Home குழந்தை நலம் காலம் மாறுகிறது: அம்மா வேலைக்கு செல்கிறார்.. அப்பா குழந்தைகளை கவனிக்கிறார்..

காலம் மாறுகிறது: அம்மா வேலைக்கு செல்கிறார்.. அப்பா குழந்தைகளை கவனிக்கிறார்..

31

இல்லத்தரசி என்பது எல்லோருக்கும் தெரிந்த, அர்த்தம் பொதிந்த வார்த்தை. இல்லத்தை இயக்குவது அந்த அரசிதான். வீட்டில் இருந்து குழந்தைகளை பாதுகாத்து பராமரிக்கவேண்டும் என்பது இல்லத்தரசியின் முக்கிய கடமையாக கருதப்பட்டது. இப்போது நிலைமை மாறிவிட்டது. இல்லத்தரசிகளும் வெளியே வேலைக்கு போய்விட்டார்கள். அதனால் குழந்தைகளை கவனிப்பது அவர்களது கடமை மட்டுமல்ல என்ற நிலை உருவானது. அதை தொடர்ந்து ‘இல்லத்தரசர்கள்’ தோன்றிவிட்டார்கள். அவர்கள் வீட்டில் இருந்து தங்கள் குழந்தைகளை கவனித்துக்கொள்கிறார்கள். மனைவி, வேலைக்கு சென்று சம்பாதிக்கிறார்.

இந்த மாற்றம் வளர்ந்த நாடுகளில் முன்பே ஏற்பட்டுவிட்டது. இந்தியா இப்போதுதான் மாறிக்கொண்டிருக்கிறது. பெண்களுக்கான வேலை என்று ஒதுக்கப்பட்டவற்றை இன்று ஆண்களும் செய்ய தயங்குவதில்லை. மனைவி நல்ல வேலையில் இருக்கும்போது அதை தக்கவைத்துக்கொண்டு, கணவர் வீட்டின் மற்ற பணிகளை செய்வதோடு குழந்தைகளையும் கவனித்துக்கொள்கிறார்.

இதற்கு ஒரு நல்ல உதாரணம் புகழ்பெற்ற எழுத்தாளர் சேதன் பகத். வங்கியில் பணிபுரிந்து வந்த அவர் பணியை விட்டுவிட்டு தன் இரட்டை குழந்தைகளை பராமரிக்க வீட்டோடு இருந்துவிட்டார். ஓய்வு நேரத்தில் கதைகள் எழுதத் தொடங்கினார். அவருடைய மனைவி உயர்ந்த பதவியில் இருப்பதால், அவரால் குடும்பத்தை கவனித்துக்கொள்ள முடியவில்லை. சூழ்நிலைக்கு ஏற்றபடி நல்ல இல்லத்தரசராக மாறிக்கொண்ட சேதன் பகத் தன்னை ஒரு சிறந்த ‘ஹவுஸ் ஹஸ்பண்ட்’ என்று கூறி மகிழ்கிறார். அதை எல்லோரிடமும் பெருமையாக சொல்கிறார். அந்த உண்மையை ஒத்துக்கொள்வதில் தனக்கு தாழ்வுமனப்பான்மை ஒன்றும் இல்லை என்றும் கூறுகிறார்.

தமிழ் நாட்டில் பிறந்து உலகப்புகழ் பெற்ற பெண்மணியாக திகழ்பவர், இந்திரா நூயி. இவர் தன் கணவரைப் பற்றி புகழ்கிறார். அதற்கு அவர் இல்லத்தரசராக இருப்பதும் ஒரு காரணம். அவருடைய கணவர் ராஜ்கிஷன் நூயி, தன் இரு பெண் குழந்தைகளையும் கவனித்துக்கொள்வதற்காக தான் பார்த்துவந்த முழுநேர வேலையை விட்டுவிட்டார். வீட்டிலேயே இருந்து குழந்தைகளையும் கவனித்துக்கொண்டு, ஓய்வு நேரத்தில் தனது வேலைகளையும் செய்துவருகிறார்.

