மகிழ்ச்சியான வாழ்க்கைக்கு தேவை அமைதியான குடும்பம். குடும்பம் அமைதியாக இருக்கவும், அமைதியை இழக்கவும் பெரும்பாலும் பெண்களே காரணமாக இருக்கிறார்கள். அதிர்ச்சியாக இருந்தாலும் அது உண்மையே.
மகனுக்கு திருமணமாக வேண்டும் என்று கோவில் கோவிலாக வேண்டிக் கொள்வது பெண்கள்தான். ஆனால் திருமணமான பின்பு, தான் செய்யும் காரியத்தால் மகனுடைய வாழ்க்கை எந்த அளவு பாதிக்கும் என்பதைக்கூட புரிந்து கொள்ளாமல் குடும்பத்திற்குள் தீவிர அரசியல் செய்வதும் பெண்கள்தான்.
மாமியார், நாத்தனார், மருமகள் நடத்தும் குடும்ப அரசியலுக்கு முடிவே கிடையாது. இது போன்ற விஷயங்கள் மட்டும் எந்தக் குடும்பத்திலும் மாறுவதே இல்லை. கூட்டுக் குடும்பங்கள் பிரிந்து தனித்தனி குடும்பங்கள் உருவாகிவிட்ட நிலையிலும் குடும்ப கலகங்கள் தீரவில்லை.
குடும்ப உறவுகளை அனுசரித்து செல்வதுதான் நல்ல பண்பு, அந்த பண்பை வீட்டிற்கு வரும் மருமகளிடம் மட்டுமே எதிர்பார்ப்பது தவறு. வாழ்ந்து அனுபவம் பெற்ற மாமியாரால் அப்படி அனுசரித்து செல்ல முடியாதபோது, புதிய இடம், புதிய உறவு, புதிய அனுபவத்தில் இறங்கும் சிறியவரான மருமகள் மட்டும் முற்றிலும் அனுசரித்து செல்ல வேண்டும் என்று எதிர்பார்ப்பது எவ்வளவு வேடிக்கை.
பெண்களின் இதுபோன்ற மனநிலைக்கு பல காரணங்கள் உண்டு. மருமகளால் இனி தன் மரியாதை பறிபோய்விடும், தன்னுடைய அரவணைப்பில் வளர்ந்த மகன் அதையெல்லாம் மறந்து இன்று வேறு ஒருத்தியின் பிடியில் சிக்கிவிட்டானே, இனி என்னை ஒதுக்கிவிடுவானே என்ற கலக்கம் ஒவ்வொரு அம்மாவையும் தொற்றிக் கொள்கிறது. இதேபோல தாய்வீட்டின் ஆதரவில் இருக்கும் நாத்தனார், இனி தனக்கு கிடைத்த ஆதரவு பறிபோகுமோ? என்று பயம் கொள்கிறார்.
இவைதான் குடும்ப கலகத்திற்கு காரணம். அதற்கு ஏற்ப சில சம்பவங்கள் தொடர்ச்சியாக நடந்தால் அவர்கள் நினைத்தது உறுதியாகி விடுகிறது. உடனே மகனையும், மருமகளையும் பிரிக்க சூழ்ச்சிகள் ஆரம்பமாகிவிடுகிறது. மகனுடைய பார்வையிலிருந்து மருமகளின் தரத்தை குறைத்துக்காட்ட எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்படுகிறது. இந்த முயற்சிகளில் கிடைக்கும் வெற்றி, தன் சொந்த மகனின் வாழ்க்கையை சூன்யமாக்கும் என்ற நினைப்பு சிறிதும் இல்லாமல் சில அம்மாக்கள் செயல்படுவார்கள். நாத்தனார்களும் அதற்கு உடந்தையாக துணை போவார்கள். இந்த சூழ்ச்சிகளால் உருவாகும் கலவரங்களை தீர்க்க முடியாமல் ஆண்கள் தவிக்க வேண்டியிருக்கிறது.
மருமகளால் தங்கள் உரிமை பறிபோகாது என்ற தைரியம் மாமியாருக்கு இருந்தால் இது போன்ற சூழ்ச்சிகள் நடைபெறாது. ஆண்கள் அதுபோன்ற அமைதியான சூழல் நிலவ கொஞ்சம் மெனக்கெட வேண்டும். சண்டை உருவாகும் வாய்ப்புகள் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். சண்டையென்று வந்துவிட்டால் நேரடியாக அதில் ஆண்கள் தலையிடக்கூடாது. ஏனெனில் ஒருவரை சமாதானப்படுத்தினால், மற்றவருக்கு ஆதரவு தருவதாக எண்ணிக் கொண்டு பிரச்சினையை வேறொரு கோணத்திற்கு கொண்டு சென்று விடுவார்கள் பெண்கள்.
அம்மாவை சமாதானப்படுத்தினால், திருமணத்திற்கு பின் மனைவி பக்கம் பேசுகிறான் என்று அம்மா சிந்திக்க ஆரம்பித்து விடுவார். மனைவியை சமாதானப்படுத்தினால், ‘ஆயிரம்தான் இருந்தாலும் அம்மாவை குத்தம் சொல்வீங்களா?’ என்று மனைவி கோபித்து கொள்வாள். எனவே மறைமுகமாக, தனித்தனியாக சந்தித்துமற்றவர் பக்கத்து நியாயத்தைச் சொல்லி, இருவருக்கும் இடையே மனக்கசப்பு வளர விடாமல் செய்யும் வேலையை செய்வதே குடும்ப உறவை பாதுகாக்க ஆண்களின் பொறுப்பாகும்.
குடும்ப அரசியல் குறைந்தால் குழப்பங்கள் குறையும். ஆணவம் ஒருவரை எந்த எல்லைக்கும் கொண்டு செல்லும். பெண்கள் படித்துவிட்டு சம்பாதித்தால் பொறுமை தேவை இல்லை என்று நினைத்துக் கொள்வது தவறு. பொறுமையும், பணிவும் எத்தனை பேருடைய வாழ்க்கையை காப்பாற்றி கொடுத்திருக்கிறது என்பது இன்றைய பெண்கள் உணர வேண்டும்