Home பெண்கள் அழகு குறிப்பு பனிக்காலத்தில் பாதங்களை பராமரிப்பது எப்படி?

பனிக்காலத்தில் பாதங்களை பராமரிப்பது எப்படி?

29

பனிக் காலத்தில் நேரடியாகப் பாதிக்கப்படும் உறுப்பு, சருமம். முகம், கழுத்து, கைகளில் ஏற்படக் கூடிய பாதிப்புகளைத் தவிர்க்க க்ரீம் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்துவோம். ஆனால், நாம் பராமரிக்கத் தவறும் உறுப்பு, கால்கள். இதனால், கால்களில் வெடிப்பு, சுருக்கங்கள், ஈரம், துர்நாற்றம் போன்ற பிரச்சனைகள் ஏற்படும். கால்களை ஆரோக்கியமாக வைத்திருக்க, சுத்தப்படுத்தும் மற்றும் பராமரிப்பு முறைகளைப் பார்ப்போம்.

வழிமுறை 1:

கால்களில் நகப்பூச்சு இருந்தால் அதை நீக்கிவிட்டு, அகலமான பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரில், 2 டீஸ்பூன் எப்சம் உப்பு (Epsom salt), ஒரு டேபிள்ஸ்பூன் எலுமிச்சைச் சாறு விட்டு, 20 நிமிடங்கள் வரை காலை வைத்திருக்க வேண்டும். பின்னர் மென்மையான துண்டால் கால்களை ஒத்தி எடுக்க வேண்டும்.

வழிமுறை 2:

கடையில் கிடைக்கும் பியுமிஸ் கல் (Pumice stone) அல்லது சாஃப்ட் பிரஷ் வாங்கி கால்களில் பிரஷ் செய்தால், இறந்த செல்கள் நீங்கிவிடும்.

வழிமுறை 3:

கால்களைச் சுத்தம் செய்த பிறகு, நல்ல தரமான மாய்ஸ்சரைசர் க்ரீமை கால்களில் தடவலாம். கால்களைச் சுத்தம் செய்ததுபோல, கைகளையும் சுத்தம் செய்யலாம்.

ஆரோக்கியமாகப் பராமரிக்க…

10 நாட்களுக்கு ஒரு முறையாவது நகங்களை வெட்டிப் பராமரிக்க வேண்டும். நகத்தை சதை தெரியும் வரை ஒட்ட வெட்டாமல், சிறிய அளவில் நகம் இருப்பதுபோல வெட்டலாம். முடிந்தவரை அவரவருக்கு எனப் பிரத்யேக நகவெட்டிகளை வைத்திருப்பது நல்லது.

பாதாம் எண்ணெய் அல்லது தேங்காய் எண்ணெயில் நனைத்த பஞ்சை, கால் இடுக்குகளில் 10 நிமிடங்கள் வரை வைக்கலாம். அதுபோல எண்ணெயை நகங்களிலும் தடவலாம்.

நீர் நிறைந்த பிளாஸ்டிக் பாட்டிலைக் கீழே வைத்து, கால்களை அதன் மேல் வைத்து உருட்டியபடி, ஐந்து நிமிடங்கள் பயிற்சி செய்தால் ரத்த ஓட்டம் சீராகும்.
கால்களில் கறுப்பாக அடையாளம் விழுகிற மாதிரியான செருப்புகள், ஷூக்களைத் தவிர்க்கலாம்.

தரமான நகப்பூச்சுகள், அசிடோன் ஃப்ரீ (Acetone free) ரிமூவர்களைப் பயன்படுத்துவது நல்லது.