ஒவ்வொருவருக்குமே அழகாக இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். அதற்காக எத்தனையோ முயற்சிகளை மேற்கொள்வோம். குறிப்பாக முகத்திற்கு பல்வேறு க்ரீம்களை தடவி பராமரித்து, மற்ற இடங்களை கவனிக்கமாட்டோம். அழகு என்பது வெறும் முகத்தில் மட்டும் இல்லை. தலை முதல் கால் வரை எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் வைத்துக் கொள்வது தான் உண்மையான அழகு. ஆனால் பலர் கால்களுக்கு எந்த ஒரு பராமரிப்பும் மேற்கொள்ளமாட்டார்கள். இதனால் குதிகால்களில் வெடிப்புகள் ஏற்பட்டு அசிங்கமாக காணப்படும். ஆகவே பலர் குதிகால் வெடிப்பை போக்க க்ரீம்களை வாங்கிப் பயன்படுத்துவார்கள். இருப்பினும், அந்த க்ரீம் எவ்வித பயனும் தருவது போல் இருக்காது. எனவே உங்கள் குதிகால்களில் வெடிப்புகள் இருந்தால், அதனைப் போக்க காசு கொடுத்து க்ரீம்களை வாங்கி பயன்படுத்துவதற்கு பதிலாக, ஒருசில இயற்கை வைத்தியங்களை பின்பற்றிப் பாருங்கள். இதனால் குதிகால் வெடிப்பு வந்த தடமே தெரியாமல் போய்விடும். சரி, இப்போது குதிகால் வெடிப்பை சரிசெய்யும் இயற்கை வைத்தியங்களைப் பார்ப்போமா!!!
எலுமிச்சை,
உப்பு, கிளிசரின் மற்றும் ரோஸ் வாட்டர் தினமும் இரவில் படுக்கும் போது ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரை ஊற்றி, அதில் உப்பு, எலுமிச்சை சாறு, கிளிசரின் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, அதில் பாதங்களை 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் மெருகேற்ற உதவும் கல்லைக் கொண்டு குதிகால்களை தேய்த்து கழுவி விட்டு தூங்கினால், கால்களில் உள்ள இறந்த செல்கள் மற்றும் அழுக்குகள் நீங்கி, வெடிப்புகள் மறைய ஆரம்பிக்கும்.
வாழைப்பழம்
வாழைப்பழத்தை நன்கு மசித்து, அதனை குதிகால் வெடிப்பின் மீது தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தாலும், வெடிப்பு மறையும்.
வெஜிடேபிள் எண்ணெய்
பாத வறட்சியும் குதிகால் வெடிப்பிற்கு முக்கிய காரணமாகும். எனவே தினமும் இரவில் படுக்கும் போது, கால்களை நன்கு சுத்தமாக தேய்த்து கழுவி, பின் வெஜிடேபிள் ஆயிலை கால்களுக்கு தடவி மசாஜ் செய்து ஊற வைத்து தூங்க வேண்டும்.
வேஸ்லின் மற்றும் எலுமிச்சை சாறு
இரவில் படுக்கும் முன், பாதங்களை நன்கு கழுவி உலர வைத்து, பின் பாதங்களை வெதுவெதுப்பான நீரில் 15-20 நிமிடம் ஊற வைத்து, மீண்டும் உலர வைக்க வேண்டும். பின்பு 1 டீஸ்பூன் வேஸ்லின் உடன் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, குதிகால்களில் வெடிப்பு உள்ள இடத்தில் தடவி தேய்த்து, இரவு முழுவதும் ஊற வைத்து வந்தால், நல்ல பலன் கிடைக்கும்.
வாழைப்பழம் மற்றும் அவகேடோ
ஒரு வாழைப்பழத்துடன் பாதி அவகேடோ மற்றும், சிறிது தேங்காயை சேர்த்து நன்கு அரைத்து, அதனை தினமும் பாதங்களில் தடவி ஊற வைத்து வந்தால், விரைவில் குதிகால் வெடிப்பானது போய்விடும்.
தேன்
பாதங்களில் உள்ள வெடிப்புக்களை போக்க, அரை வாளி வெதுவெதுப்பான நீரில் 1 கப் தேன் சேர்த்து கலந்து, 15-20 நிமிடம் அதில் பாதங்களை ஊற வைத்து, பின் நன்கு தேய்த்து கழுவினால், பாதங்கள் மென்மையாக அழகாக இருக்கும்.
ஆலிவ் ஆயில்
தினமும் இரவில் படுக்கும் போது, ஆலிவ் ஆயிலை பாதங்களில் தடவி 15-20 நிமிடம் நன்கு மசாஜ் செய்து படுத்தால், சீக்கிரம் குதிகால் வெடிப்பு போய்விடும்.