Home இரகசியகேள்வி-பதில் கிறிஸ்தவ மதம் சொல்லும் செக்ஸ் பற்றிய பத்து கேள்விகளுக்கு பதில்கள்

கிறிஸ்தவ மதம் சொல்லும் செக்ஸ் பற்றிய பத்து கேள்விகளுக்கு பதில்கள்

192

1 ஆதாம்-ஏவாள் உடலுறவு கொண்டதுதான் ஏதேன் தோட்டத்தில் அவர்கள் செய்த பாவமா?

▪ பதில்: ஆதாம்-ஏவாளுக்குக் கடவுள் தடை செய்திருந்த அந்தப் பழம் நிஜமான பழத்தை அல்ல, அவர்கள் உடலுறவு கொள்வதைக் குறிக்கிறது என்று அநேகர் நினைக்கிறார்கள். ஆனால், பைபிள் அப்படிச் சொல்வதில்லை.

இதைக் கவனியுங்கள்: ஏவாளைப் படைப்பதற்கு முன்பே ஆதாமிடம், “நன்மைதீமை அறியத்தக்க விருட்சத்தின் கனியை” சாப்பிட வேண்டாம் என்று கடவுள் சொன்னார். (ஆதியாகமம் 2:15-18) அப்போது ஆதாம் தனியாக இருந்ததால், இந்தக் கட்டளை உடலுறவைக் குறிப்பதற்கு வாய்ப்பே இல்லை. இன்னொரு விஷயம்: ‘நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்புங்கள்’ என்ற தெள்ளத்தெளிவான கட்டளையை ஆதாம்-ஏவாள் இருவருக்கும் கடவுள் கொடுத்தார். (ஆதியாகமம் 1:28) எனவே, அன்பான கடவுள் முதல் தம்பதியிடம் ‘பூமியை நிரப்பும்படி,’ அதாவது தாம்பத்திய உறவு கொண்டு பிள்ளைகளைப் பெற்றெடுக்கும்படி, கட்டளை கொடுத்துவிட்டு பின்பு அந்தக் கட்டளைக்குக் கீழ்ப்படிந்ததற்காக மரண தண்டனையையும் கொடுப்பாரா?—1 யோவான் 4:8.

மற்றொரு விஷயம்: ஏவாள் தன் கணவன் இல்லாத சமயத்தில், அந்த “பழத்தை பறித்து சாப்பிட்டாள். பிற்பாடு தன் கணவனுக்கும் கொடுத்தாள்; அவனும் சாப்பிட்டான்” என்று பைபிள் சொல்கிறது.—ஆதியாகமம் 3:6, NW.

அதன்பின் ஆதாம்-ஏவாள் உறவுகொண்டு பிள்ளைகளைப் பெற்றெடுத்தபோது அதற்காகக் கடவுள் அவர்களைக் கண்டிக்கவில்லை. (ஆதியாகமம் 4:1, 2) அப்படியென்றால், ஆதாம்-ஏவாள் சாப்பிட்ட அந்தப் பழம் உண்மையான ஒரு பழம். அது அவர்கள் இருவரும் உடலுறவு கொண்டதைக் குறிக்கவில்லை என்பதில் சந்தேகமே இல்லை.

2 தாம்பத்திய உறவில் கிடைக்கிற இன்பத்தை அனுபவிக்கக் கூடாது என பைபிள் தடைசெய்கிறதா?

▪ பதில்: கடவுள்தான் மனிதர்களை “ஆணும் பெண்ணுமாக” படைத்தார் என்று பைபிளின் முதல் புத்தகம் சொல்கிறது. அதோடு, தம்முடைய படைப்புகள் எல்லாம், “மிகவும் நன்றாயிருந்தது” என்று கடவுள் சொன்னார். (ஆதியாகமம் 1:27, 31) சில காலம் கழித்து, கணவர்களுக்கு இந்த ஆலோசனையைக் கொடுக்கும்படி பைபிள் எழுத்தாளர் ஒருவரை கடவுள் தூண்டினார்: “உன் இளவயதின் மனைவியோடே மகிழ்ந்திரு. . . . அவளுடைய ஸ்தனங்களே எப்பொழுதும் உன்னைத் திருப்திசெய்வதாக.” (நீதிமொழிகள் 5:18, 19) இதைப் படிக்கும்போது, தாம்பத்தியத்தில் கிடைக்கும் இன்பம் தவறு என்று பைபிள் சொல்வதாக உங்களுக்குத் தோன்றுகிறதா?

