Home இரகசியகேள்வி-பதில் மாதவிடாய் முன்கூட்டியே நின்றுவிடுதல் என்றால் என்ன?

மாதவிடாய் முன்கூட்டியே நின்றுவிடுதல் என்றால் என்ன?

39

பெண்களுக்கு, பொதுவாக 40களின் முடிவிலோ 50களின் தொடக்கத்திலோ மாதவிடாய் நிற்கும். சமீபத்தில் இந்தியாவில் இந்தச் சூழ்நிலை மாறிவிட்டது. பெரும்பாலான பெண்களுக்கு மாதவிடாய் முன்கூட்டியே நின்றுவிடுகிறது. போதிய ஊட்டச்சத்து இல்லாமை, குடும்பச் சுமையையும் அலுவலகச் சுமையையும் மாறிமாறிச் சுமக்கும் பெண்களின் அதிக மன அழுத்தம் போன்றவை இதற்குக் காரணமாக இருக்கலாம். இது போன்ற காரணங்களால் பெண்கள் மனதளவிலும் உணர்வளவிலும் அதிகம் பாதிக்கப்பட்டு சீரற்ற மாதவிடாய் சுழற்சி ஏற்படுகிறது. இந்த ஹார்மோன் சமநிலையின்மையின் விளைவாக மாதவிடாய் முன்கூட்டியே நின்றுவிடுகிறது.

இப்போது மாதவிடாய் முன்கூட்டியே நிற்பதற்கான காரணங்கள், அதன் விளைவுகள் பற்றிப் புரிந்துகொள்வோம்:

காரணங்கள்

இதற்கான காரணங்களில் சில:

a) குரோமோசோம் குறைபாடுகள்: குரோமோசோமில் உள்ள குறைபாடுகளின் (உதாரணமாக டர்னர் சின்ட்ரோம், அதாவது பிறவியிலேயே ஒரு பெண்ணிற்கு X குரோமோசோம் பகுதியளவோ, முற்றிலுமாகவோ இல்லாமல் போவது, இதனால் சினைப்பை செயலிழக்கலாம்.) காரணமாகவும் மாதவிடாய் முன்கூட்டியே நிற்கலாம்.சினைப்பை செலிழப்பதன் விளைவாக, மாதவிடாய் முன்கூட்டியே நிற்கலாம்.

b) மரபியல்: ஒருவரின் குடும்பத்தில் யாருக்கேனும் மாதவிடாய் முன்கூட்டியே நிற்கும் பிரச்சனை இருந்திருந்தால் அவருக்கும் வர அதிக வாய்ப்புள்ளது.

c) ஆட்டோ இம்மியூன் (உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் உடலில் இருக்கும் பொருள்களைத் தாக்கும் நிலை) நோய்கள்: தைராய்டு நோய்கள், வகை 1 நீரிழிவுநோய், குரோன் நோய், கொலியாக் நோய் (உடற்குழி நோய்), நாள்பட்ட கேண்டிடியாசிஸ் நோய்த்தொற்று (த்ரஷ்) போன்றவையும் மாதவிடாய் முன்கூட்டியே நிற்க வழிவகுக்கலாம்.

d) நோய்த்தொற்றுகள்: தாளம்மை எனப்படும் அம்மை நோயும் மாதவிடாய் முன்கூட்டியே நிற்கக் காரணமாகலாம் என்று கருதப்படுகிறது.

e) வளர்சிதைமாற்றக் கோளாறுகள்: கிளாக்டோசேமியா, அரோமேட்டேஸ் குறைபாடு (ஆண்ட்ரோஜென் ஹார்மோனை ஈஸ்ட்ரோஜென் ஹார்மோனாக மாற்றுவதில் சிரமம்) போன்றவை இதிலடங்கும்.

f) மருத்துவ சிகிச்சைகள்: புற்றுநோய் சம்பந்தப்பட்ட சிகிச்சைகள் (கீமோதெரப்பி, கதிர்வீச்சு சிகிச்சை (இடுப்புப் பகுதியில் செய்யப்படும்), அறுவை சிகிச்சை (இரண்டு சினைப்பைகளையும் அகற்றும் அறுவை சிகிச்சை) மற்றும் ஹிஸ்டெரெக்டமி (கருப்பை அகற்றம்) போன்றவையும் மாதவிடாய் முன்கூட்டியே நிற்கக் காரணமாகலாம்.

g) இடியோபதிக்: அதாவது காரணங்கள் இன்னதென்று தெரியாமல் ஏற்படுவது.

ஆபத்துக் காரணிகள்

மாதவிடாய் முன்கூட்டியே நிற்பதற்கு வழிவகுக்க சாத்தியமுள்ள ஆபத்துக் காரணிகளில் சில:

குடும்பத்தில் யாருக்கேனும் வந்திருந்தால் (மாதவிடாய் முன்கூட்டியே நிற்கும் வாய்ப்பு 12 மடங்கு அதிகமாகும்)
புகைபிடித்தல்
கால் கை வலிப்பு

அறிகுறிகளும் அடையாளங்களும்

மாதவிடாய் முன்கூட்டியே நிற்பதற்கான அறிகுறிகளும் அடையாளங்களும் மாதவிடாய் வழக்கமாக நிற்கும்போது ஏற்படுபவை போன்றவையே ஆகும்.

