பெண்கள் அழகு குறிப்பு:இளம் பெண்கள் தலைமுடி உதிர்வு பிரச்சனையால் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். ஒருவருக்கு தலைமுடி உதிர்வதற்கு ஏராளமான காரணங்கள் உள்ளன. அதில் மரபியல் குறைபாடு, ஆரோக்கிய பிரச்சனைகள், சமச்சீரற்ற டயட், பழக்கவழக்கங்கள், அளவுக்கு அதிகமாக ஹேர் ஸ்டைலிங் பொருட்களைப் பயன்படுத்துதல் போன்றவை குறிப்பிடத்தக்கவை.
ஒருவருக்கு ஒரு நாளைக்கு சில மயிர்கால்கள் உதிர்வது சாதாரணம். ஆனால் அப்படி உதிரும் முடியின் அளவு அதிகமாகும் போது தான் பிரச்சனையே ஆரம்பமாகிறது. இந்நிலையில் தலைமுடி உதிர்வதை தடுக்கும் வழியை யார் சொன்னாலும், மக்கள் அவற்றைப் பின்பற்றுவார்கள்.
தலைமுடி உதிர்வதைத் தடுக்க அழகு நிலையங்கள் அல்லது தலைமுடி பராமரிப்பு நிலையங்களில் ஏராளமான சிகிச்சைகள் உள்ளன. ஆனால் அந்த சிகிச்சைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு மாதிரியான பக்கவிளைவுகளைக் கொண்டிருக்கும். அதோடு இந்த சிகிச்சைகள் விலை அதிகமானதாகவும் இருக்கும்.
நீங்கள் பணம் அதிகம் செலவழிக்காமல் எளிய வழியில் தலைமுடி உதிர்வதைத் தடுக்க வேண்டுமா? அப்படியெனில் இக்கட்டுரை உங்களுக்கு ஏற்றது. ஏனெனில் இதில் தலைமு உதிர்வதைத் தடுக்கும் ஓர் அற்புத ஹேர் மாஸ்க் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஹேர் மாஸ்க் முற்றிலும் இயற்கைப் பொருட்களைக் கொண்டது. சரி, இப்போது அந்த ஹேர் மாஸ்க்கை எப்படி போடுவதென்று காண்போம்.
நெல்லிக்காய் பவுடர்
நெல்லிக்காய் பாரம்பரியமாக தலைமுடியைப் பராமரிக்க பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு பொருள். இதில் உள்ள சக்தி வாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட், சேதமடைந்த மயிர்கால்களை சரிசெய்யவும், வலிமைப்படுத்தவும் செய்யும்.
பூந்திக்கொட்டை பவுடர்
பூந்திக்கொட்டையில் உள்ள நொதிப் பொருள், மாசுக்களில் இருந்து மயிர்கால்களுக்கு பாதுகாப்பு அளிக்கும். அதோடு டாக்ஸின்களால் மயிர்கால்கள் பாதிக்கப்பட்டு உடைவதையும் தடுக்கும்.
ரோஸ் வாட்டர்
ரோஸ் வாட்டர் மயிர்கால்களை புத்துணர்ச்சி அடையச் செய்வதோடு, ஸ்கால்ப்பின் pH அளவையும் நிலைப்படுத்தும். மேலும் இது எளிதில் ஸ்கால்ப்பால் உறிஞ்சப்பட்டு, ஒட்டுமொத்த தலைமுடியின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.
இந்த மாஸ்க்கின் நன்மைகள்
மேலே கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒன்றாக கலந்து ஹேர் மாஸ்க்காக பயன்படுத்தினால், தலைமுடியில் அற்புதங்கள் நிகழும். முக்கியமாக இந்த மாஸ்க் தலைமுடி உதிர்வதை விரைவில் தடுத்து நிறுத்தும். அதோடு தலைமுடியின் ஆரோக்கியத்தையும், வலிமையையும் அதிகரிக்கவும் செய்யும்.
தேவையான பொருட்கள்:
* நெல்லி பவுடர் – 1 டீஸ்பூன்
* பூந்திக்கொட்டை பவுடர் – 1 டீஸ்பூன்
* கற்பூர பொடி – 1/4 டீஸ்பூன்
* ரோஸ் வாட்டர் – 3 டேபிள் ஸ்பூன்
தயாரிக்கும் முறை:
* ஒரு பௌலில் மேலே கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு ஸ்பூன் கொண்டு பேஸ்ட் பதத்தில் நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* தயாரித்து வைத்துள்ள மாஸ்க்கை ஸ்கால்ப்பில் படும்படி தடவி நன்கு மசாஜ் செய்ய வேண்டும்.
* 10 நிமிடம் நன்கு ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரால் தலையை அலச வேண்டும்.
* இந்த ஹேர் மாஸ்க்கை வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தினால் நல்ல தீர்வை விரைவில் காணலாம்.