக்கு உடல் ஆற்றும் எதிர்வினை) நீண்ட நேரம் (மணிக்கணக்கில்/சில நாட்கள்) நீடித்திருக்கும். அது தானாக அடங்காது.
ஓரிரு முறை புணர்ச்சிப் பரவசநிலை அடைந்த பிறகும் இனப்பெருக்க உறுப்பின் கிளர்ச்சி அடங்காது.
பாலியல்ரீதியான தூண்டலால் இது தொடங்கலாம் அல்லது (காரின் அதிர்வு போன்ற) வேறு சாதாரண தூண்டுதல்களாலும் தொடங்கலாம்.
சமூகத்தில் அந்நியமாதல், கவனச் சிதறல், கவலை, மன இறுக்கம், நம்பிக்கையின்ம உணர்வு, தூக்கமின்மை, கவனம் செலுத்தும் திறன் குறைதல், முடிவெடுப்பதில் சிரமம், எரிச்சல் அடையும் குணம், கலக்கம், இறுக்கமான மனநிலை போன்ற உளவியல் பிரச்சனைகளுக்கும் இந்தப் பிரச்சனையுடன் தொடர்பு இருக்கலாம்.
இது போன்ற அனுபவங்கள் ஏற்படும்போது, ஓரளவு அல்லது அதிக மன இறுக்கம் ஏற்படலாம்.
நோய் கண்டறிதல் (Diagnosis):

மருத்துவ வரலாறு: காரணத்தைப் பற்றி ஆய்வு செய்ய (உயிரியல் அல்லது மருந்தியல் காரணங்கள் குறித்து) மருத்துவ வரலாறு பற்றிக் கேட்டறியப்படலாம்.
உடல் பரிசோதனை: ஏதேனும் புறநரம்பு மண்டலப் பிரச்சனைகள் காரணமாக இருக்குமா எனக் கண்டறிய உடல் பரிசோதனை செய்யப்படலாம்.
இரத்தப் பரிசோதனைகள்: இந்தப் பிரச்சனைக்கு ஹார்மோன் மாற்றங்கள் காரணமாக இருக்குமா என ஆய்வு செய்ய இரத்தப் பரிசோதனைகள் செய்யப்படலாம்.
அல்ட்ராசவுண்ட்: கிளிட்டோரிஸ் பகுதியில் அல்ட்ராசவுண்ட் சோதனை செய்யப்படலாம் (தமனி, சிரை பிரச்சனைகள் இல்லை என உறுதிப்படுத்த), கீழ் இடுப்புப் பகுதியிலும் பிறப்புறுப்பின் குறுக்குவாட்டிலும் அல்ட்ராசவுண்ட் சோதனை செய்யப்படலாம் (இரத்தக் குழாய் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இல்லை என உறுதிப்படுத்த).
மற்றவை: நரம்பியல் நிபுணரிடம் ஆலோசனை செய்யப்படலாம், EEG, CT ஸ்கேன் மற்றும் MRI ஸ்கேன் போன்றவை செய்யப்படலாம் (நரம்பியல் அல்லது நரம்பியல் உளவியல் கோளாறுகளினால் ஏற்பட்ட மைய நரம்பு மண்டலம் அல்லது நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் இல்லை என உறுதிப்படுத்த).
சிகிச்சை (Treatment):

எந்த சிகிச்சையும் இப்பிரச்சனைக்கு நிரந்தர, நீண்ட காலத்திற்கு நீடிக்கின்ற தீர்வை அளிப்பதில்லை. எனினும், பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றலாம்:

சுய நிர்வகிப்பு: மரத்துப்போகச் செய்யும் மருந்துகள் அல்லது ஐஸை வைப்பதன் மூலம் இனப்பெருக்க உறுப்புப் பகுதியை உணர்விழக்கச் செய்யலாம். மேலும், கீழ் இடுப்புப் பகுதியில் மசாஜ் செய்யலாம், ஸ்ட்ரெட்ச்சிங் உடற்பயிற்சிகளைச் செய்யலாம் இதன் மூலம் கீழ் இடுப்புத் தளத் தசைகளில் இறுக்கம் குறையும் அல்லது மறையும்.
பாலியல் சிகிச்சை அல்லது ஆலோசனை: தன்னைத் தானே நொந்துகொள்ளுதல், குறைகூறிக்கொள்ளுதல் அல்லது எதிர்மறையான எண்ணங்கள், புலன் உறுப்புகள் சார்ந்த குறுக்கீடுகள் போன்ற பிரச்சனைகளுக்கு இம்முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. நடந்துகொள்ளும் முறைகளையும் மனக்கலக்கத்தைக் குறைப்பதற்கான நுட்பங்களையும் இந்த சிகிச்சை முறை மேம்படுத்துகிறது.
ஆதரவுக் குழு: இது போன்ற பிரச்சனைகள் உள்ளவர்கள் உருவாக்கியுள்ள குழுக்களில் பங்கேற்பதன் மூலம், தனியாக இருக்கிறோம் என்ற உணர்வு இல்லாமல் சௌகரியமாக உணர முடியும். சூழ்நிலையை இன்னும் சிறப்பாகச் சமாளிக்க அது உதவும்.
மருந்துகள்: இனப்பெருக்க உறுப்பில் ஏற்படும் இறுக்கத்தைக் குறைக்கவும், மன நிலையை நிலைப்படுத்தவும் மருந்துகள் (இவை உளவியல் காரணிகளைச் சரிப்படுத்தும்) கொடுக்கப்படலாம்.
சிக்கல்கள் (Complications):

இந்தப் பிரச்சனை உள்ளவர்கள், எப்போதும் (24/7) தான் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் புணர்ச்சிப் பரவசநிலையின் எல்லையிலேயே வாழ வேண்டி இருக்கும். இதற்கு அதிக ஆற்றல் செலவாகும் என்பதால், இவர்கள் எப்போதும் களைப்பாக இருக்கலாம், மன இறுக்கம் ஏற்படலாம், அரிதாக சிலசமயம் தற்கொலை எண்ணங்கள் உண்டாகலாம். இந்தப் பிரச்சனை உள்ளவர்கள், வெட்கத்தாலும் குற்ற உணர்வாலும் பிறர் நம்மை நிராகரிப்பார்களோ என்ற பயத்தாலும் பிறரிடம் இருந்து ஒதுங்கி இருக்கக்கூடும்.