இங்கே தவறு செய்யாதவர்கள் யாரும் இல்லை. ஆனால், செய்த தவறுகளை திருத்திக் கொண்டார்களா? திருந்தினார்களா? என்பது தான் முக்கியமான கேள்வி. சாதாரண, பள்ளி, கல்லூரி தேர்வுகளில் தோல்வியுற்றவர்களுக்கே இரண்டாம் வாய்ப்பு அளிக்கும் போது, வாழ்க்கையில் சில தருணங்களில் மனம் சல்லாபப்பட்டதற்காக அவர்களை ஒரே அடியாக பிரிந்துவிட வேண்டும் என முடிவு செய்வது சரியா? இதில் அந்த தவறின் நோக்கம், தாக்கம் மற்றும் தொடர்ந்து செய்து வருகிறாரா என்பதையும் காண வேண்டும். ஆயினும், கணவன் உறவில் தன்னை ஏமாற்றிவிட்டான் என்பதை எந்த ஒரு பெண்ணாலும் தாங்கி கொள்ள இயலாது. அப்படியான தருணத்தில் அவர் தனது கணவனை மன்னித்து, இரண்டாம் வாய்ப்பு கொடுக்கிறார் எனில், அதைவிட பெரிய தண்டனை அந்த தவறு செய்த கணவனுக்கு அளிக்க முடியாது.
வீக்கர் செக்ஸ் நிறைய பெண்கள் விட்டுக் கொடுத்து ஏமார்ந்து விடுகிறார்கள் என்று கூறுவார்கள். அந்த பட்டியலில் நானும் ஒருத்தி என என் தோழிகள் கூறுவதுண்டு. என்னை வீக்கர் ஒன் என்றும் குறிப்பிடுவார்கள். அதாவது கணவருடன் ஓட்டிப் பிழைக்க ஏன் விட்டுக் கொடுத்து போகிறாய், பெண்களால் சொந்த கால்களில் நிற்க முடியும் என்பார்கள். தவறு செய்த கணவனுக்கு மறுவாய்ப்பு கொடுப்பதற்கு அர்த்தம் வலுவற்றவர்கள் என்பது அல்ல. திருமணமோ, இல்லற வாழ்க்கையோ மிக எளிதானது அல்ல. அந்த வட்டத்தில் இருந்து நாம் வெளிவரலாம். ஆனால், பிள்ளைகள்? எனக்கு தெரியும், அவர் ஒரு தவறான உறவில் இருந்தார் என்பது. நான் அறிந்துவிட்டேன் என்பது அவருக்கும் தெரியும். அவருக்கு ஒரு மறுவாய்ப்பு கொடுத்திருக்கிறேன். தினமும் காலை அவர் அருகில் தான் தூங்கி விழிக்கிறேன். ஒரு நாள் என் நம்பிக்கை வெல்லும். அதற்காக இந்த சமூகம் என்னை வீக்கர் ஒன் என்று குறிப்பிட்டாலும் பரவாயில்லை.
ஒரு விரிசல்… நான் எதிர்பாராத தருணத்தில் அதை கண்டுபிடித்தேன் என்று கூற இயலாது. ஒவ்வொரு படியாக, ஒவ்வொரு முறையும்’ திட்டமிட்டு நான் அதை கண்டுபிடித்தேன். அவர் சட்டையில் லிப்ஸ்டிக் கரையோ, மொபைலில் தெரியாத நபரின் சந்தேகத்திற்குரிய செய்திகளோ எதுவும் இல்லை. ஆனால், எங்கள் வாழ்வில், எங்கள் இருவருக்கும் மத்தியில் ஏற்பட்ட அந்த திடீர் இடைவெளியில் யாரோ நுழைந்திருக்கிறார்கள் என்பதை மட்டும் நன்கு உணர்ந்தேன். ஒரு நாள் கையும் களவுமாக பிடித்தேன். ஏதோ தவறு செய்கிறீர்கள் என்று கூறினேன். இது ஒருவருடத்திற்கு முன் நடந்தது. இரண்டாம் வாய்ப்பு, என் முதல் திருமணத்தை உடையாமல், இப்போது மேலும் ஆரோக்கியப்படுத்தியுள்ளது.
