Home ஆரோக்கியம் பதின்ம வயதுப் பிள்ளைகளுக்கு தனிப்பட்ட சுகாதாரத்தைப் பழக்க சில குறிப்புகள்

பதின்ம வயதுப் பிள்ளைகளுக்கு தனிப்பட்ட சுகாதாரத்தைப் பழக்க சில குறிப்புகள்

24

தனிப்பட்ட சுகாதாரம் என்பது எல்லோருக்குமே முக்கியம், பதின்ம வயதுப் பிள்ளைகளுக்கும் இது முக்கியம். சுகாதாரமின்மை அவர்களின் உடல்நலத்தை மட்டும் பாதிப்பதில்லை, பிறர் இவர்களைப் பார்க்கும்போது ஏளனமாக நினைத்து, ஒதுக்க வாய்ப்புள்ளது இதனால் அவர்களின் நம்பிக்கையும் சுய மதிப்பீடும் கூட பாழ்படலாம். பருவமடையும் சமயத்தில், பெரும்பாலான பிள்ளைகள் பெற்றோரிடம் உதவி கேட்கத் தயங்குவார்கள், அவர்களின் உடலிலும் உணர்வுகளிலும் பல மாற்றங்கள் நிகழும் இந்தப் பருவத்தில் நீங்களாகவே சென்று அவர்களுக்கு நல்ல பழக்கங்களையும், சுகாதாரத்தையும் கற்றுக்கொடுக்க வேண்டிய பொறுப்பு பெற்றோர்களையே சாரும்.

பதின்ம வயதுப் பிள்ளைகளுக்கு தனிப்பட்ட சுகாதாரப் பழக்கங்களைக் கற்றுக்கொடுக்க சில குறிப்புகள்:

கைகளைக் கழுவுவது: இது மிகவும் அடிப்படையான சுகாதாரப் பழக்கம். இதை இளம் பருவத்திலேயே பிள்ளைகள் மனதில் நன்கு பதிய வைக்க வேண்டும். சாப்பிடும் முன்பும், கழிவறையைப் பயன்படுத்திய பிறகும், மேலும் தேவையான போதெல்லாம் கைகளைக் கழுவும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். சோப்பு போட்டு கைகளைக் கழுவ வேண்டும்.

தினமும் குளிப்பது: தினமும் குளிப்பது என்பது, சுவாசிப்பது பல் துலக்குவது போன்று ஓர் அன்றாடச் செயலாகப் பதிந்துவிட வேண்டும்.பாக்டீரிய எதிர்ப்புப் பண்பு கொண்ட மென்மையான சோப்பு கொண்டு தினமும் குளித்துவிட்டு நாளைத் தொடங்குவது ஏன் அவசியம் என்று உங்கள் பிள்ளைகளுக்குப் புரியவைக்க வேண்டும். குளிக்கும்போது முகம், கைகள், அக்குள் பகுதிகள், பாதம், விரல் நகங்களுக்கு அடியில் உழல பகுதிகள், தொடை இடுக்குப் பகுதிகள், இனப்பெருக்க உறுப்புப் பகுதிகளில் நன்கு சுத்தம் செய்ய வேண்டும் என்று கற்றுக்கொடுக்க வேண்டும். தினமும் ஒரு முறை தான் குளிக்க வேண்டும் என்பதில்லை! வியர்க்கும்படியாக ஏதேனும் செய்தால், விளையாடிவிட்டு வந்தால், பயணம் செய்துவிட்டு வந்தால் கூட குளிக்கலாம். அந்தப் பழக்கத்தை அவர்கள் மனதில் புகுத்துங்கள்.

பதின்பருவத்தில் எண்ணெய் சுரப்பிகள் அதிகமாக வேலை செய்வதால், அவர்களின் சருமத்தில் எண்ணெய் அதிகம் உற்பத்தியாகும்.குறைந்தபட்சம் ஒருநாள் விட்டு ஒருநாள் தலை குளிப்பது நல்லது, இதனால் தலைமுடி எண்ணெய்ப்பிசுக்குடன் கானப்படுவதைத் தடுக்கலாம், முகப்பரு தோன்றுவதைத் தடுக்கலாம், பார்க்கவும் அழகாக இருக்கும்.

எப்போதும் சுத்தமான, துவைத்த ஆடைகளையே அணிந்திருக்கப் பழக்கப்படுத்துங்கள், உடுத்திய ஆடையையே துவைக்காமல் மீண்டும் உடுத்த அனுமதிக்க வேண்டாம். ஆடையும் சரி உள்ளாடைகளும் சரி, துவைக்காமல் மீண்டும் உடுத்தக் கூடாது.அவ்வப்போது டியோடரண்ட் பயன்படுத்தக் கூறுங்கள்.

வாயை சுத்தமாக வைத்துக்கொள்ளாவிட்டால் வாய் துர்நாற்றம், ஈறு வீக்கம், பற்சொத்தை போன்று என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் என்பதை அவர்களுக்கு விளக்கிக்கூறுங்கள்.பல் துலக்கும் மற்றும் ஃப்ளாஸ் செய்யும் சரியான முறையைக் கற்றுக்கொடுங்கள். அத்துடன் மவுத்வாஷ் பயன்படுத்தவும் கூறுங்கள். தினமும் இரண்டு முறை பல்துலக்கும் பழக்கத்தைக் கொண்டு வாருங்கள்.

முடி இருக்கும் பகுதியில் மட்டும் எண்ணெய் சுரப்பதில்லை, சருமத்திலும் எண்ணெய் சுரக்கும்.மென்மையான க்ளென்சர் அல்லது சோப்பு போட்டு அடிக்கடி முகம் கழுவ வேண்டியது கட்டாயம்.

அவ்வப்போது நகங்களை நறுக்கி, நகங்கள் நீண்டு வளராமல் வைத்திருக்க வேண்டும்.நகங்கள் உள்நோக்கி வளர்வதைத் தவிர்க்கும் வகையில் எப்படி ட்ரிம் செய்ய வேண்டும் என்று அவர்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டும்.

குழந்தைகள் பெரும்பாலும் பெற்றோரைப் பார்த்தே வளர்கின்றனர். பலவற்றை அவர்கள் பெற்றோரிடம் இருந்தே கற்றுக்கொள்கின்றனர். ஆகவே, நீங்கள் முதலில் சுத்தமான, சுகாதாரப் பழக்க வழக்கங்களைக் கொண்டு அவர்களுக்கு வாழ்நாள் முழுதும் ஒரு சிறந்த முன்னுதாரணமாகத் திகழுங்கள்!