செரிமானக் கோளாறுகள் பற்றி பேசும் முன் செரிமானம் பற்றி அறிந்து கொள்வது அவசியமாகிறது. உடலின் முக்கிய உறுப்புக்களில் ஒன்றான வயிற்றில் தான் உணவு தங்கி செரிமானம் நடக்கிறது. செரிமானத்தினால் தான் உடல் சக்தி பெறுகிறது.
வயிறு உணவை சேமிக்கும் இடம் மட்டுமல்லாமல் உணவு ஊடுருவிச் செல்லத்தக்க வகையில் உருவாக்கும் சுரப்பிகள் சுரக்கும் இடமாகவும் இருக்கிறது. வயிற்றின் உட்புறம் மெல்லிய ஜவ்வுப்படலம் மூடியிருக்கும். அதில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் மற்றும் பல நொதிகளும் சுரக்கின்றன.
ரெனின், பெப்சின் என்னும் இரு சுரப்புகள் உணவை சிறுசிறு துகள்களாக ஆக்க உதவிகின்றன. குடல் சுவரில் வில்லாக்கள் எனும் நுண்ணிய அமைப்புகள் நீண்ட வடிவில் உணவை உறிஞ்சத்தக்கவகையில் உள்ளன.
பைல் சுரப்பு, கணைய சுரப்பு, குடல் சுரப்பு மற்றும் பேக்டிரியா எனப்படும் நுண்ணுயிர்கள் உணவை இன்னும் சிறு துகள்களாக்கி வில்லா உறிஞ்சத்தக்க வகையில் உருவாக்குகின்றன. குடலில் வேறு வேறு பகுதிகளில் வேறு வேறு பொருட்கள் செரிக்கப்பட்டு உறிஞ்சப்படுகின்றன. கடைசியாக பெருங்குடலில் தண்ணீர் உறிஞ்சப்பட்ட பின்பு மீதியிருக்கும் கழிவு மலக்குடல் வழியே வெளியே போகின்றது.
இது தான் நவீன மருத்துவம் சொல்லும் “செரிமானம்” ஆனால் ஆயுர்வேதம் சிக்கலான இந்தச் செரிமானத்தில் அறிவியல் ரீதியாக 13 விதமான அக்னிகளை அங்கீகரிக்கிறது. அதில் மிகவும் முக்கியத்துவமாது “ஜடராக்னி” அதனுடன் 7 தாது அக்னிகளையும், 5 பூதாக்னியும் சேர்கின்றன.
ஆயுர்வேதம், ஜடராக்னியில் குறைபாடு அல்லது ஜடராக்னி சமநிலை மாறுவது ஆகியவையே பெரும்பாலான நோய்களுக்கும் காரணம் என்று சொல்கிறது. அக்னி குறைபாட்டால் பசியின்மை, வாந்தி, வயிற்றுப் போக்கு ஆகியன உண்டாகின்றன.
பாசக பித்தம், சமான வாயு, ஈரப்பதம், க்லேதக கபம், காலம் மற்றும் இந்த ஐந்தின் சரியான ஒருங்கிணைப்பு ஆகிய ஆறு காரணிகளும் செரிமானத்துக்கு உதவுகின்றன. சமான வாயு உணவை வாயிலிருந்து அக்னி வரை தள்ளிக்கொண்டு வருகிறது. செரிமானம் முடிந்து ‘உணவின் சாரம்’ உடலால் உறிஞ்சப்படுகிறது. கழிவுப் பொருட்களான வியர்வை, சிறுநீர், மலம் ஆகியன உடலை விட்டு வெளியேற்றப்படுகின்றன. கிலேத கபம் உணவை மென்மையாக்கி செரிமானத்துக்கு உதவுகிறது. இனி செரிமானக்குறையிட்டால் வரும் நோய்களைப்பற்றி காண்போம்.
பசியின்மை
உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பசியின்மை தோன்றலாம். இந்நிலையில் உணவின் சுவை தோன்றாது. ஆயுர்வேதம் 5 வகையாக, பசியின்மைக்கான அறிகுறிகளை வகைப்படுத்துகிறது.
* முதல் வகையில் வாயில் துவர்ப்புச்சுவை இருக்கும். வாயின் மேல் பகுதியில் வலி இருக்கும்.
* இரண்டாம் வகையில் அழுகிய வாடை சுவை இருக்கும்.
* மூன்றாம் வகையில் உப்பு, இனிப்புச்சுவை இருக்கும். உமிழ்நீர் துர்நாற்றத்துடன் இருக்கும், பிசுபிசுப்பாக இருக்கும்.
* நான்காம் வகையில் ஒருவித அமைதியின்மை இருக்கும்.
