செய்திதாள்கள், தொலைகாட்சி, இணையதளம் இப்படி எல்லா இடத்திலும் நம்மை பதைபதைக்கு செய்யும் ஒரு செய்தி ஒன்று உண்டென்றால் அது ” 3 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபர் கைது…??!”
ஏன் இந்த மாதிரியான வக்கிரம், அவன் மனிதனே இல்லை, அவன் ஒரு மிருகம், அவனை உயிரோட விட கூடாது, உடனே தூக்கில் போடுங்கள் என்று மக்கள் உணர்ச்சிகரமான வார்த்தைகளை வெளிபடுத்துவார்கள். சில நேரம் அதிகபட்சமாக அத்தகையவர்களுக்காக வாதாட வக்கீல்கள் எவரும் முன் வருவதும் இல்லை…மீறி வந்தாலும் பிற வக்கீல்கள் அதை விரும்புவதும் இல்லை, அனுமதிப்பதில்லை. ஆனால் எல்லாம் அந்த செய்தியில் சூடு இருக்கும் வரை தான்…பின்னர் மக்களுக்கு வேறு ஒரு செய்தி வந்துவிடும்.
பல கொடுமைகள் தெரிந்தும், தெரியாமல் நடந்து கொண்டிருந்தாலும் நம் மக்களின் விழிப்புணர்வு இந்த அளவில் தான் இருக்கிறது.
மக்களை பொறுத்த வரை குழந்தைகள் மீதான பாலியல் ஈர்ப்புள்ள மனிதர்களைச் சமுதாயத்தில் நடமாட விடுவது ஆபத்து என்பதே. ஒருமுறை இதில் ஈடுபடுபவர்கள் மீண்டும் மீண்டும் அதுபோன்ற வன்முறைகளில் ஈடுபடுகிறார்கள் என்பதுதான் உண்மை. சிறு குழந்தைகளை வைத்திருக்கும் பெற்றோர்கள் மிக கவனமாக இருக்கவேண்டிய சூழ்நிலை இது.
சமீபத்தில் கூட சென்னையில் ஒரு வீட்டு ஓனரின் மகன் தங்கள் வீட்டில் குடி இருக்கும் இரண்டு சிறு வயது குழந்தைகளிடம் இந்த மாதிரியான செயலில் ஈடுபட்டு இருக்கிறான். அவர்களிருவரும் அண்ணன், தங்கை ஆவர். அவர்களின் தாய் காவல் துறையிடம் புகார் செய்ததின் பெயரில் இப்போது சிறையில். அவனுக்காக யாரும் வாதாடக்கூடாது என்று வக்கீல்கள் முடிவு செய்து இருக்கிறார்கள்.
கொஞ்ச நாள் முன்பு கூட கோவையில் ஒரு சம்பவம் நடந்ததை யாரும் மறந்திருக்க முடியாது…அதில் சம்பந்த பட்ட ஒருவனை போலீஸ் என் கவுண்டர் செய்தார்கள் என்பதையும் அனைவரும் அறிவர்.
மனிதர்களாக பிறந்த இவர்கள் ஏன் இப்படி மனம் மாறி முரண் பட்டு நடக்கிறார்கள் என்பதை பற்றிய ஆய்வுகளை படிக்கும் போது மிகவும் வியப்பாக இருக்கிறது.
உளவியல் மற்றும் மருத்துவம் என்ன சொல்கிறது ?
* இந்த தன்மை பற்றி உளவியல் அறிஞர்கள் பலவாறு விவரிக்கிறார்கள் . இது பீடோப்பீலியா என்னும் ஒரு வகை உளவியல் நோய். இந்த எண்ணங்கள் ஒருவருக்கு வயது வந்தவுடனே வந்து விடுமாம். பெரியவர்களுடன் அத்தகைய செயல்களில் ஈடு பட முடியாதவர்கள் அல்லது அந்த வாய்ப்பு கிடைக்காதவர்கள் இப்படி குழந்தைகளை பயன் படுத்திகொள்கிறார்கள்.
* மேலும் இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்களில் ஒரு சிலர் சிறு வயதில் இதே போன்ற ஒரு துன்புறுத்தலுக்கு ஆளாகி இருக்ககூடும் என்கிறது ஆய்வு.
* மரபியல் காரணங்களும் இருக்கலாம் !! ஒரு குடும்பத்தில் இத்தகைய மனநிலை கொண்டவர்கள் இருந்திருந்தார்கள் என்றால் அடுத்து வரும் வாரிசுகளிடம் இத்தகைய எண்ணம் வருவதிற்கு வாய்ப்பு அதிக அளவில் இருப்பதாக விஞ்ஞானிகள் கருத்துக்கள் சொல்லி இருந்தாலும், அத்தகைய மரபணு இன்று வரை கண்டுபிடிக்க படவில்லை என்பது நமக்கு ஒரு ஆறுதல்.
* இவர்களை வெறும் குற்றவாளியாக மட்டும் பார்க்காமல் உளவியல் குறைபாடுள்ள நோயாளிகளாகவும் பார்க்க வேண்டும் என்கிறார்கள் உளவியல் ஆய்வாளர்கள்.
ஆனால் யதார்த்தம் என்னவென்றால், இத்தகையவர்களை உளவியல் ரீதியாகவும் , மருந்து சிகிச்சைகளின் மூலமாகவும் குணபடுத்தலாம் என்றாலுமே அதற்கு மிகுந்த சிரமப்படவேண்டும், தவிரவும் இத்தகைய இச்சைகளை கட்டுபடுத்த இவர்கள் வாழ்க்கை முழுவதும் மிக கஷ்டப்பட்டு முயலவேண்டும் என்பதே…!?
