அழகு குறிப்பு:அக்குள் பகுதியில் அளவுக்கு அதிகமாக வியர்க்கிறது. உடைகளில் வழிந்து, எப்போதும் அந்தப் பகுதி ஈரமாகவே இருக்கிறது. சில நேரங்களில் வியர்வை வாடையும் வருகிறது. புடவை, ஜாக்கெட் அணிகிற போது மிகவும் தர்மசங்கடமாக உணர்கிறேன்
எடை அதிகமாக இருந்தாலும் இந்தப் பிரச்னை வரும் என்பதால், அதை முதலில் கவனிக்க வேண்டும். குறிப்பாக தோள்பட்டைகளில் அதிக பருமன் சேராமலிருக்க கைகளை தினமும் சில முறைகள் கடிகாரச் சுழற்சியிலும் அதற்கு எதிர் சுழற்சியிலும் சுற்ற வேண்டும். 100 சதவிகித காட்டன் உடை மற்றும் உள்ளாடைகளே அணிய வேண்டும். அக்குள் பகுதியில் உள்ள ரோமங்களை நீக்க கெமிக்கல் கலந்த கிரீம்களை பயன்படுத்தக்கூடாது.
கோரைக்கிழங்கு – 50 கிராம், கஸ்தூரி மஞ்சள் – 100 கிராம், வெட்டிவேர் – 50 கிராம், பூலாங்கிழங்கு – 100 கிராம் எல்லாவற்றையும் நைசாக அரைத்து, சிறிது எடுத்து வெந்நீரில் குழைத்து அக்குள் முதல் முழுக்கைகளுக்கும் தடவி 5 நிமிடங்கள் ஊறிக் குளிக்கலாம்.
மரிக்கொழுந்து – 200 கிராம், வெள்ளரி விதை- 50 கிராம், பயத்தம் பருப்பு- 100 கிராம் மூன்றையும் நைசாக பொடித்து, அக்குள் பகுதியில் பேக் போல போட்டுக் குளித்தால் அந்த இடம் மென்மையாகும். நாற்றம் நீங்கும்.குப்பை மேனி இலை, வில்வ இலை, துளசி, பூலாங்கிழங்கு – தலா 100 கிராம், வேப்பந்தளிர் – 25 கிராம் எல்லாவற்றையும் சேர்த்து அரைத்து அக்குள் பகுதியில் தடவி ஊறிக் குளித்தால் அந்தப் பகுதியில் ரோம வளர்ச்சி குறையும். சருமம் மென்மையாகும். வியர்வை கட்டுப்படும்.
குளி்க்கிற தண்ணீரில் துளசி, வேப்பிலை, லவங்கம் சேர்த்தரைத்த பொடியை கடைசியாக கலந்து குளிக்கலாம். 3 டீஸ்பூன் பார்லி பவுடருடன், அரை டீஸ்பூன் பச்சை கற்பூரத்தைப் பொடித்து, பாலில் குழைத்து அக்குள் பகுதியில் தடவிக் கொண்டு, குளிர்ந்த தண்ணீரில் கழுவினாலும் நாற்றமும் வியர்வையும் கட்டுப்படும்.