Home ஜல்சா பெண்களின் குடிப்பழக்கத்தால் சமூகம் சீரழியும்

பெண்களின் குடிப்பழக்கத்தால் சமூகம் சீரழியும்

41

Captureமது அருந்துதலென்பது பணம் படைத்த மற்றும் சமுதாய அந்தஸ்துள்ள பெண்களிடத்தில் மட்டுமல்லாது நகர்ப்புற பெண்கள், பள்ளி மற்றும் கல்லூரி செல்வோரிடத்திலும் பரவிவருகிறது. இன்று இளம்பெண்களிடத்தில் மது அருந்துவது குற்றமில்லை என்ற நிலைப்பாடு பரவலாக உள்ளது. கேம்பஸ் பார்ட்டி, அலுவலக பார்டிகளில் மது அருந்துவது நாகரிகமாகக் கருதப்படுகின்றது.

மேற்கத்திய நாடுகளின் தாக்கமும், அவர்களின் பழக்கவழக்கங்களின் மீதுள்ள மோகமும், இன்றைய தவறான சினிமாக்களின் மறைமுகத் தாக்கமும் இளம்பெண்களிடத்தில் மதுப்பழக்கம் உருவாக முக்கியக் காரணமாக உள்ளது.

நவீன இந்தியாவில் பெண்கள் சுயமுடிவெடுப்பது வரவேற்கத்தக்கது, அதே நேரத்தில் சுதந்திரம் மற்றும் கருத்துச் சுதந்தரம் என்பது மது அருந்தினால் வருமென்பது முற்றிலும் தவறானது. பெண்ணியம் மற்றும் பெண்முன்னேற்றம் என்பது ஆண்களுக்கெதிராக மது அருந்துவதில் மட்டும்தான் உள்ளதா? பெண்களை சமமாக பாவித்து மரியாதையளிக்கும் ஆண்கள் வெகுகுறைவென்றாலும் எண்ணிக்கையில் இருக்கவே செய்கிறார்கள். அதேபோல் மது அருந்தாத ஆண்களும் இங்கு வாழ்ந்து கொண்டுதான் உள்ளனர்.

நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகமாகின்றதோ இல்லையோ மதுவருந்தும் ஆண் மற்றும் பெண்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது.

இக்காலத்தில் பெண்கள் தனியே செல்வதே கடினமாக இருக்கும்போது, மதுவருந்திவிட்டு சென்றால் யோசிக்கவே பயமாக இருக்கிறது. பெண்பாதுகாப்பு, பெண்களுக்கெதிரான வன்கொடுமை தடுப்பு போன்றவற்றிற்கு முன்னுரிமையளிக்காமல் இதுபோன்ற சமூக சீர்கேட்டை வரவேற்பது இன்னும் வேதனை அளிக்கிறது.

இன்று புருஷன், மகன் எங்கு விழுந்துகிடக்கின்றான் என்று வேதனையில் புலம்பும் பெண்களைப் போல், நாளை பெண்ணைப் பெற்றெடுத்த பெற்றோரும் கணவர்களும் புலம்பும் நிலை வெகுதொலைவில் இல்லை. நாளைய சந்ததிகளுக்கு `மதுவருந்துதல்` இயல்பானது என்ற நிலை வருமுன் இதைத் தடுக்க வேண்டும்.