தாம்பத்ய உறவின் உச்சக்கட்டத்தின் போது பெண்களின் மூளையில் 30 பாகங்கள் எழுச்சி பெற்று இன்பம் தருவதாக சமீபத்திய ஆய்வு ஒன்றில் கண்டறியப்பட்டுள்ளது.
தாம்பத்ய உறவின் கிளைமேக்ஸ் கட்டத்தில் பெண்களின் மனநிலை எப்படி இருக்கிறது? அவர்கள் எந்த மாதிரி உணர்கின்றனர் என்பது குறித்து அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் உள்ள ரட்ஜர்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். பேராசிரியர் பேரி கோமிசருக் என்பவரின் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வில் தனித்தனியாக பெண்கள் பங்கேற்றனர்.
அவர்களிடம் தாம்பத்ய உறவின் போது உச்சகட்ட இன்பம் பெறுவது போன்ற கற்பனை செய்யும்படி கேட்டுக்கொள்ளப்பட்டனர். பின்னர் அவர்களின் மூளை பகுதிகள் தனியாக எம்.ஆர்.ஐ ஸ்கேன் மூலம் படம் பிடிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டன.
அந்த ஆய்வில் மூளையின் முடிவெடுக்கும் பகுதி, அவசரநிலையில் செயல்படுதல் மற்றும் கற்பனைத்திறன் ஆகிய செயல்பாடுகளுக்கான பகுதியாக விளங்கும் ப்ரிப்ரன்டல் கார்டெக்ஸ் ( பி.எப்.சி) உள்பட மூளையின் 30 பாகங்கள் எழுச்சி பெற்று பெண்களின் உச்சகட்ட இன்பத்தின் போது உறுதுணையாக இருப்பது தெரியவந்துள்ளது. மேலும், தனிமையில் இருக்கும் போது மேற்குறிப்பிட்ட பாகங்களில் ஒன்று தாம்பத்ய இன்பம் பற்றி கற்பனையை வளர்த்து அதன் வழியே திருப்தி அடைவதாகவும், துணையுடன் தாம்பத்யத்தில் ஈடுபடும்போது மற்ற பாகங்கள் எழுச்சி பெறுவதாகவும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.
மனிதர்களின் உடலியல் உணர்வுகளான வலி, மகிழ்ச்சி போன்றவை பற்றி ஆராய்ச்சி செய்யும் நோக்கத்துடன் இந்த ஆய்வு நடைபெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆய்வு முடிவு குறித்து டெய்லி மெயில் பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது