இன்றைய அவசர உலகத்தில் பலருக்கும் உடற்பயிற்சி செய்வதற்கு நேரம் கிடைப்பதில்லை. அதனால் 10 நிமிடம் அல்லது 15 நிமிடம் மட்டும் உடற்பயிற்சி செய்தால் போதும் என்று செய்து வருகிறார்கள். ஆனால், இது போதாது என்கிறது சமீபத்திய ஆய்வு.
பொதுவாக நமது உடல் நாம் சாப்பிடும் உணவில் இருந்து சத்துக்களை எடுத்துக்கொண்டு மீதமுள்ளவற்றை கழிவாக வெளியேற்றுகிறது. இதற்கு செரிமானம் மற்றும் கழிவு மண்டலங்களின் இயக்கம் சரியாக இருக்கவேண்டும். இந்த இயக்கங்கள் முழுமையாக நடைபெற 400-க்கும் மேற்பட்ட தசைகள் வேலை செய்கின்றன. இவை தொடர்ந்து செயல்பட நாம் ஒரு நாளில் குறைந்தபட்சம் 30 நிமிடமாவது உடற்பயிற்சி செய்வது அவசியம்.
அப்படி நாம் செய்யும் பயிற்சி இந்த 400 தசைகளை நீட்டி, மடக்கும் விதமாக இருக்க வேண்டும். இதற்கு 5 அல்லது 10 நிமிடம் மட்டும் பயிற்சி செய்வது போதாது. குறைந்தது 30 நிமிடங்களாவது பயிற்சி செய்ய வேண்டும். இதில் முதல் 10 நிமிட பயிற்சி உடலின் தசைகளை தளர்வாக மாற்ற உதவுகிறது. அடுத்த 10 நிமிட பயிற்சி உடலின் அனைத்து பாகங்களுக்கும் நல்ல ரத்த ஓட்டம் பாய உதவுகிறது. அதற்கடுத்து செய்யும் 10 நிமிட பயிற்சிதான் இந்த 400 தசைகள் சுறுசுறுப்பாக இயங்க தேவையானதாக இருக்கிறது.
அப்போதுதான் உடல் உறுப்புகளுக்கு தேவையான சக்தி கிடைக்கும். வனப்பான உடல் பொலிவு என்பதும் உடற் பயிற்சியை வைத்தே வருகிறது. உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்புகளை நீக்க 30 நிமிட பயிற்சி போதாது. அதற்கு மேல் மேற்கொள்ளப்படும் பயிற்சிகளே கொழுப்பைக் குறைக்கும் என்கிறது, அந்த ஆய்வு. எப்படியானாலும், குறைந்தபட்சம் 30 நிமிட உடற்பயிற்சி அவசியம்.