சிகிச்சை முறை
மருந்து ஜீரணம் ஆகத்தக்கதாகவும், பசியை உண்டாக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும்.
* புதிய இளம் இஞ்சியை கல் உப்புடன் சேர்த்து 5 நெல்மணியுடன் தினமும் இருமுறை சாப்பிடுவதற்கு முன் கொடுக்க வேண்டும்.
* ஒரு ட்யூஸ்பூன் இஞ்சியுடனும் 1 1/2 டியூஸ்பூன் தேன் கலந்து தினமும் 2 முறை உணவுக்கு முன் 7 நாட்களுக்கு கொடுக்க வேண்டும்.
* அஷ்டசூரணம் உணவுக்கு முன் தருவது செரிமானத்தை தூண்டும்.
* ஹிங்க்வசாதி சூரணம் தரலாம்.
மலச்சிக்கல்
உடலுழைப்பு இல்லாத வாழ்க்கை முறையாலும் அதிக உணவு, அடிக்கடி சாப்பிடுவதாலும் மலச்சிக்கல் வருகிறது. மலங்கழிக்க வேணடும் என்ற உணர்வு இருந்தாலும் மலங்கழிக்க முடியாது. இதனால் உடல்கனமாதல், தலைவலி, பசியின்மை, எந்த வேலையிலும் அக்கறையின்மை ஆகியன நேரும். உணவு வெகு நேரம் குடலில் தங்கி இருந்தால் வாயு உருவாகும். அழுகிய நிலை உருவாகும். வயிறு வீங்கி வலி வரும்.
சிகிச்சை முறை
உணவுப்பழக்கத்தை முறைப்படுத்திக் கொள்ள வேண்டும். குறிப்பிட்ட இடைவெயில் சாப்பிட வேண்டும். அதிக மசலாப் பொருட்கள், காரம், கொழுப்புச்சத்துள்ள பொருட்கள், பாலிஷ் செய்யப்பட்ட அரிசி, தானியம் இவற்றை தவிர்க்க வேண்டும். இலகுவான உணவுகளை உண்பது நல்லது. சிறிதளவு பால், பழச்சாறு, வேக வைத்த காய்கறிகள், கீரை இவற்றை சேர்த்துக் கொள்வது நல்லது. சுடுநீர் அடிக்கடி குடிக்க வேண்டும்.
* சிறு குழந்தை மலச்சிக்கலால் பாதிக்கப் பட்டால் வெற்றிலைக் காம்பில் விளக்கெண் ணெய் தடவி மலக்குடலுக்குள் நுழைக்கவும். ஆமணக்கு இலைகளை சூடாக்கி மூட்டையாக கட்டி வயிற்றில் ஒத்தடம் கொடுக்கலாம்.
* இரட்டி மதுர வேரை வெல்லம், தண்ணீர் சேர்த்து ஒரு வாரத்துக்கு கொடுக்கலாம்.
* சூடான பால் 1 டம்ளர் எடுத்து, 1 தேக் கரண்டி விளக்கெண்ணெய் கலந்து (நன்றாக ஆற்றினால் நுரை போல ஆகிவிடும்) 15 நாட்களுக்கு கொடுக்கலாம் (இரவில்) மலம் இளகிப்போனால் நிறுத்தி விடலாம். அல்லது அளவை குறைக்கலாம்.
* தினமும் நடைப்பயிற்சி மேற்கொள்வது நல்லது.
வயிறு பொருமல்
வயிறு, குடல் பகுதியில் உதர வாயு சேர்வ தால் அழற்சி உண்டாகும். இது செரிமானக் குறைபாட்டால் நேர்கிறது. வாய் வழியாகவோ, மலக்குடல் வழியாகவோ வாயுவை வெளி யேற்றாவிட்டால் மார்பு பகுதியில் வலியை உண்டாக்கும். இதய நோய் என்று சந்தேகம் வரும். மூச்சு விடுதல் சிரமம் ஆகும்.
சிகிச்சை
* 2 பங்கு ஓமம், 1 பங்கு சோம்பு, சர்க்கரை யுடன் கலந்து ஒரு வேளைக்கு 10&20 கிராம் என்ற அளவில் தினமும் இருவேளை கொடுக்கலாம்.
* சமஅளவு சுக்குப்பொடி, குறுமிளகுப்பொடி, புதினா, ஓமவல்லி இவற்றைக் கலந்து ஒரு வேளைக்கு 10&30 கிராம் வரை காலை, மாலை இருவேளையும் 7 நாட்களுக்குக் கொடுக்க வேண்டும்.
* வெறும் வயிற்றில் ஹிங் வசாதி சூரணம் 2 தேக்கரண்டி அளவு தினமும் ஒரு முறை கொடுக்கலாம்.
