பித்தப்பை கற்கள் என்பது சிறிய கூழாங்கல் வடிவில் பித்தப்பையில் படியக் கூடியவை ஆகும். இந்த நிகழ்வு ஏற்படுவதற்கு பல வருடங்கள் ஆகின்றது. இந்த பித்தப்பையானது நாம் உண்ணும் உணவை செரிக்க பெரிதும் உதவுகிறது. இவ்வாறு செரிமானத்திற்கு உதவும் பித்தப்பையிலிருந்து பித்த நீர் சரியாக வெளியேறாமல் இருந்தால், அவை நீண்ட நாட்கள் பித்தப்பையில் தங்கி கற்களை உண்டாக்கும். அந்த கற்கள் பித்தப்பையில் இருந்தால், அதற்காக அறிகுறியே தெரியாது. ஆனால், 10 சதவீத பித்தக்கற்கள், பித்தப்பை அல்லது பித்த நாளங்களில் தடையை ஏற்படுத்திவிடும். இவ்வாறு தடை ஏற்பட்டால், வயிற்று வலி, மஞ்சள் காமாலை, குமட்டல் மற்றும் காய்ச்சல் போன்ற அறிகுறியின் மூலம் அறியலாம்.
இத்தகைய அறிகுறி தெரிந்தால், உடனே அதை அறுவை சிகிச்சை மூலம் நீக்குவது அவசியமாகும். நிறைய பேரின் பித்தப்பையில் உள்ள பித்தக்கற்களை, வயிற்றை பரிசோதிக்க உதவும் அல்ட்ராசவுண்ட் மூலமாகவும் கண்டுபிடிக்கலாம். எனவே பித்தக்கற்கள் இருப்பது தெரிய வந்தால், அப்போது என்ன உணவுகளைத் தவிர்க்க வேண்டும்? அவற்றை இயற்கை முறையில் தடுக்க முடியுமா? என்பதற்கான பதில் இதோ!!!
பித்தப்பைக் கற்களை தடுக்க தவிர்க்க வேண்டிய உணவுகள்:
1. இறைச்சியால் செய்யப்படும் உணவுகள் உண்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அத்தகைய முழுமையான கொழுப்பு கொண்ட இறைச்சி, வெண்ணெய் மற்றும் பால் போன்ற பொருட்கள் பித்தப்பை கற்கள் உருவாவதை தூண்டி, பித்தப்பை பாதிப்பை ஆரம்பித்து வைக்கும்.
2. கொழுப்பு சத்து மிகுந்த உணவுகளை தவிர்க்கவும். எண்ணை நிறைந்த அல்லது வறுத்த உணவுகளை பித்தக்கற்கள் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டும். இந்த உணவு பொருட்கள் பித்தப்பையை கடினமான வேலை செய்ய கட்டாயப்படுத்துகிறது. பின் ஒரு நாள் திடீரென்று, அந்த கற்கள் பித்தநீர்பைக்கு தடையை ஏற்படுத்தலாம்.
3. கனோலா மற்றும் ஆலிவ் எண்ணெய் போன்ற கொழுப்பு நீக்கப்பட்ட எண்ணையை எடுத்துக் கொள்ளலாம். இந்த எண்ணெய்கள், உண்மையில் பித்தப்பைக் கற்களை தடுப்பதில் திறன் மிக்கவை. அதுமட்டுமின்றி, நட்ஸ் ஒரு சிறந்த உணவாக இருக்கிறது.
4. குளிர்ந்த நீரில் கிடைக்கும் மீன் வகைகளான டூனா, கானாங்கெளுத்தி மற்றும் சாலமன் வகைகளை சாப்பிடுங்கள். ஏனெனில் மீனில் உள்ள ஒமேகா-3, பித்தப்பையின் செயல்பாட்டை அதிகரித்து, பித்தக்கற்கள் உருவாவதைத் தடுக்க உதவும்.
5. சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை மற்றும் உயர் கிளைசீமிக் கார்போஹைட்ரேட் உணவு பொருட்களை தவிர்க்கவும். உருளைக்கிழங்கு, அரிசி, பாஸ்தா மற்றும் ரொட்டி உணவுகள், உடலினுள் சென்று நமது உடலால் சர்க்கரையாக மாற்றப்படுகிறது. மேலும் இரத்தத்தில் அதிக அளவில் சர்க்கரை இருந்தாலும், அவை பித்தப்பை கற்களை உருவாக்கும்.
6. ஒவ்வொரு நாளும் ஒரு கப் காப்பி குடித்தால், பித்தப்பையில் உள்ள கொழுப்பின் அளவானது குறைத்து, பித்தக்கற்களை தடுத்துவிடும்.
7. காய்கறிகள் மற்றும் பழங்கள் நிறைய சாப்பிட வேண்டும். இதனால் பித்தப்பையில் கல் உருவாவதை தடுக்க முடியும் என்று ஆய்வுகள் மூலமும் தெரிய வந்துள்ளது.
8. நீரில் கரையக்கூடிய நார்ச்சத்துக்களான தானியங்கள் மற்றும் பருப்பு வகைகளை அதிக அளவில் உணவில் சேர்ப்பது நல்லது. ஏனெனில் இதில் உள்ள நார்ச்சத்து, கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடுகளின் அளவை குறைத்து, இயற்கையாக பித்தப்பையில் கற்கள் ஏற்படுவதை தடுக்கும்.
நினைவில் கொள்ள வேண்டியவை…
* உடலில் பித்தக்கற்கள் இருந்து, அதனால் எந்த ஒரு அறிகுறியும் இல்லை என்றால், அப்போது எந்த ஒரு மருத்துவ சிகிச்சையும் மேற்கொள்ள வேண்டாம். அந்த நேரம், உணவுகளில் கவனத்தை செலுத்தினாலே அவை கரைந்துவிடும்.
* அதிக பருமன் அல்லது மிக வேகமாக எடை குறைவது போன்றவை பித்தப்பைக் கற்களோடு தொடர்புடையவை. ஆகவே உடல் எடையை குறைக்கும் போது படிப்படியாக மெதுவாக குறைத்தால், இயற்கையாகவே பித்தப்பைக் கற்களை தடுக்கலாம்.