Home பாலியல் பிரிந்து வாழும் தம்பதிகளின் தம்பதிய உறவு நிலைகள்

பிரிந்து வாழும் தம்பதிகளின் தம்பதிய உறவு நிலைகள்

170

பாலியல் தகவல்:தற்காலத்தில் தொலைதூர உறவாடல்கள் சகஜமாகிவிட்டன. தற்காலத்தில், வேலை காரணமாகவும் பிற காரணங்களுக்காகவும் பெரும்பாலும் தம்பதியர் பிரிந்தே இருக்க நேரிடுகிறது. இதனால் ஒன்றாக இருந்து நிஜமான உறவனுபவங்களைப் பெறுவது கடினமாகிறது. எந்த உறவும் ஆரோக்கியமாக இருக்க, நெருக்கம் மிக அவசியம், அதற்கு அதிக நேரம் அவர்கள் ஒன்றாக செலவழிக்க வேண்டியதும் அவசியம். தொலைதூர உறவு என்பது சவாலான ஒன்று, அதில் உடல்ரீதியான அல்லது உணர்வு ரீதியான நெருக்கத்தை அடைவது கடினம்

தொழில்நுட்ப வளர்ச்சியால் நமக்கிடையே உள்ள தொலைவு குறைந்துள்ளது என்பது உண்மைதான், ஆனாலும் தொலைதூர உறவுகளை சாத்தியப்படுத்தும் அளவிற்கு அவை போதுமானதாக இருக்கின்றனவா? தொலைவு உங்கள் ஆசையை அதிகரிக்கலாம், உறவுக்கான ஏக்கத்தை அதிகரிக்கலாம், ஆனால் திருப்தியடைய முடியாத நிலையால் உங்கள் உறவில் வெற்றிடம் உண்டாகலாம். அடிக்கடி ஒன்றாக நேரம் செலவழிக்கும்போது உங்கள் இணையரைப் பற்றி நீங்கள் அதிகம் புரிந்துகொள்ள அதிக வாய்ப்பு கிடைக்கும். அவருக்கு என்ன பிடிக்கும், என்ன பிடிக்காது என்று தெரியவரும். இது உங்கள் இருவரிடையிலான நெருக்கத்தை அதிகரிக்க உதவும். அதே போல், நமது இணையருடன் நாம் நிஜத்தில் ஒன்றாக வாழும்போது, ஒருவரது தேவைகளை ஒருவர் புரிந்துகொள்ளவும் நெருக்கத்தை அதிகரிக்கவும் எளிதாக இருக்கும்.

தொலைதூர உறவில் இருக்கும் இணையர்கள், ஒருவருக்கொருவர் ஒன்றாக இருக்க குறைந்த நேரமே கிடைக்கும், இதனால் அவர்களுக்கு இடையிலான நெருக்கத்தை அதிகரிக்கவும் அவர்களுக்கு குறைவான வாய்ப்பே கிடைக்கும். உறவை சிறப்பாக வைத்துக்கொள்வது எளிதாக இருக்காது, ஆனாலும் சாத்தியமே அல்ல என்று கூற முடியாது. வழக்கத்தை விட சற்று அதிக பொறுமையும் நேரமும் முயற்சியும் தேவை, அவ்வளவே.

தகவல்தொடர்பு தான் பிரதான வழி: ஒருவருக்கொருவர் கடிதம் எழுத வேண்டும். ஆம், கடிதம்தான்! தொழில்நுட்பம் பெருமளவு வளர்ந்துள்ள இந்தக் காலகட்டத்தில் அந்தக் காலத்தைப் போல கடிதம் எழுதுவது எப்படி உதவும் என்று உங்களுக்குத் தோன்றலாம். ஆனால் கடிதத்தில் உரையாடும்போது, அது இன்னும் ஒரு நெருக்க உணர்வைக் கொடுக்கிறது. கடிதத்தில் உங்கள் உணர்வு அப்படியே ஆழமாகப் பிரதிபலிக்கும், நீங்கள் கடிதத்திற்கு என்று நேரம் ஒதுக்குவதும், அதற்காக முயற்சி எடுப்பதும், உங்களுக்கும் உங்கள் இணையருக்கும் இடையிலுள்ள உறவின் முக்கியத்துவத்தை இன்னும் ஆழமாகச் சொல்லும். உங்கள் ஆழமான ஆசைகளை கடிதத்தில் கூறுங்கள், இதனால் உறவு குறித்த உங்கள் மகிழ்ச்சியைப் பற்றிய எதிர்பார்ப்பு அதிகமாகும்.

