நம் எல்லோருடைய வாழ்விலும் நட்பு ஒரு முக்கிய இடத்தை வகிக்கிறது. நம் சுக துக்கங்களை பகிர்ந்து கொள்ள மட்டுமல்ல, நம் சந்தோஷங்களை பல மடங்கு அதிகரிக்கவும், துன்பங்களை முற்றிலும் குறைக்கவும் நமக்கு எப்போதுமே ஒரு நட்பு தேவைப்படுகிறது.
இருவருக்குமிடையில் ஒரு நல்ல அலைவரிசை உருவாகுமிடத்தில் நல்லதொரு நட்பு செட் ஆகிவிடும். நல்ல நட்புக்கு வயது ஒரு தடை கிடையாது; ஆண்-பெண் பாகுபாடும் இல்லை. அதேபோல், ஆண் நட்பை விட பெண் நட்போ அல்லது பெண் நட்பை விட ஆண் நட்போ சிறந்தது என்று சொல்லிவிட முடியாது.
ஆனாலும், ஒரு பெண்ணுடன் கொள்ளும் நட்பை விட, ஒரு ஆணுடன் வைத்துக் கொள்ளும் நட்பு வித்தியாசமானது. ஏன் சம்திங் ஸ்பெஷல் என்று கூட சொல்லலாம். நீங்கள் ஆணோ, பெண்ணோ தெரியாது.
உங்கள் மனதில் உள்ளவற்றை நீங்களாகவே போட்டு உடைக்கும் வரை அநாவசியமாக உங்கள் ஆண் நண்பர்கள் உங்களைத் தொந்தரவு செய்ய மாட்டார்கள். ஆண் நட்புக்கு அழகே இதுதான்.
ஆண் நட்புக்கு தேவையில்லாத ஃபார்மாலிட்டி எல்லாம் கிடையாது. நண்பனின்/நண்பியின் பிறந்தநாளை மறந்து விட்டோமே என்று மூலையில் உட்கார்ந்து அழமாட்டார்கள். இதுபோன்ற அல்பத்தனமான சின்ன விஷயங்களைத் தூக்கி எறிந்துவிட்டு, சந்தோஷமாக இருப்பார்கள்; நண்பர்களையும் சந்தோஷப்படுத்துவார்கள்.
ஆண் நட்பில் பொறாமை என்ற வார்த்தைக்கே இடம் கிடையாது. அவர்கள் நட்பு உண்மையானால், உங்களுடைய அனைத்து முடிவுகளிலும் உங்களுக்கு ஆதரவாகவே இருப்பார்கள்.
பெண் நண்பர்கள் போல் ஆண் நண்பர்களுக்கு நாடகம் ஆடத் தெரியாது. தங்கள் மனதில் எதையும் போட்டு மூடி மறைக்க மாட்டார்கள். எதற்கும் தயங்காமல் பட்பட்டென்று வெளிப்படையாகப் பேசிவிடுவார்கள்.
சக நட்புக்கு மரியாதை அளிப்பதில் ஆண்களுக்கு நிகர் ஆண்களே! இதன்மூலம் ஆயுளுக்கும் அவர்கள் உங்களுக்கு நண்பர்களாகவே இருப்பார்கள்.
ஆண் நண்பர்கள் வளவளவென்னு அதிகம் பேசுவதில்லை. அதற்குப் பதில், காரியத்தைச் செய்து முடிப்பதில் உறுதியாக இருப்பார்கள்.
நீங்க நீங்களாகவே இருக்கலாம். நீங்கள் என்ன பேசுகிறீர்கள், செய்கிறீர்கள் என்று அலசி ஆராய்ந்து கொண்டிருக்க மாட்டார்கள் உங்கள் ஆண் நண்பர்கள். ஆண் நட்பின் முக்கிய அம்சமே இதுதான்.