உடல் கட்டுப்பாடு:இன்றைக்கு உடற்பயிற்சி செய்வது என்பது பலருக்கும் அத்தியவசியமான செயல்களில் ஒன்றாக மாறிவிட்டது. மாறிவரும் வாழ்க்கைச் சூழல், உணவுப்பழக்க வழக்கங்களுக்கு ஏற்ப உடல்பயிற்சி அத்தியாவசியமான ஒன்றாக மாறியிருக்கிறது. அதேநேரம், உடற்பயிற்சி குறித்த சந்தேகங்கள், உடற்பயிற்சி செய்வதால் கிடைக்கும் பலன்கள் குறித்த சந்தேகங்கள்,உடற்பயிற்சி வகைகள் மற்றும் செய்யும் முறைகள், கடைபிடிக்க வேண்டிய உணவுப்பழக்கங்கள் என பலவற்றிலும் சந்தேகங்கள் இருக்கின்றன. இவை குறித்து மருத்துவர்கள் அளிக்கும் விளக்கங்களை தற்போது பார்க்கலாம்.
மனிதர்களில் 80% பேருக்கு அவர்கள் என்ன உண்ணுகிறார்களோ அதற்கு ஏற்பத்தான் அவர்களின் தோற்றம் இருக்கிறது. இதைத்தீர்மானிக்கும் உணவு செரிமானம், பசி ஆகியவற்றை ’மெட்டாபாலிசம்’ என்று அழைக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் இந்த மெட்டாபாலிசம் ஒவ்வொரு விகிதத்தில் இருக்கும். சிலருக்கு வேகமாகவும், சிலருக்கும் மெதுவாகவும் இருக்கும். உண்ட உணவு கலோரிகள் சிலருக்கு விரைவில் கரைந்துவிடுவதும், சிலருக்கு அதிகம் சேகரமாகி உடல் எடை கூடுவதும் இதனால் தான்.
இந்த மெட்டாபாலிசம் செயலை கூட்டுவதற்கு சில வழிகள் உண்டு. தண்ணீர் அருந்தும் அளவை அதிகரிப்பது மெட்டாபாலிசம் அதிகரிக்க உதவும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். 500 மி.லி தண்ணீர் அதிகம் உட்கொள்வதன் மூலம் மெட்டாபாலிசத்தை 30% வரை அதிகரிக்க முடியும்.
குறிப்பாக, உடற்பயிற்சி செய்பவர்கள் ஒருநாளைக்கு 3 – 4 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். தண்ணீர் அருந்தாமல் அல்லது மிகக்குறைவாக மட்டுமே தண்ணீரை அருந்திவிட்டு உடற்பயிற்சி செய்வதனால் உடல் எடை குறையாது. மாறாக, உடல் எடை அதிகரிக்க வாய்ப்புள்ளது என உணவியல் மருத்துவர்கள் கூறுகின்றனர்.
அதேபோல், உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்பதற்காக சாப்பிடாமல் இருந்துவிட்டு உடற்பயிற்சி மேற்கொள்வதாலும் எந்தப்பயனும் இல்லை. சரியான இடைவெளியில், போதுமான உணவு எடுத்துக் கொள்வதுதான் நல்லது.
நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்தால் அதிக எடை குறையுமா?
நீண்ட நேரம் உடற்பயிற்சி செய்தால் அதிக உடல் எடை குறையும் சிலர் நம்பக்கூடும். ஆனால், அது உண்மையில்ல. அதிகபட்சம் 2 மணிநேரம் மட்டுமே உடற்பயிற்சி செய்யவேண்டும். ஒவ்வொரு உடற்பயிற்சியையும் முடித்துவிட்டு 2 – 3 நிமிடம் ஓய்வு எடுக்க வேண்டும்.
எந்தவகை உடற்பயிற்சியை அதிகம் செய்யவேண்டும்?
