பெண்கள் அழகு:உடல் ஆரோக்கியத்திற்கு உறுதுணைபுரியும் தயிரை கூந்தல் ஆரோக்கியத்திற்கும் பயன்படுத்தலாம். பொடுகு, தலைமுடி பொலிவின்மை போன்ற பிரச்சினைகளுக்கும் தயிர் மூலம் தீர்வு காணலாம். தலைமுடிக்கு பங்கம் விளைவிக்கும் அனைத்துவிதமான நோய் தொற்றுகளில் இருந்தும் நிவாரணம் அளிக்கிறது. பளபளப்பான, மென்மையான கூந்தலை பெறுவதற்கும் தயிர் முக்கிய பங்கு வகிக்கிறது.
பொடுகு பிரச்சினையால் அவதிப்படு பவர்கள் தயிருடன், வெந்தயம், எலுமிச்சை சாறு சேர்த்து நிவாரணம் பெறலாம். ஒரு கப் தயிருடன் 5 டீஸ்பூன் வெந்தய தூள் மற்றும் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து குழைத்துக்கொள்ள வேண்டும். அதனை தலைமுடியில் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். அரை மணி நேரம் கழித்து மென்மையான ஷாம்பு பயன்படுத்தி கூந்தலை அலச வேண்டும். தொடர்ந்து வாரம் இரண்டு முறை இவ்வாறு செய்து வந்தால் விரைவில் பொடுகு தொல்லை நீங்கிவிடும்.
பெண்கள் சுற்றுச்சூழல் மாசுவில் இருந்து கூந்தலை பாதுகாக்க வேண்டியது அவசியம். அதற்கு தயிருடன் செம்பருத்தி இதழ், வேப்பிலை, ஆரஞ்சு ஜூஸ் சேர்த்து பயன்படுத்த வேண்டும். முதலில் 20 செம்பருத்தி இதழ்களையும், 10 வேப்பிலைகளையும் மிக்சியில் அரைத்துக்கொள்ள வேண்டும். அதனுடன் ஒரு கப் தயிர், ஒரு டேபிள் ஸ்பூன் ஆரஞ்சு ஜூஸ் சேர்த்து பசை போல் குழைத்துக்கொள்ள வேண்டும் அதனை கூந்தலில் தடவி மசாஜ் செய்து அரை மணி நேரம் ஊற விட வேண்டும். பின்னர் ஷாம்பு பயன்படுத்தி கூந்தலை அலசி வந்தால் கூந்தல் பளபளப்பாக மின்னும்.
கூந்தல் வளர்ச்சிக்கும், முடி உதிர்வை தடுப்பதற்கும் தயிரை பயன்படுத்தலாம். ஒரு கப் தயிருடன் 2 டீஸ்பூன் ஆலிவ் ஆயில், 3 டீஸ்பூன் கற்றாழை ஜெல் சேர்த்து குழைத்துக்கொள்ள வேண்டும். புதினா மற்றும் கருவேப்பிலையை நன்றாக அரைத்து தலா 2 டீஸ்பூன் சேர்க்க வேண்டும். இரண்டு முட்டைகளின் வெள்ளைக் கருவையும் சேர்த்து நன்றாக பிசைந்து மயிர்க்கால்கள் வரை அழுத்தமாக தேய்த்து விட வேண்டும். அரைமணி நேரம் கழித்து ஷாம்பு கொண்டு கூந்தலை கழுவ வேண்டும்.