Home பெண்கள் அழகு குறிப்பு பெண்களின் கூந்தல் அழகை பராமரிக்கும் டிப்ஸ்

பெண்களின் கூந்தல் அழகை பராமரிக்கும் டிப்ஸ்

79

பெண்களின் அழகு குறிப்பு:நீண்ட கூந்தல் என்பது பெண்கள் ஒவ்வொருவரினதும் ஆசையாகும். கூந்தல் நீண்டு காணப்படாவிடினும் உள்ள கூந்தலை அழகாக வைத்திருக்க வேண்டும் என்பது எல்லோரினதும் ஆசையாகும்.

கூந்தல் எனக் கூறும் போது சிலரது கூந்தல் வறண்டு காணப்படும். இன்னும் சிலரது கூந்தல் எண்ணெய் தன்மையுடன் காணப்படும். இந்த எண்ணெய் தன்மை கொண்ட கூந்தல் பார்ப்பதற்கு அழகாக இருக்காது. அதுசரி, ஏன் ஒருவரது கூந்தல் எண்ணெய்த் தன்மையாக காணப்படுகின்றது என்கின்றீர்களா?

அதற்கு பல காரணங்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றை நாம் இப்போது பார்ப்போம்.

01. மெல்லிய கூந்தல்
ஒருவரது கூந்தல் மெல்லியதாக இருந்தால் அது அடர்த்தி குறைந்த கூந்தலாக தோற்றமளிக்கும். அதன் போது மண்டை ஓட்டில் உற்பத்தி செய்யப்படும் இயற்கையான எண்ணெயை உறிஞ்சக் கூடிய நிலைமை அங்கு காணப்படாது. எனவே தலையில் உள்ள முடி ஒட்டிப் போய் எண்ணெய்த் தன்மையுடன் காணப்படும்.

02. நேரான கூந்தல்
தலையில் உள்ள கூந்தல் நேராக காணப்படுவதால் மண்டை ஓட்டில் உற்பத்தி செய்யப்படும் எண்ணெயானது தலை முடியின் உச்சி முதல் அடி வரை செல்லும். இதன் போது தலை முடி ஒட்டிக் காணப்படும்.

03. பரம்பரை
சிலரது பெற்றோருக்கு எண்ணெய்த் தன்மையான தலை முடி காணப்படும். அதே போல் அவர்களது குழந்தைகளுக்கும் எண்ணெய்த் தன்மையான தலைமுடி காணப்படும். இது பரம்பரை பரம்பரையாக தொடரும் நிலைமையாகும்.

04. ஈரப்பதன்
தலை முடி எப்போதும் ஈரப்பதனாக இருப்பதனாலும் எண்ணெய்த் தன்மை உடையதாக காணப்பட காரணமாகின்றது.

05. சந்தையில் விற்கப்படும் பொருட்கள்
கன்டிஷனர், சீரம், வெக்ஸ், மூஸ் போன்ற சந்தையில் விற்கப்படும் பொருட்களை அடிக்கடி உபயோகிப்பதால் அது தலையில் இயற்கையாகவே உற்பத்தி செய்யப்படும் எண்ணெயுடன் கலந்து மேன்மேலும் ஈரப்பதன் கொண்டதாகவும் எண்ணெய்த் தன்மை உடையதாகவும் தோற்றமளிக்க காரணமாகின்றது.

06. சுடுநீர்
நீங்கள் குளிக்கும் போது இயன்றவரை குளிர்ந்த நீரால் தலை முடியை கழுவ முயற்சியுங்கள். ஏனெனில் சூடான நீரானது தலையில் உற்பத்தி செய்யப்படும் எண்ணெயின் அளவை மேன்மேலும் அதிகரிக்கின்றது. இதனால் தலை முடி எண்ணெய்த் தன்மை உடையதாக தோற்றமளிக்கின்றது.

07. அதிகளவு கன்டிஷனர்
கன்டிஷனரை உபயோகிக்கும் போது தலை முடியின் அடிப்பாகத்தில் மாத்திரம் அதனை உபயோகிப்பது சிறந்தது. ஏனெனில் மண்டை ஓடு உள்ள பகுதியில் ஏற்கனவே போதுமான ஈரப்பதன் உள்ளது. இதனிடையே கன்டிஷனரையும் உபயோகித்தால் தலை முடி ஒட்டியவாறு காணப்படும்.
ஆகவே மேற்குறிப்பிட்டவை தொடர்பில் அக்கறை கொண்டு எண்ணெய்த் தன்மையான தலை முடி ஏற்படாது தவிர்ப்போம்