உடற்பயிற்சி செய்யும் போது உடல் எடையைக் குறைக்க வேண்டும் என்பதற்காக, உடல் எடையைக் குறைப்பதற்கான பயிற்சிகளை மட்டுமே அதிகம் செய்வார்கள். ஆனால், உடலை உறுதிசெய்வதற்கான பயிற்சிகள் மற்றும் எடை குறைப்பு பயிற்சிகள் இரண்டையும் சேர்த்துதான் செய்யவேண்டும்.
என்ன சாப்பிடலாம்?
உடற்பயிற்சி எடுத்துக் கொள்ளும் போது அதிக புரதச்சத்து மிக்க உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது. கார்போஹைரேட்டு உணவுகளை தவிர்க்க வேண்டும்.
ஓடலாமா?
உடல் எடையைக் குறைப்பதற்கு ஓடுவதை பலரும் வழிமுறையாகக் கொள்வார்கள். ஆனால், உடல் பருமன் மிக்கவர்கள் ஓடுவது அவர்களின் மூட்டுகளுக்கு பிரச்னைகளை ஏற்படுத்தலாம். தொடர் ஓட்டங்களில் ஈடுபடுவதற்கு முறையான பயிற்சி, உடலில் நீர்ச்சத்து பராமரிப்பு ஆகியவை முக்கியமானதாகும்.
எந்திரங்கள் அல்லாத உடல் பயிற்சி தான் நல்லதா?
உடற்பயிற்சியில் ஈடுபடுவோருக்கு எந்திரங்கள் அல்லது உடற்பயிற்சி உபகரணங்களின் பயன்பாடு இல்லாமல் வெறுமனே உடலை மட்டுமே பயன்படுத்தி உடற்பயிற்சி செய்வதே நல்லது என்கிற எண்ணம் இருக்கலாம். ஆனால், உபகரணங்கள் இல்லாமல் உடலை வளைத்து நெளித்தும், தண்டால் உள்ளிட்ட உடற்பயிற்சிகளாலுமே அதிக எடை குறைகிறது என்பது நிரூபிக்கப்படவில்லை.
உணவை நிறுத்திவிட்டு, உற்சாக உணவுகளை மட்டுமே கொள்ளலாமா?
உடற்பயிற்சி செய்யும் போது விரைவான பலன்களை பெறுவதற்காக வழக்கமான உணவை நிறுத்திவிட்டு, புரதப்பொடி, புரதச்சத்து மாவுகள் உட்கொள்வதை சிலர் வழக்கமாக வைத்துள்ளனர். ஆனால், இத்தகைய புரதச்சத்து மாவுகளை உணவோடு சேர்த்து இரண்டாம் உணவாக உட்கொள்ள வேண்டுமே தவிர இதையே பிரதான உணவாகக் கொள்ளக்கூடாது.
காய்கறிகள், பழங்கள், காய்ந்த பழங்கள் ஆகியவற்றை எடுத்துக் கொள்வது எடையைக் குறைக்கவும், நல்ல பலன்களைப் பெறவும் உதவும்.
கர்ப்பவதிகள் உடற்பயிற்சி செய்யலாமா?
கர்ப்பமாக இருக்கும் பெண்கள் உடற்பயிற்சி செய்யக்கூடாது என்று பொதுவான நம்பிக்கை உண்டு. ஆனால், கர்ப்பமாக இருக்கும் பெண்கள் உடற்பயிற்சி செய்வதில் எந்தத்தடையும் இல்லை. உடற்பயிற்சி அவர்களின் உடலுக்கு மிகவும் நல்லது. ஆனால், பளுமிக்க உபகரணங்களை உடற்பயிற்சி செய்வதோ, அதிக உடல் உழைப்பைக் கேட்கும் உடல் பயிற்சியிலோ ஈடுபடுவது நல்லதல்ல.
தோப்புக்கரணமும், வயிற்றுப் பயிற்சியும் உதவுமா?
உட்கார்ந்து எழுந்து செய்யும் தோப்புக்கரண பயிற்சியோ அல்லது குதிகால் வரை தலையைக் கொண்டு செல்லும் பயிற்சியாலோ உடலின் எல்லா பாகங்களும் பலன் பெறுவதில்லை. இவற்றால் உடை எடையும் சீக்கிரம் குறைவதில்லை.