Home சூடான செய்திகள் ஓரு பெண்ணிடம் நாம் எப்படி பழக வேண்டும்,,,,?

ஓரு பெண்ணிடம் நாம் எப்படி பழக வேண்டும்,,,,?

28

தன்னில் விழுந்த மழைத்துளியைக் கொண்டு உயிர்களை உருவாக்குபவள் பூமித்தாய். அதேபோல், தன்னில் சேர்ந்த உயிர்த்துளியைக் கொண்டு மனித இனத்தை விருத்தி செய்பவள் பெண்.

அதே பெண்தான் தோழியாய், காதலியாய், மனைவியாய், தாயாய்… என்று பல அவதாரங்கள் எடுக்கிறாள். ஒட்டுமொத்தமாக இவள் பெண் என்ற வட்டத்திற்குள் வந்தாலும், அவளது ஒவ்வொரு நிலையிலும் உயரியச் சிறப்பைப் பெறுகிறாள்.
அப்படிப்பட்ட பெண்ணிடம் நாம் எப்படி பழக வேண்டும்?
பாய் ப்ரண்ட், ஹேர்ள் ப்ரண்ட் என்றெல்லாம் இன்று பரிணாமம் பெற்றிருக்கும் நட்பு ஒரு காயாத பூவாகும். பள்ளிப்பருவத்தில் நம்முடன் படித்தவர், இடையில் காலத்தின் மாற்றத்தால் எங்கோ, எப்படியோ வாழும் சூழ்நிலையில், திடீரென்று ஒரு நாள் சந்திக்கும் வாய்ப்பு ஏற்படும்போது அங்கே கிடைக்கும் ஆனந்த பரவசம் இருக்கிறதே; அதை வர்ணிக்கத்தான் வார்த்தைகள் உடனே கிடைக்குமா?

இதே நட்பில் சுயநலத்துடன் ஒரு வழிப்பாதையில் பயணிக்கும்போது, அந்த பெண் காதலியாகி விடுகிறாள் அவனுக்கு! அந்த ஆண் காதலனாகி விடுகிறான் அவளுக்கு!

“நான் செடியில் பூத்துக் குலுங்கும் ரோஜாவை தேடித்தான் வந்தேன். அந்த ரோஜாவே என்னெதிரே நடந்து வரும் போது, ரோஜாப்பூவை மட்டும் பறிக்கவா? அல்லது அந்த செடிக்கே நான் சொந்தக்காரனாகி விடவா? என்று குழப்பம் வந்துவிட்டது. அதனால் உன் மீது எனக்கு காதலும் வந்துவிட்டது” என்று காதலன் கவிதையாய் உருகும்போது அந்த காதல் இன்னும் கொஞ்சம் ஆழமாக வேர்விட்டு விடுகிறது.
அவர்களது காதலுக்கு அவர்களே ஒரு அங்கீகாரம் கொடுக்கும்போது, அங்கே காதல் ஆலமரமாய், ஆழமாய் வேரூன்றி விடுகிறது.

இருவரும் தங்களுக்குள் அங்கீகாரம் கொடுத்தபிறகு அந்த காதல் ரெயில் வேகத்தில் பயணிக்கிறது. அவர்களது காதல் பயணத்தில்
பெற்றோர்கள் சிக்னல்களாக வருகிறார்கள். அவர்கள் கிரீன் சிக்னல் கொடுத்தால் அந்த காதல் ரெயில் தொடர்ந்து சென்று கொண்டிருக்கும். ரெட் சிக்னல் கிடைத்தால் அவர்களது பயணத்தில் திடீர் பிரேக் விழுந்து விடுகிறது. கிரீன் சிக்னலுக்காக போராடி வேண்டியிருக்கிறது.

பல்வேறு முயற்சிகளுக்கு பின்பு அவர்களுக்கு கிரீன் சிக்னல் கிடைக்கலாம். அல்லது, எவ்வளவுதான் முயன்றும் ரெட் சிக்னலே தொடரலாம். இருந்தாலும், அவர்களுக்குள் காதல் வாழ்கிறது. அது தொடர்ந்து வாழ வழி தேடுகிறார்கள்.