* மோர் சாதம் சாப்பிடலாம். கவலை கோபம், மனஅழுத்தம், அவசரம் ஆகிய உணர்வுகளை தவிர்க்க வேண்டும்.
அஜீரணம் டிஸ்பெப்சியா
அஜீரணத்தால் வருவது வயிற்று வலி, ஏப்பம், வயிறு பொருமல், வாயில் துர்நாற்றம், நெஞ்செரிச்சல் ஆகிய அறிகுறிகள் இருக்கும். இது செரிமானத்துக்கான அக்னியின் குறைபாடு மற்றும் செரிமா னத்துக்கு தேவையான நொதிகள் குறைபாட்டால் வருவது. அதிகம் உண்பது, நினைத்த நேரத்தில் உண்பது, சுகாதார குறைவான உணவுகள் ஆகியன இதற்கு காரணம். இதனை ‘அக்னிமந்தயா’ என்று ஆயுர்வேதத்தில் சொல்வர். 3 தோஷங்களும் அதனதன் சமநிலையிலிருந்து மாறுவதே காரணம் என்பர். வாத சமநிலை மாறினால் வலியும், பித்த சமநிலை மாறினால் நெஞ்செரிச்சலும் கபசமநிலை மாறினால், வாந்தி, குமட்டல் ஆகியன அல்லது இரண்டும் வரலாம்.
சிகிச்சை முறை, உணவு முறை:
* முறையான நேரத்துக்கு, முறையான உணவை உண்ண வேண்டும்.
* புதிய, சூடான உணவையே நல்ல சூழ்நிலையில் உண்ண வேண்டும்.
* முதலில் உண்ண உணவு செரிமானம் ஆனபின்பே சாப்பிட வேண்டும்.
* அவசர அவசரமாகவோ, கோபம், பட படப்பு ஆகிய மன உணர்வுகளுடனோ சாப்பிடக்கூடாது.
* உணவு மிகவும்
* உணவை மென்று விழுங்க வேண்டும்.
* தோவு சமநிலை உணவினாலும் பாதிக் கப்படலாம். ஆகவே உணவு விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
* அந்தந்த, பருவநிலைக்கேற்ற உணவாக இருக்க வேண்டும்.
* குளிர்காலத்தில் புளித்த, உவர்ப்பான, கொழுப்புச்சத்துள்ள உணவுகளை உண்ண லாம். நீரில் வாழும் உயிரினங்களை உண்ண லாம்.
* வெயில் காலத்தில் அதிக திரவ உணவு களை உண்ண வேண்டும், இனிப்பு, பழச்சாறு, பால், அரிசி, பிற பறவைகள், விலங்குகளை உண்ணலாம்.
* 20 கிராம் இஞ்சியை, கல்லுப்புடன் சேர்ந்து, தினமும் இருவேளை உணவுக்குப்பின் சாப்பிடலாம்.
* ஹிங்குவசாலி சூரணம் இதற்கு நல்ல மருந்து.
* மோர் துவர்ப்பு, புளிப்பு இரண்டும் கலந்தது, சுலபமாகச் செரிமானம் ஆகக்கூடியது, செரிமானத்தைத் தூண்டக்கூடியது, வாதம், கபம் இரண்டையும் சமப்படுத்தும்.
* சீரகப்பொடி 2 கிராம் அளவு எடுக்கலாம்.
* கடுக்காய் சூரணம் எடுக்கலாம்.
வயிற்றுப்போக்கு:
மலம் மிகவும் இளகிப் போவது! தண்ணீர்போல இருக்கும் திரவத்துடன் செரிமானம் ஆன, ஆகாத உணவு, சிறிய, பெரிய அளவில் வெளியேறும். செரிமானத்துக்கான அக்னியின் நிலையில் குறைபாடு இருப்பதே காரணம். உணவு அதிகக் கொழுப்புச்சத்து மிகுந்ததாகவோ, நச்சுப்பொருட்கள் கலந்தோ, டைபாய்டு, காலரா, குடல் டிபி போன்ற நோய்களின் கிருமிகள் கலந்தோ இருப்பதுதான் வயிற்றுப் போக்குக்குக் காரணம்.
ஆயுர்வேதப்படி, வாத, பித்த, கபதோஷங்கள் தத்தம் சமநிலையில் இருந்து மாறுவதாலோ, அல்லது மூன்றும் மாறுவதாலோ அல்லது திடீரெனத் தோன்றும் பயம் அல்லது அன்புக்குரியவர்களின் மரணம் அல்லது அமித்சாரா எனும் ‘ஆமதோஷ நிலை’ செரிக்காத உணவால் உண்ணடாவதாலோ வயிற்றுப்போக்கு உண்டாகிறது.