யோசியுங்கள் மக்களே !
ஆய்வுகள் எதையும் சொல்லிவிட்டு போகட்டும், ஆனால் பெரியவர்களாகிய நாம் நம்மிடையே சாதாரணமாக நடமாடி கொண்டிருக்கும் இத்தகைய ஆபத்தானவர்களிடம் இருந்து நம் குழந்தைகளை எப்படி காப்பாற்ற போகிறோம் என்பதே இந்த பதிவில் நான் உங்களிடம் எழுப்பும் ஒரு கேள்வி.
இத்தகையவர்களுக்கு குழந்தைகள் எதிர்க்க மாட்டார்கள் என்பதே ஒரு முக்கிய காரணம். குழந்தைகள் பெரும்பாலும் தங்களது உறவினர்கள், பக்கத்து வீட்டினர், பள்ளிக்கு அழைத்து செல்லும் நபர்கள் போன்றவர்களாலேயே மிகுந்த பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.
பாதிக்கப்படும் அனைத்து குழந்தைகளுமே தங்களுக்கு நடந்த கொடுமையை சொல்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. அப்படி ஒரு வேளை சொன்னால் பெற்றோர்கள் தங்களைத்தான் அடிப்பார்கள் அல்லது திட்டுவார்கள் என்ற அச்சத்தின் காரணமாக மறைத்து விடுவார்கள்.
ஆண் குழந்தைகள் !
சிலர் நினைக்கலாம் நமக்கு தான் ஆண் குழந்தைகள் ஆச்சே என்று ! பெண் குழந்தைகளுக்கு தான் இந்த பாதிப்பு அதிகம் நேரும் என்றாலுமே ஆண் குழந்தைகளும் இந்த கொடுமைக்கு தப்புவதில்லை. கயவர்கள் அந்த நேரத்தில் யாரை எப்படினாலும் பயன் படுத்தி கொள்வார்கள். அவர்களது தேவை தற்காலிகமாக தங்களது எண்ணம் ஈடேரனும் அவ்வளவே.
எதிர்காலத்தில் ?!
இதனால் குழந்தைகள் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் அடைய போகும் பாதிப்புகள் மிக அதிகம். பாதிக்க பட்ட குழந்தைகள் ஒருவேளை இதில் இருந்து தப்பித்தாலும் எதிர்காலத்தில் குடும்ப வாழ்வில் ஈடுபடும் போது மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகிறார்கள். பல விவாகரத்து பிரச்சனைகளுக்கு பின்னணியில் இந்த பாதிப்பு காரணமாக இருப்பது சம்பந்த பட்ட ஆண், பெண்ணுக்கே தெரிவதில்லை என்பதுதான் இதில் பெரும் சோகம்.
நம்மால் என்ன செய்ய முடியும் ??
எல்லோர் வீட்டிலும் குழந்தைகள் இருக்கிறார்கள் என்கிற போது இதை படிக்கும் ஒவ்வொருத்தரும் இனிமேலாவது தங்கள் குழந்தைகளின் படிப்பிற்கு காட்டும் அக்கறையை கொஞ்சம் உங்கள் குழந்தைகளின் மேல் காட்டுவது மிக அவசியம்.
* சிறு குழந்தைகளுக்கு குட் டச், பேட் டச் பற்றி சொல்லி கொடுங்கள்.
* அவர்கள் சொல்லும் எந்த சின்ன விசயத்தையும் காது கொடுத்து பொறுமையாக கேளுங்கள். எந்த குறை சொன்னாலும் அதற்கு திட்டாமல் உற்சாகபடுத்தி முழுமையாக சொல்ல வையுங்கள். முக்கியமாக குழந்தைகள் பொய் சொல்ல மாட்டார்கள் என்பதை நாம் மறக்க கூடாது.
* ஆசிரியர்களை பற்றியும் கேளுங்கள்…(எந்த புற்றில் எந்த பாம்போ…?!)
* சக மாணவர்கள் எப்படி நடந்து கொள்கிறார்கள் என்பதையும் கேட்டு அறிந்துகொள்ள வேண்டும்.
* பிறர் முத்தமிடுவதை அனுமதிக்க கூடாது என்று சொல்லுங்கள். (நெருங்கிய உறவினர்களாக இருந்தாலுமே !)
கட்டாயம் சொல்லி கொடுங்கள்
டீன் ஏஜ் பிள்ளைகளிடம் நட்பாய் பழகி அவர்களுடன் பேசி அவர்களின் நடவடிக்கைகளை அறிந்து கொள்ளுங்கள். சிறிதளவாவது உடல் அமைப்பை பற்றியும், ஆண் பெண் உறவை பற்றியும் டீன் ஏஜ் பிள்ளைகளுக்கு அவர்களின் பெற்றோர்கள் சொல்லி கொடுப்பது காலத்தின் கட்டாயம். மறவாதீர் !!
இத்தகைய இழி செயலை நாம் கண்டிக்க வேண்டும். இதனை பற்றிய ஒரு விழிப்புணர்வை மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும்…இத்தகைய நபர்களிடம் இருந்து குழந்தைகளை எப்படி பாதுகாத்து கொள்வது என்பதை பற்றி ஒரு விவாதம் கூட பதிவுலகில் நடத்தலாம்.