அவரே கூறினார்… நான் அவரிடம் இந்த கேள்வியை கேட்பேன் என்று அவரே நீண்ட நாட்கள் காத்திருந்தார் போல, அந்த கேள்வி என் வாயில் இருந்து வந்தவுடன் அவராக முன்வந்து… என்னை மன்னித்து விடு நான் உன்னை ஏமாற்றிவிட்டேன் என்று கூறினார். அவரை அதற்கு மேல் நோண்டி, நோண்டி புலன்விசாரணை செய்ய எனக்கு மனமில்லை. அவருக்கும், அவருடன் பணிபுரியும் பெண் ஒருவருக்கும் இடையே சில காலம் உறவு இருந்ததாகவும், இப்போது அது இல்லை என்றும் அழுதுக்கொண்டே கூறினார். அவர் வேறு ஒரு பெண் என்று சொல்லி அதன் பின் பேசிய எதுவுமே என் காதுகளை எட்டவில்லை. நான் உறைந்துப் போனேன். சில விஷயங்கள் கோபத்தை ஏற்படுத்துவதற்கு பதிலாக, ஏமாற்றத்தை உண்டாக்கிவிடுகிறது. என்னால் அவரை இழக்க முடியாது. எங்கள் குடும்பம், வீடு, குழந்தைகளின் எதிர்காலம் என அனைத்தையும் ஒரு தவறுக்கு தண்டனை கொடுத்து உடைக்க நான் தயாராக இல்லை. தண்டனைக்கு பதிலாக மன்னிக்கிறேன்.
ஒரு நாள் முழுக்க… அன்பிற்குரிய கணவரிடம் இருந்து வஞ்சிக்கப்பட்ட பெண்ணாக மாறியது எத்தகைய கோபத்தை அளிக்கும் என்பதை அந்த இடத்தில் இருந்து பார்ப்பவர்களால் மட்டுமே உணர முடியும். அந்த கோபத்தின் வெளிப்பாடாக ஏன் நாம் அவரை மீண்டும் வஞ்சிக்க கூடாது, பழிவாங்க கூடாது என பல எண்ணங்கள் உள்ளே உதித்தன. ஆனால், கொஞ்ச நேரம் தனிமையில் உட்கார்ந்து யோசித்த போது, சண்டையிட்டு, பிரிந்து செல்வதை காட்டிலும், மன்னித்து மறப்பது தான் இருவரின் வாழ்க்கைக்கும் சரியானது என்று கருதினேன். ஓரிரு நாட்கள் காரணம் கேட்டு சண்டையிட்டேன். ஒரே கேள்வியை மீண்டும், மீண்டும் கேட்டு எரிச்சல் ஏற்படுத்தினேன். ஒரு கட்டத்தில் நானே ஓய்ந்து போனேன். சில நாள் அவரை விட்டு பிரிந்து என் பெற்றோர் வீட்டில் கோபம் தணியும் வரை குழந்தைகளுடன் தங்கி இருந்தேன்.
இருவீட்டாருக்கும் தெரிந்தது… எங்கள் இருவருக்கு மத்தியிலான உறவில் ஏதோ ஒரு இடை சொருகல் ஏற்பட்டிருப்பதை நான் அறிந்தேன். ஒரு கட்டத்தில் எங்கள் இரு வீட்டாரும் இதை அறிந்தனர். இருத்தரப்பும் எனக்கு சாதகமாக தான் பேசினார்கள். அதே சமயம், அவரை அனைவரும் எதிர்த்து பேசுவது அவரை மேலும் புண்படுத்தியது. அவர் குற்றத்தை ஆரம்பத்திலேயே ஒப்புக் கொண்டார். ஆனாலும் அதற்கான தீர்வை நான் தானே எடுக்க வேண்டும். எதற்கு தேவை இல்லாமல் இவர்கள் வந்து கத்தி கூச்சலிட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்று கருதினேன். அவர்களை எல்லாம் அவரவர் வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டு. ஒரு அமைதியான சூழலில் எனக்கான விடையை தேடினேன்.