ஒருவருக்கொருவர் தொலைபேசியில் பேசுங்கள்: உரை செய்தி மூலம் உரையாடுங்கள். உங்கள் உறவில் இன்னும் ஆழமாகச் செல்லவும், உங்கள் ஆழமான எண்ணங்களையும் உங்கள் இணையரிடம் உங்களுக்குள்ள ஆசைகளையும் எந்தத் தடையும் இன்றி வெளிப்படுத்த வேண்டிய நேரம் இது. அது நீங்கள் இருவரும் ஒருவரது மனதை ஒருவர் இன்னும் ஆழமாகப் புரிந்துகொள்ளும் சூழலை ஏற்படுத்தும், அடுத்த முறை நீங்கள் ஒன்றாக இருக்கும்போது உங்கள் அனுபவத்தை இன்னும் மகிழ்ச்சிகரமாக்கும்.
உங்கள் கற்பனையைத் தூண்டும் பாலியல் கிளர்ச்சி அடையச்செய்யும் படம் அல்லது வீடியோவை அனுப்பலாம். இது உங்கள் நெருக்கமான தருணங்களைப் பற்றி நீங்கள் நினைக்கிறீர்கள் என்பதை உங்கள் இணையருக்கு உணர்த்தும். அவரைப் பற்றி நீங்கள் எப்போதும் நினைத்துக்கொண்டு இருக்கிறீர்கள் என்று அவருக்கு உணர்த்தும். அடுத்த முறை நேரில் சந்தித்து இருவரும் ஒன்றாக இருக்கும்போது, நீங்கள் என்னென்ன செய்ய விரும்புகிறீர்கள் என்பதையும் நீங்கள் உரை செய்தியில் கூறலாம். உத்வேகத்தை குறைக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

மாதத்திற்கு குறைந்தது இரண்டு முறையேனும் நேரில் சந்தித்து ஒன்றாக நேரம் செலவழிக்க முயற்சி செய்யுங்கள். இருவரும் தொலைவில் பிரிந்து இருந்தால் இருவரும் ஒன்றாக வெளியில் சாப்பிடச் சென்று உங்கள் பொழுதை மகிழ்ச்சியாகக் கழிக்கக் கூடாது என்றில்லை. தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் இது எல்லாமே சாத்தியமாகியுள்ளது. உங்கள் இருவருக்கும் பொருத்தமான நாளையும் நேரத்தையும் தேர்வு செய்துகொள்ளுங்கள், வேறு யாரும் உங்களை தொந்தரவு செய்யாதபடி பார்த்துக்கொள்ளுங்கள். Skype போன்ற ஆன்லைன் அரட்டை பயன்பாடுகளைப் பயன்படுத்தலாம். உங்கள் இணையர் உண்மையில் உங்களுடன் இருக்கும்போது எப்படிப்பட்ட சூழலை விரும்புவீர்களோ, அதே போன்ற சூழலை உண்டாக்கிக் கொள்ளுங்கள் அதே மனநிலையைக் கொண்டு வாருங்கள். இதுபோன்ற காதல் ததும்பும் இரவு விருந்துகள் உங்கள் இருவருக்கும் இடையிலான நெருக்கத்தை இன்னும் அதிகரிக்கும்.
மெய்நிகர் நெருக்கத்தையும் தவற விட வேண்டாம். காதலைப் போலவே, உங்கள் பாலியல் வாழ்க்கையையும் நீங்கள் மெய்நிகர் சூழலில் நிஜமாக்கி ஒருவருக்கொருவர் சந்தோஷம் அடையலாம். முதலில் அது வினோதமாகத் தெரியலாம், நிஜத்தில் கிடைக்கும் திருப்தி அதில் கிடைக்காதது போல் தோன்றலாம், எனினும் அது மிகுந்த இன்பத்தைக் கொடுக்கும், குறிப்பாக நீங்கள் இருவரும் நிஜத்தில் வெகு தூரம் பிரிந்திருக்கும்போது அது மிகவும் உதவும். புதிய ஆடைகள், உள்ளாடைகள் என வாங்கிக் கொடுத்து உங்கள் இணையருக்கு இன்ப அதிர்ச்சி கொடுங்கள். இன்று தொழில்நுட்பம் அபாரமான வளர்ச்சியடைந்துள்ளது. செக்ஸ் டாய்ஸ், வீடியோ சாட் போன்ற பல்வேறு வசதிகள் உள்ளன. ஒரே சமயத்தில் நீங்களும் உங்கள் இணையரும் ஒருவருக்கொருவரை சந்தோஷப்படுத்த அவை உதவக்கூடும். எப்போதும் ஒரே மாதிரி வாழ்க்கை வேண்டாம், உங்கள் பாலியல் வாழ்க்கையில் புதியவற்றை முயற்சி செய்யுங்கள். நீங்கள் இருவரும் ஒருவரது ஆழத்தை ஒருவர் ஆராய்ந்து அறிந்துகொள்ள வேண்டிய தருணம் இது.

