Home ஆரோக்கியம் கொலஸ்ட்ரால் பற்றி சில விஷயங்களை தெரிந்துகொள்ளலாமா?

கொலஸ்ட்ரால் பற்றி சில விஷயங்களை தெரிந்துகொள்ளலாமா?

32

‘கொலஸ்ட்ரால்’ என்றாலே இன்று எல்லோருக்கும் பீதிதான். உடனிருந்தே கொல்வது இது.

கொலஸ்ட்ரால் பற்றி சில விஷயங்களைத் தெரிந்துகொள்ளலாமா?

நமது உடல், கொலஸ்ட்ராலை தன்னிலிருந்தே உற்பத்தி செய்துகொள்கிறது. நம் கல்லீரல் தினமும் சுமார் ஆயிரம் மில்லிகிராம் கொலஸ்ட்ராலை உற்பத்தி செய்கிறது.

கல்லீரலும் மற்ற செல்களும் சேர்ந்து ரத்தத்தின் மொத்த கொலஸ்ட்ரால் அளவில் 75 சதவீதத்தை உற்பத்தி செய்கின்றன.

பொதுவாக 25 சதவீத கொலஸ்ட்ரால், நாம் உட்கொள்ளும் உணவு வகைகளான முட்டைக் கரு, மாமிசம், கோழி இறைச்சி, பால் மற்றும் பால் பொருட்களில் இருந்து கிடைக்கிறது.

கொலஸ்ட்ரால் உயிர் அபாயத்தை ஏற்படுத்தும் ஒன்றாக வளர்வதற்கு நாமே காரணமாக இருக்கிறோம் என்பதுதான் உண்மை. அதாவது, கொழுப்பு நிறைந்த உணவை உண்பது, இறைச்சி வகைகளை அதிகம் உண்பது, அதிக உடல் எடை, உடல் இயக்கத்தைக் குறைத்து ‘சும்மா’வே இருப்பது, உடற்பயிற்சி இல்லாதது, அதிக தூக்கம், மது, புகைப்பழக்கம், மனஅழுத்தம், சர்க்கரை நோய், சிறுநீரகம் மற்றும் தைராய்டு சுரப்பி நோய்களுடன், கருத்தடை மாத்திரைகள் கூட கொலஸ்ட்ராலுக்குக் காரணமாகின்றன.

பெற்றோருக்கு அதிக கொலஸ்ட்ரால் இருந்தால் அதற்குக் காரணமான ஜீன்களை வாரிசுகளும் பெற்றிருக்கக்கூடும்.

ரத்தத்தில் அதிக கொலஸ்ட்ரால் இருப்பதற்கான வெளிப்படையான அறிகுறி எதுவும் தெரிவதில்லை. அதனால்தான் இது ‘சைலண்ட் கில்லர்’ எனப்படுகிறது.

ஒல்லியாக இருப்பவர்களுக்கு ரத்தத்தில் கொலஸ்ட்ரால் இருக்காது என்று கருத முடியாது. எனவே யாராக இருந்தாலும் ரத்தப் பரிசோதனை மூலம்தான் உறுதிப்படுத்திக்கொள்ள முடியும்.

ரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவு, 12 மணி நேரம் ஏதும் உட்கொள்ளாத நிலையில் காலையில் மேற்கொள்ளப்படும் ரத்தப் பரிசோதனையில் இருந்து கணக்கிடப்படுகிறது.

‘லிபோபுரோட்டீன் புரொபைல்’ ரத்தப் பரிசோதனை, நம் ரத்தத்தில் கவலைப்படத்தக்க அளவில் கொலஸ்ட்ரால் இருக்கிறதா இல்லையா என்று கூறிவிடும்.