கடவுள் மனிதர்களைப் பால் உறுப்புகளோடு படைத்தது பிள்ளைகளைப் பெற்றெடுப்பதற்காக மட்டுமல்ல, தம்பதிகள் இருவரும் சுகம் பெறுவதற்காகவும்தான். உடல்ரீதியாக, உணர்ச்சிரீதியாக தங்களுக்குள்ள ஆசைகளை அன்பாகவும் ஆனந்தமாகவும் பூர்த்தி செய்ய இது அவர்களுக்கு உதவுகிறது.

3 சட்டப்படி திருமணம் செய்யாத இருவர் சேர்ந்து வாழ்வதை பைபிள் ஏற்றுக்கொள்கிறதா?

▪ பதில்: ‘பாலியல் முறைகேட்டில் ஈடுபடுகிறவர்களை . . . கடவுள் நியாயந்தீர்ப்பார்’ என்று பைபிள் தெளிவாகச் சொல்கிறது. (எபிரெயர் 13:4) பாலியல் முறைகேடு என்பதற்கான கிரேக்க வார்த்தை போர்னியா. இதற்கு விரிவான அர்த்தம் இருக்கிறது. மணத்துணையைத் தவிர வேறு யாருடனும் வைத்துக்கொள்கிற செக்ஸ் உறவுகளை இது குறிக்கிறது.* எனவே, மணமாகாத இருவர் சேர்ந்து வாழ்வது கடவுளுடைய பார்வையில் தவறு. ஒருவேளை, அவர்கள் திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தாலும்கூட அப்படி வாழ்வது தவறு.

ஓர் ஆணும் பெண்ணும் உயிருக்கு உயிராகக் காதலித்தாலும்கூட, திருமணம் செய்துகொண்ட பிறகே அவர்கள் செக்ஸை அனுபவிக்க வேண்டும் என்று கடவுள் எதிர்பார்க்கிறார். காதல் என்பது அன்பின் வெளிக்காட்டு. அன்பு என்ற குணத்தை நமக்குத் தந்தது கடவுள்தான். அவருடைய முக்கிய குணமும் அன்புதான். எனவே, திருமண பந்தத்தில் இணைந்த இருவர் மட்டுமே செக்ஸ் வைத்துக்கொள்ள வேண்டும் என்று நம் அன்புள்ள கடவுள் சொல்வது நம்முடைய நன்மைக்கே.

4 பலதார மணம் சரியா?

▪ பதில்: ஓர் ஆண் பல பெண்களைத் திருமணம் செய்துகொள்வதை முன்னொரு காலத்தில் கடவுள் அனுமதித்தார். (ஆதியாகமம் 4:19; 16:1-4; 29:18–30:24) ஆனால், இந்த வழக்கத்தை ஆரம்பித்து வைத்தது கடவுள் அல்ல. ஆதாமுக்கு அவர் ஒரேவொரு மனைவியைத்தான் கொடுத்தார்.

ஒருவனுக்கு ஒருத்தி என்பதுதான் கடவுள் ஆரம்பத்தில் ஏற்படுத்திய ஒழுக்கநெறி. அதைத் திரும்பவும் நிலைநாட்ட இயேசு கிறிஸ்துவுக்குக் கடவுள் அதிகாரமளித்தார். (யோவான் 8:28) திருமண பந்தத்தைப் பற்றி இயேசுவிடம் சிலர் கேட்டபோது அவர் இப்படிச் சொன்னார்: “கடவுள் ஆரம்பத்தில் மனிதர்களைப் படைத்தபோது அவர்களை ஆணாகவும் பெண்ணாகவும் படைத்தார் என்பதை நீங்கள் வாசிக்கவில்லையா? ‘இதன் காரணமாக, ஒருவன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டுத் தன் மனைவியோடு சேர்ந்திருப்பான், அவர்கள் இருவராக அல்ல ஒரே உடலாக இருப்பார்கள்.’”—மத்தேயு 19:4, 5.

சில காலம் கழித்து, இவ்வாறு எழுத இயேசுவின் சீடர் ஒருவரைக் கடவுள் தூண்டினார்: “அவனவன் தன்னுடைய சொந்த மனைவியோடும் அவளவள் தன்னுடைய சொந்த கணவனோடும் வாழ வேண்டும்.” (1 கொரிந்தியர் 7:2) அதோடு, கிறிஸ்தவச் சபையில் விசேஷப் பொறுப்பைக் கையாளும் திருமணமான ஓர் ஆண், “ஒரே மனைவியை உடைய கணவராக” இருக்க வேண்டும் என்றும் பைபிள் சொல்கிறது.—1 தீமோத்தேயு 3:2, 12.