சீரற்ற மாதவிடாய் சுழற்சி
வாய்வழி எடுத்துக்கொள்ளும் கருத்தடை மாத்திரையை நிறுத்திய பிறகு மாதவிடாய் வராமல் போவது
கர்ப்பம் தரிக்க முடியாமை
எரிச்சல்/மனக் கவலை/வயிற்று உப்புசம் இருப்பது போன்ற உணர்வுகள் மார்பகங்களில் வலி போன்றவை
பாலியல் வேட்கை குறைதல்
நோய் கண்டறிதல்

பின்வரும் சில பிரச்சனைகளை வைத்து ஒருவருக்கு மாதவிடாய் முன்கூட்டியே நின்றுவிட்டது என்பது உறுதிப்படுத்தப்படுகிறது:

ஒரு பெண்ணுக்கு, தொடர்ந்து 12 மாதங்கள் மாதவிடாய் வராமல் இருந்து, திடீர் உடற்சூடு (ஹாட் ஃபிளாஷ்), சீரற்ற மாதவிடாய், தூக்கத்தில் தொந்தரவுகள், பிறப்புறுப்பில் வறட்சி போன்ற அறிகுறிகளும் இருந்தால் அவருக்கு மாதவிடாய் நின்றுவிட்டது என்று உறுதிப்படுத்தப்படுகிறது. இருப்பினும், ஃபோலிக்கில் ஸ்டிமுலேட்டிங் ஹார்மோனுக்கான இரத்தப் பரிசோதனைகளையும் (FSH இன் அளவு 40 mIU/mL க்கு அதிகமாக இருந்தால் மாதவிடாய் நின்றுவிட்டதைக் குறிக்கும்.) நோயை உறுதிப்படுத்துவதற்காக கர்ப்பப் பரிசோதனையும் செய்துகொள்ள வேண்டியிருக்கும்.

விளைவுகள்

மாதவிடாய் முன்கூட்டியே நிற்கும்போது ஏற்படும் விளைவுகளானவை, மாதவிடாய் இயல்பாக நிற்கும்போது ஏற்படுபவற்றைப் போன்றவையே ஆகும். அவற்றில் சில விளைவுகள் பின்வருமாறு:

ஆஸ்டியோபோரோசிஸ்: மாதவிடாய் முன்கூட்டியே நிற்பதால் எலும்புகளின் ஆரோக்கியம் குறைந்து, முழங்கை, இடுப்பு, தண்டுவட எலும்பு போன்றவற்றில் எலும்பு முறிய வாய்ப்பு அதிகமாகும்.

அறிவாற்றல் இழப்பு (டிமென்ஷியா): அல்சைமர் நோய் (அறிவாற்றலும் நினைவாற்றலும் குறைதல்) ஏற்படும் அபாயம் அதிகமாக இருக்கலாம்.

வளர்சிதைமாற்றக் கோளாறு: நீரிழிவுநோய் மற்றும் கரோனரி இதய நோய் (CAD) உருவாகும் வாய்ப்பும் அதிகமுள்ளது.

பக்கவாதம்: செரிபரோவாஸ்குலர் விபத்துக்களும் (பக்கவாதம்) ஏற்படுகின்றன.

புற்றுநோய்: பெண்களுக்கு பெருங்குடல் மற்றும் கருப்பைப் புற்றுநோய் ஏற்படும் ஆபத்து அதிகமாக இருக்கும்.

பாலியல் செயலிழப்பு: பாலியல் வேட்கை குறையலாம்.

உணர்ச்சிகள்: இளம்பெண்களுக்கு தங்கள் அடையாளம் பற்றிய உணர்வில் மாற்றம் ஏற்பட்டு, தெம்பில்லாதது போன்றும் தன் வயதைவிட அதிக முதுமையாக இருப்பது போன்றும் தோன்றலாம்.சில சமயம், தங்கள் பெண்மையே போய்விட்டது போன்றும் அவர்களுக்குத் தோன்றலாம்.

சமாளித்தல்

மாதவிடாய் முன்கூட்டியே நிற்கும் பிரச்சனைக்கு பின்வரும் சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன:

ஹார்மோன் மாற்று சிகிச்சை (HRT) –  குறைந்த வயதிலேயே இதய நோய்கள் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் ஏற்படும் அபாயத்தைக் குறைக்க இந்தச் சிகிச்சை அளிக்கப்படுகிறது.ஆனால், மார்பகப் புற்றுநோய் இருப்பவர்களுக்கு HRT சிகிச்சை நல்லதல்ல.

வாழ்க்கை முறையில் மாற்றங்கள் – ஆரோக்கியமான உணவு (அதிக நார்ச்சத்தும் குறைந்த கொழுப்பும் மாவுச்சத்தும் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ளுதல், மூலிகைகள், தாதுக்கள், வைட்டமின்கள், காய்கறிகள், பழங்களை உணவில் சேர்த்துக்கொள்ளுதல்) தொடர்ந்து உடற்பயிற்சி செய்தல், மன அழுத்தத்தைக் குறைக்கும் செயல்களில் (இசை, நடனம், யோகா முதலியன) ஈடுபடுதல், தவறான பழக்கங்களை (புகையிலை, மது போன்றவை) நிறுத்துதல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டால், இந்தக் காலகட்டத்தில் ஏற்படும் மாற்றங்களைச் சமாளிக்க உதவியாக இருக்கும்.தகுந்த ஆலோசனை பெறுவதன் மூலம் எதிர்மறையான எண்ணங்களைக் குறைக்கலாம், நம்பிக்கையை அதிகரிக்கலாம்.