இவர்கள் எல்லோரும் உயர்ந்த நிலையில் இருக்கும் மனிதர்கள். உண்மையில் சராசரி ஆண்கள்கூட மகிழ்ச்சியுடன் தங்கள் இல்லத்தரசர் பொறுப்பை ஏற்றுக்கொள்கிறார்கள். முன்பெல்லாம் குடும்பத்தை கவனிக்க பெண்கள்தான் வேலையை ராஜினாமா செய்வார்கள். இப்போது ‘மனைவி வேலையை தொடரட்டும். தான் வேலையை ராஜினாமா செய்துவிட்டு குடும்ப பொறுப்பை ஏற்றுக்கொள்கிறேன்’ என்று ஆண்கள் சொல்லத் தொடங்கிவிட்டார் கள்.

அதற்கு ஒரு உதாரணம் மும்பையை சேர்ந்த கேசவ் ஜோஷி. அவரும், அவரது மனைவி ராதேயும் வேலைக்கு சென்றுகொண்டிருந்தார்கள். குழந்தைகள் பிறந்து, வளர்ந்துகொண்டிருந்தன. ஒரு கட்டத்தில் குழந்தைகளை கவனித்துக்கொண்டு வேலைக்கும் செல்வது ராதேக்கு சிரமமானது. அதனால் இருவரில் ஒருவர் வேலையை விட்டால்தான் குடும்பத்தை சிறப்பாக நிர்வகிக்க முடியும் என்ற சூழல் ஏற்பட்டது.

அப்போது தான் எடுத்த அதிரடி முடிவு பற்றி கேசவ் ஜோஷி சொல் கிறார்:

“என் மனைவிக்கு அரசாங்க உத்தியோகம். என்னைவிட அதிக சம்பளம். அதிக வசதிகள். யோசித்தேன். கவுரவம் பார்க்காமல் எனது வேலையை விட்டுவிட்டேன். குழந்தைகளை பராமரித்தபடி வீட்டில் இருந்து குடும்பத்தையும் நிர்வகித்தேன். அது எனக்கு எந்தவித சிரமத்தையும் தரவில்லை. அப்போது நான் எடுத்த சரியான முடிவு மூலம் இப்போதும் என் குடும்பம் மகிழ்ச்சியாக இருக்கிறது. குழந்தைகள் வளர்ந்ததும், எனக்கு பொருத்தமான இன்னொரு வேலையை தேடிக்கொண்டேன். இது நானும், என் மனைவியும் சேர்ந்து எடுத்த முடிவு. இதில் யாருடைய தலையீட்டையும் நாங்கள் அனுமதிக்கவில்லை.

இப்படி ஒரு முடிவை நாங்கள் எடுத்ததற்காக, உறவினர்களின் கேலி, கிண்டல்களை சந்திக்கவேண்டி இருந்தது. மனைவி சம்பாத்தியத்தில் உட்கார்ந்து சாப்பிடுபவன் என்ற பெயரும் வந்தது. ‘நீ வீட்டில் எவ்வளவுதான் உழைத்தாலும் அது கணக்கில் வராது. என்றாவது ஒருநாள் உன் மனைவியும், குழந்தைகளும்கூட உன்னை தரம்தாழ்த்தி பேசும்’ என்று பயமுறுத்தினார்கள். ஆனால் இதுவரை அப்படி எதுவும் நடக்கவில்லை.

நான் வேலையை விட்டுவிட்டு வீட்டில் இருக்கப்போவதாக அறிவித்ததும் என் பெற்றோர் அதிர்ச்சியடைந்தார்கள். ‘இதற்காகவா உன்னை படிக்க வைத்தோம். சொல்லாமல் கொள்ளாமல் வேலையை விட்டுவிட்டாயே! இனிமேல் உனக்கு வீட்டில் மரியாதை கிடைக்காது. ஆயிரம்தான் இருந்தாலும் சம்பாதிக்கிறவங்க தான் வீட்ல பெரியவங்க. உன் மனைவி எஜமானர் போலவும் நீ வேலைக்காரன் போலவும் ஆகிவிடுவாய்’ என்று குதித்தார்கள்.