ஒரு மாதம் கழித்து… அவர் எனக்கு செய்த துரோகம் அறிந்த பிறகு, நான் பிரிந்து சென்றுவிட்டேன். ஒரு மாத காலம் அவரை காணமல் கோபத்தின் வெளிப்பாட்டில் தனியாக தான் இருந்தேன். ஒரு மாதத்திற்கு பிறகு அவரை சந்தித்து பேச திட்டமிட்டேன். கோபத்தில் திட்ட வேண்டும் என்றே சென்றேன். ஆனால், ஒரு மாதம் கழித்து அவரை கண்ட போது கோபம் வெளிப்படவில்லை, எனது பழிவாங்கும் எண்ணமும் வெளிப்படவில்லை. அவரை கண்டதும், பரிதாபம் தான் வெளிப்பட்டது ஒரே மாதத்தில் ஏதோ வயதானவர் போல மாறியிருந்தார். என் காதலும், என் பிரிவும் அவருக்குள் எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை கண்முன் கண்டேன். என்னிடம் இலட்சம் முறை மன்னிப்புக் கேட்டிருப்பார். குழந்தையின் நலம் பற்றி அவர் விசாரித்த போது என்னை அறியாமல் நான் உடைந்து அழ துவங்கிவிட்டேன். உண்மையான காதலுக்கு நடுவே இடைவெளி வரலாமே தவிர, முறிவு ஏற்படக் கூடாது.
இரண்டாம் வாய்ப்பு… எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை. என் தோழிகள் எல்லாம் விவாகரத்து செய்துவிடு என்று அறிவுரை கூறினார்கள். ஆனால், நான் என் அம்மாவிடம் சென்று என்ன செய்வது என்று கேட்டேன். அவர், ஒரு மனைவியாக நீதான் இதற்கு தேர்வுஒ, முடிவோ எடுக்க வேண்டும். மற்றவர் பேச்சை கேட்காதே. உங்கள் இருவர் மத்தியிலான வாழ்க்கை உங்கள் இருவருக்கு மட்டும் தான் தெரியும், என்றார். அன்று இரவு முழுக்க என்னால் உறங்க முடியவில்லை. மறுநாள் காலை அவரை மன்னித்து இரண்டாம் வாய்ப்பு அளிக்கலாம் என்று முடிவு செய்தேன்.
மன்னித்தேன்… என் குடும்பத்திலோ, உறவினர்களோ என்னில் எந்த அழுத்தமும் ஏற்படுத்தவில்லை. ஆனால், மாறாக இந்த சமூகம் தான் கணவன் ஏமாற்றினால் அவனை உடனே பிரிந்த விடு வேண்டும் என்று கத்திக் கூப்பாடு இட்டது. ஆனால், அவரை மன்னிக்க வேண்டும் என்றே நான் எண்ணினேன். என் குடும்பம், என் எதிர்காலம். இங்கே தவறு செய்யாதவர்கள் யாருமே இல்லை. மன்னிப்பது தான் இருப்பதிலேயே மிகவும் கடுமையான தண்டனை. அப்போது தான் அவர் மனதுக்குள் தவறு செய்ததன் தாக்கம் இருந்துக் கொண்டே இருக்கும். கனவிலும் கூட அவர்கள் அதே தவறை மீண்டும் செய்ய நினைக்க மாட்டார்கள். நான் கொடுத்த இரண்டாம் வாய்ப்பு, என் இல்லறத்தை சீர்குலைக்காமல் பார்த்துக் கொண்டது.