போராட்டம் என்றால் ஒரு முடிவு நிச்சயம் இருக்கும்தானே? அவர்களது காதலுக்கு அங்கீகாரம் கிடைக்கிறது; அல்லது, இன்னொரு வாழ்க்கைக்குள் வலுக்கட்டாயமாக தள்ளப்படுகிறார்கள்.
அங்கே வாழ்க்கையின் இன்னொரு அத்தியாயம் தொடங்குகிறது. காதலில் வெற்றிப்பெற்றுவிட்டால் அங்கே காதலனுக்கு காதலி மனைவியாகிறாள். இல்லையென்றால், புதுப்பெண் ஒருத்தி மனைவியாகிறாள்.

இதுபோல்தான் பெண்ணுக்கும்…!
திருமணத்திற்கு பின்பு அவளது பொறுப்பு இன்னும் அதிகமாகி விடுகிறது. தாரத்திற்குப் பின்னர் தாய் என்ற நிலையை அடைகிறாள். அதன்பிறகும் அவளது பிறவிப்பயன் இன்னும் நீண்டு கொண்டே போகிறது, அவளது சேவை இந்த மனிதகுலத்திற்கு கண்டிப்பாக தேவை என்பதால்!

எடுக்கும் ஒரு பிறவியிலேயே தோழியாய், காதலியாய், மனைவியாய், தாயாய் திகழும் அந்த பெண்ணிடம் எப்படி பழக வேண்டும்?