நான் அவர்கள் பேச்சை காதுகொடுத்து கேட்கவில்லை. அதனால் கொஞ்சம் காலம் வீட்டுப் பக்கமே என் பெற்றோர் வரவில்லை. ‘உன்னுடைய சுயமரியாதையை உனக்கு காப்பாற்றிக்கொள்ளத் தெரியவில்லை. அப்படிப்பட்ட வீட்டுக்கு வந்தால் எங்களுக்கும் மரியாதை இருக்காது’ என்று சொன்னார்கள். அவர்கள் சொன்னது எல்லாமே பொய்த்துப்போனது. இப்போது நான் மட்டுல்ல, எங்கள் குடும்பமே மற்ற குடும்பத்தைவிட மகிழ்ச்சியாக இருக்கிறது” என்கிறார், கேசவ்.

குழந்தைகளை அம்மாக்கள்தான் பராமரிக்கவேண்டும் என்பது காலங்காலமாக பின்பற்றப்படும் கருத்தாக இருக்கிறது. அதில் அவர்கள்தான் தனித்திறமை பெற்றவர்கள் என்றும் நம்பப்படுகிறது. அதனால், அதை அப்பாக்கள் செய்கிறார்கள் என்கிறபோது வித்தியாசமாக பார்க்கப்படுகிறது.

விபுல் சிங் ஒரு நிறுவனத்தில் உயர்அதிகாரியாக பணியாற்று கிறார். இவரது மனைவி குடும்பத்தை கவனிக்கும் குடும்பத்தலைவி மட்டும்தான். ஆனாலும் விபுல் சிங் வீட்டு வேலைகளில் மனைவிக்கு உதவியாக இருக்கிறார். அதை அவருடைய கடமையாகவும் கருதுகிறார்.

“என்னுடன் பிறந்தவர்களில் பெண்கள் யாரும் கிடையாது. அதனால் நான் சிறுவயதிலேயே என் அம்மாவுக்கு உதவியாக சமையல் வேலைகளை செய்வேன். அப்படியே எனக்கு வீட்டு வேலைகள் பழகிவிட்டது. எங்களுக்கு குழந்தை பிறந்த புதிதில், அதனை கவனித்துக்கொண்டு வீட்டு வேலைகளையும் செய்வது என் மனைவிக்கு கடினமாக இருந்தது. அதனால் நான் கைகொடுக்கத் தொடங்கினேன். இப்போதும் அதை செய்துகொண்டிருக்கிறேன். அதனால் எங்களுக்குள் பகிர்ந்துகொள்ளும்தன்மையும், புரிந்துகொள்ளும்தன்மையும் அதிகரித்திருக்கிறது. மகிழ்ச்சியாக வாழ்கிறோம்.

நமது குடும்பத்தை சிறப்பாக உருவாக்குவது நமது கடமை. தூரத்திலிருந்து பார்ப்பவர்களுக்கு நமது குடும்ப நிலவரம் புரியாது. சிலர் நம்மை விமர்சிப்பதையும், சிலர் பாராட்டுவதையும் நாம் கருத்தில் எடுத்துக்கொள்ளக்கூடாது. நமது வாழ்க்கைக்கு எது முக்கியமோ அதை மட்டுமே கவனத்தில்கொண்டு செயல்படவேண்டும்” என்று விளக்கம் தருகிறார், விபுல் சிங்.

எல்லா ஆண்களும் தங்கள் வேலைகளை விட்டுவிட்டு வீட்டை பராமரிக்க முன்வரவேண்டும் என்ற கட்டாயமில்லை. ஆனால் குடும்ப நலனுக்காக அப்படி ஒரு முடிவை எடுத்தே ஆகவேண்டும் என்ற நிலை வரும்போது, தயங்காமல் அதை தலை நிமிர்ந்தபடி ஏற்றுக்கொள்ளவேண்டும்.