விடுமுறை கிடைக்கும்போது ஒருவருக்கொருவர்ர் சந்தித்துக்கொள்ள திட்டமிடுங்கள். அப்படி சந்திக்கும் போது அந்த சந்திப்பு அபாரமாக இருக்கும் விதத்தில் ஏதேனும் புதுமை செய்யுங்கள்! தொலைதூர உறவுகளில், உங்கள் இணையர் உங்கள் வழக்கமான விஷயங்களைப் பற்றி நன்கு அறிந்திருக்கும் வகையில் நீங்கள் நடந்துகொள்ள வேண்டும். உங்கள் காதலை உயிர்ப்புடன் வைத்திருக்க வேண்டும், உண்மையில் அவருடன் சேர்ந்திருக்கும் நேரத்தையும், அந்த நெருக்கத்தையும் அதிகரிக்கவும் வேண்டும். ஆகவே, மேலே குறிப்பிட்ட எல்லா விஷயங்களையும் மனதில் வைத்து அந்த அற்புதத் தருணத்திற்கு திட்டமிடுங்கள். அந்தத் தருணம் இருவருக்கும் மிகுந்த திருப்தியைக் கொடுப்பதாகவும், என்றும் நினைவில் இருந்து நீங்காததாகவும் இருக்க வேண்டும்.
தொலைதூர உறவுகளை நன்றாக வைத்துக்கொள்ள இருவருக்கும் வழக்கமான உறவை விட அதிக பிரயத்தனம் தேவை. உங்களுக்கு மனதில் ஆசை தோன்றாத போதும்கூட அவருக்காக நீங்கள் நேரத்தை ஒதுக்க வேண்டும். சுயநலமின்றி ஒருவரது தேவைகளை ஒருவர் புரிந்துகொள்வது தான் முக்கியம். நீங்கள் தனித்தனியாக இருக்கிறீர்கள் என்பதற்காக பாலியல் அனுபவம் இல்லாமலே இருக்க வேண்டும் என்பதில்லை. தொழில்நுட்பம் உங்களை ஒருவருக்கொருவர் அருகில் கொண்டு சேர்க்கும் வேலையை எளிதாக்கிவிடும்! சூழ்நிலை காரணமாக நீங்கள் வேறு வழியின்றி தனித்தனியாக இருக்கலாம், ஆனால் தகுந்த பிரயத்தனமும், தொழில்நுட்பத்தை சரியாக உபயோகிப்பதும் உங்கள் நெருக்கத்தை அதிகரிக்கும். அதை சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தொலைதூர உறவை நன்றாக வைத்துக்கொள்வது எளிதல்ல என்பது உண்மைதான், ஆனால் ஒருவருக்கொருவர் உண்மையான அன்பும், அக்கறையும் இருந்தால் காதலும் பாலியல் உறவும் சிறப்பாக இருக்கும்படி பார்த்துக்கொள்வதும் சாத்தியம்தான்!