முதலில் தோழி…
மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்பார்கள். இதேபோல், நல்ல தோழி அமைவதும் இறைவன் கொடுத்த வரம் என்று சொல்லலாம்.
ஒன்றும் தெரியாத முட்டாளையும்கூட முதல்வனாக்கிவிடும் பவர் தோழிக்கு உண்டு.
அப்படிப்பட்ட தோழியிடம் நாம் எப்படி பழகலாம்?
* நமது சமுதாயச்சூழலில் பெண்ணுக்கு ஆணைப் போன்ற முழு சுதந்திரம் இன்னும் வழங்கப்படவில்லை. தோழியாக பழக வேண்டும் என்றால்கூட ஒரு பெண் சமுதாய கட்டுப்பாடுகளைப் பற்றியெல்லாம் யோசிக்க வேண்டியிருக்கிறது. வாலிப பிரச்சினை என்று ஒன்று வரும்போது மிகுந்த பாதிப்புக்கு ஆளாகுபவள் பெண்ணே! அதனால், அவளது பெண்மைக்கு இழுக்கு ஏற்படாத வகையில் பழக வேண்டும்.
* நட்பு காதலாக மாறலாம். ஆனால், காதல் நட்பு ஆக மாறுவது பெரும்பாலும் முடியாத செயல்தான். அதனால், தோழியை நீங்கள் காதலிக்கும்பட்சத்தில், அவளும் உங்களை விரும்புகிறாளா என்பதை அறிந்து, அதன்பின் மேற்கொண்டு அதுபற்றி பேசவும்.
* உங்களுக்கும், தோழிக்கும் திருமணம் ஆன நிலையில், தோழியின் கணவர் அனுமதிக்கும்பட்சத்தில் மட்டுமே உங்கள் நட்பை தொடரலாம். அதுவும், ஒரு குடும்ப நண்பராக!
* திருமணத்திற்கு பிறகு, நேரில் பார்த்தால் மட்டும் நட்பை புதுப்பித்துக் கொள்வோம். மற்ற சூழ்நிலைகளில் வேண்டாம் என்று உங்கள் தோழி கூறினால், அதை பெருந்தன்மையோடு ஏற்று செயல்படுத்துங்கள். எங்கள் நட்பை எப்படி கொச்சைப்படுத்தலாம்? என்று கேட்டு, உங்கள் தோழி வாழ்க்கையை பாழாக்கிவிடாதீர்கள்.
* கடைசியாக ஒன்று, உங்கள் தோழியையும் உங்கள் சகோதரிபோல் பாவித்து பழகுங்கள். அப்போது, உங்கள் நட்புக்கு நிச்சயம் களங்கம் வராது என்று சர்டிபிகேட் கொடுக்கலாம்.
அடுத்து காதலி…
———————-
இன்று காதலிக்காதவர்களே கிடையாது. ஆணும், பெண்ணும் கண்களால் மோதிக்கொண்டாலே அங்கே யாராவது ஒருவரிடத்தில் காதல் தீ பற்றிக்கொண்டு விடுகிறது.
இன்னொரு மறுக்க முடியாத உண்மை; டைம் பாஸாக வேண்டும் என்பதற்காகவும் சிலர் காதலிக்கிறார்கள். இருவருக்கும் திருமணம் ஆகும்வரை பேசுவோம், பழகுவோம், ஊர் சுற்றுவோம். திருமணம் ஆகிவிட்டால் நீ யாரோ, நான் யாரோ என்று போய்விடுவோம் என்று தங்களுக்குள் அக்ரிமென்டே போட்டுக்கொள்கிறார்கள். சென்னை போன்ற மெட்ரோ சிட்டிகளின் லேட்டஸ்ட் கலாச்சாரம் இந்த வகை காதல்(?!).
உங்கள் காதலி உண்மையான காதலியாக இருந்தால், அவளிடம் எப்படி பழகலாம்?
* அவள் உங்களின் வருங்கால மனைவி என்பது உறுதியாக தெரிந்தால் மாத்திரமே காதலியுங்கள். இல்லையென்றால், பழகியவை எல்லாம் கனவென்று நினைத்து ஒதுங்கிவிடுங்கள். இதில் தப்பே இல்லை. காதலிக்கிறேன் என்று சொல்லிவிட்டு, கடைசியில் கழற்றிவிட்டு ஒரு பெண்ணின் சாபத்தை சம்பாதித்துக் கொள்ளாதீர்கள்.
* உங்கள் காதல் சைவக் காதலாக இருக்கட்டும். தவறான எண்ணத்தில் கை வைத்து விடாதீர்கள். நாளை, நீங்கள் கணவன்-மனைவி ஆகும்போது, “ச்ச்ச்சீசீ! அப்படியா நடந்து கொண்டோம்?” என்று அருவெறுப்பாக யோசிக்க வேண்டியது இருக்கும்.
* காதலியுடன் மனம் விட்டு பேசுங்கள். எதிர்காலம் பற்றி திட்டமிடுங்கள். முறையாக, இருவர் வீட்டிலும் காதலுக்கு ஒப்புதல் வாங்கிக்கொள்ளுங்கள். காலாகாலத்தில் திருமணம் செய்துகொள்ளுங்கள்.
* மொத்தத்தில் உங்களுக்காக அவள் என்றும், அவளுக்காகவே நீங்கள் என்றும் எப்போதும் நினைத்திருங்கள்.
அடுத்ததாக மனைவி…
————————–—–
பிறந்த சொந்தங்களை எல்லாம் உதறித் தள்ளிவிட்டு நம்மோடு, நமக்காக வாழ வருபவள். அவளை மகாலெட்சுமி என்றே போற்றுங்கள். அதில் தவறே இல்லை.
உங்களில் ஒருத்தி, உங்களுக்காக ஒருத்தியாக இருக்கும் அவளிடம் எப்படி பழகுகிறோம் என்பது முக்கியமல்ல. எல்லா விஷயங்களிலும் எந்த அளவுக்கு அவளை சந்தோஷமாக வைத்திருக்கிறோம் என்பதுதான் முக்கியம்.
அதை புரிந்துகொண்டு நீங்கள் செயல்பட்டால் அவள் உங்களுக்கு நல்ல மனைவிதான். நீங்களும் அவளுக்கு நல்ல கணவன் தான்….!