பொது மருத்துவம்:செரிமானத்தின் போது குடலில் உண்டாகும் வாயு, எப்போதாவது வெளியேறுவது இயல்புதான். ஆனால் அன்றாட செயல்களுக்கு இடையூறு செய்யும் அளவுக்கு, வயிற்று உப்புசம், செரியாமை போன்ற அறிகுறிகளுடன் வாயு வெளியேறினால், நாம் உட்கொள்ளும் உணவு வகைகளை முறைப்படுத்த வேண்டியது அவசியம்.
குடற்பகுதிகளில் தேங்கும் செரிக்காத உணவுக் கூழ்மங்களில், அங்கு வாழும் பாக்டீரியாக்கள் உண்டாக்கும் நொதித்தல் (Fermentation) காரணமாகவே வாயு ஏற்படுகிறது. மலம் கழிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்பட்டவுடன் மலத்தை வெளியேற்றுவது அவசியம். இல்லையெனில் மலம் வெளியேறாமல் நீண்ட நேரம் குடற்பகுதியில் தேங்கும். கூடுதல் நொதித்தல் காரணமாக நாற்றத்துடன் கூடிய வாயு வெளியேறும். உணவுப் பொருட்களை முழுமையாக உட்கிரகிக்க முடியாதபோதும் வாயு ஏற்படலாம்.
குடற்பகுதியில் வாழும் நலம் பயக்கும் பாக்டீரியாக்களின் அழிவும் வாயு ஏற்படுவதற்கு ஒரு காரணம். மருத்துவரின் பரிந்துரை இல்லாமல் எடுத்துக்கொள்ளப்படும் சில மாத்திரைகளின் விளைவாகவும் குடற்பகுதியில் உள்ள நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் அழியும் என்பதைக் கவனத்தில் கொள்ளவும். சில நேரங்களில், சிறுகுடல் பகுதியில் அளவுக்கு அதிகமாகப் பாக்டீரியாக்கள் கூடும்போதும் (Small Intestinal Bacterial Overgrowth) வாய்வுப் பிரச்னை உண்டாகும்.
பீன்ஸ், முளைக்கட்டிய தானியங்கள், முட்டைகோஸ் போன்றவற்றில் இருக்கும் ராஃபினோஸ் (Raffinose), உருளைக் கிழங்கில் உள்ள ஸ்டார்ச் காரணமாக வாயுப் பெருக்கம் ஏற்படலாம். பருப்பு வகைகள், வாழைக்காய் போன்றவையும் வாயு உண்டாக்கும் வஸ்துக்களே. இவற்றைச் சமைக்கும் போது அதிகளவில் மிளகு, சீரகம் சேர்த்துக்கொள்ளலாம். மிளகு மற்றும் சீரகத்துக்கு இருக்கும் வாய்வகற்றி செய்கை காரணமாக, குடலில் வாயு உண்டாகாது. இருப்பினும் வாயுத் தொல்லை இருப்பவர்கள் குறிப்பாக உருளைக்கிழங்கு, வாழைக்காய் போன்றவற்றைச் சிறிது காலத்திற்கு ஒதுக்கி வைப்பது நல்லது. வாயு நிரப்பப்பட்ட பன்னாட்டு குளிர்பானங்கள், குடலில் வாயுவை அதிகளவில் சேர்ப்பதோடு வயிற்றுப் புண்களையும் உண்டாக்கும்.
பாலில் உள்ள ‘லாக்டோஸ்’ (Lactose) சிலருக்கு வாயுப் பிரச்சனையை உருவாக்கலாம். பழங்களில் உள்ள ‘ஃப்ரக்டோஸ்’ (Fructose) மற்றும் செயற்கை சுவையூட்டிகளில் உள்ள ‘சார்பிடால்’ (Sorbitol) போன்றவற்றைச் செரிக்க முடியாத போதும் வாயுப் பெருக்கம் உண்டாகும். சார்பிடால் என்பது, இனிப்புச் சர்க்கரைக்கு மாற்றாகப் பயன்படுத்தப்படுகிறது.
எண்ணெய்யில் பொறித்த இறைச்சி, கொழுப்பு நிறைந்த உணவுகள், செரிமானத்தைத் தாமதமாக்கி, வாயுப் பெருக்கத்திற்கு வழிவகுக்கும். நார்ச்சத்து மிகுந்த உணவுகள், உடலுக்கு அதிக நன்மை செய்வதாயிருப்பினும் சிலருக்கு வாயுவை உருவாக்கலாம்.
பெருங்குடல் சார்ந்த நோய்கள், குளுடன் புரதத்தைச் செரிக்க முடியாமல் போவது, செரிமான தசைகளில் பாதிப்பு, கட்டுப்படுத்தப்படாத சர்க்கரை நோய், வயிற்றுப் புண் போன்றவற்றின் காரணமாக, அந்தந்த நோய்க் குறிகுணங்களுடன், ஒரு நாளில் பல முறை வாயு வெளியேறும்.
குடலில் சேரும் வாயுக்களில் கரியமில வாயு, ஹைட்ரஜன், நைட்ரஜன், மீதேன், ஆக்சிஜன் போன்றவை அடக்கம். சில நேரங்களில் கந்தகம் சேர்ந்த கூட்டுப்பொருள்கள் உருவாவதால், நாற்றம் உண்டாகிறது.
அடிக்கடி வாயு வெளியேறுவதைத் தடுக்கும் உணவுகள்/மருந்துகள்
புதினா துவையலை அவ்வப்போது செய்து சாப்பிடலாம். பழங்களில் அன்னாசி நல்லது. நலம் பயக்கும் பாக்டீரியாக்களை அதிகரிக்க மோர் சிறந்த பானம். மலத்தை இளகலாக்க நிறையத் தண்ணீர் குடிப்பது முக்கியம். பூண்டுப் பற்களை நன்றாக வேகவைத்துச் சாப்பிடலாம். சித்த மருந்துகளில், இஞ்சித் தேன், இஞ்சி ரசாயனம், சோம்புத் தீநீர், ஓமத் தீநீர், பஞ்ச தீபாக்கினி சூரணம் (சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலம், சீரகம் சேர்ந்தது), ஏலாதி சூரணம். சீரகச் சூரணம் போன்ற மருந்துகள் சிறந்த பலனை அளிக்கும். தயிர்ச்சுண்டி சூரணம் எனும் மருந்து, வாயுப் பிரச்னையோடு சேர்த்து, வயிற்று உப்புசம், வயிற்றுவலி போன்றவற்றை உடனடியாக குறைக்கும்.
அந்த டயட், இந்த டயட் என மாற்றி மாற்றி உணவுகளை எடுத்துக்கொள்வதைத் தவிர்த்து, உணவில் ஒரு ஒழுங்குமுறையைப் பின்பற்ற வேண்டியது அவசியம்!