5 தம்பதிகள் கருத்தடைச் சாதனங்களைப் பயன்படுத்துவது தவறா?

▪ பதில்: பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டுமென இயேசு தம்முடைய சீடர்களுக்குக் கட்டளை கொடுக்கவில்லை. அவருடைய சீடர்களும்கூட அதுபோன்ற கட்டளையைக் கொடுக்கவில்லை. கருத்தடை செய்வது தவறு என்று பைபிளில் எந்தவொரு சட்டமும் இல்லை.

எனவே, பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டுமா, வேண்டாமா என்பதைத் தம்பதிகள் தீர்மானிக்க வேண்டும். எத்தனை பிள்ளைகளைப் பெற்றுக்கொள்ளலாம், எப்போது பெற்றுக்கொள்ளலாம் என்பதையும் அவர்களே தீர்மானித்துக் கொள்ளலாம். ஒரு தம்பதி கருக்கலைப்பை ஏற்படுத்தாத கருத்தடைச் சாதனங்களைப் பயன்படுத்த விரும்பினால், அது அவர்களுடைய சொந்தத் தீர்மானம். அந்தத் தீர்மானத்திற்கு அவர்களே பொறுப்பாளிகள்.* வேறு யாரும் அவர்களை நியாயந்தீர்க்கக் கூடாது.—ரோமர் 14:4, 10-13.

6 கருக்கலைப்பு செய்வது தவறா?

▪ பதில்: உயிரைக் கடவுள் புனிதமாகக் கருதுகிறார். தாயின் வயிற்றிலுள்ள ஒரு கருவையும்கூட ஒரு நபராகப் பார்க்கிறார். (சங்கீதம் 139:16) அந்த உயிரை யாராவது சேதப்படுத்தினால் அந்த நபரிடம் தாம் கணக்குக் கேட்பதாகவும் சொல்லியிருக்கிறார். எனவே, தாயின் வயிற்றிலுள்ள குழந்தையைக் கொல்வது அவருடைய பார்வையில் கொலைக்குச் சமம்.—யாத்திராகமம் 20:13; 21:22, 23.

ஆனால், பிரசவ நேரத்தில் ஏற்படுகிற ஒரு சிக்கலின் காரணமாக, தாயின் உயிர் அல்லது சேயின் உயிர் இரண்டில் ஒன்றைத்தான் காப்பாற்ற முடியும் என்ற நிலை வந்தால்? அப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில், யாரைக் காப்பாற்றுவது என அந்தத் தம்பதிதான் தீர்மானிக்க வேண்டும்.*

7 விவாகரத்து செய்வதை பைபிள் அனுமதிக்கிறதா?

▪ பதில்: ஆம், அனுமதிக்கிறது. ஆனால், ஒரேவொரு காரணத்திற்காகத்தான். “பாலியல் முறைகேட்டைத் தவிர, [திருமணத் துணையோடு அல்லாமல் வேறு யாருடனாவது உடலுறவு வைத்துக்கொள்வதைத் தவிர] வேறெந்தக் காரணத்திற்காகவும் தன் மனைவியை விவாகரத்து செய்து வேறொரு பெண்ணை மணந்துகொள்கிறவன் தவறான உறவுகொள்கிறான்” என இயேசு சொன்னார்.—மத்தேயு 19:9.

துணையை ஏமாற்றி நயவஞ்சகமாக விவாகரத்து செய்பவரைக் கடவுள் வெறுக்கிறார். அற்ப விஷயங்களுக்காகத் துணையை விட்டு பிரிபவர்களை அவர் சும்மா விடமாட்டார்; குறிப்பாக வேறு ஒருவரைத் திருமணம் செய்ய வேண்டும் என்பதற்காகத் துணையை விட்டு விலகுபவர்களிடம் அவர் நிச்சயம் கணக்குக் கேட்பார்.—மல்கியா 2:13-16; மாற்கு 10:9.

8 ஓரினச்சேர்க்கையைக் கடவுள் ஏற்றுக்கொள்கிறாரா?

▪ பதில்: பாலியல் முறைகேட்டை பைபிள் நேரடியாகக் கண்டனம் செய்கிறது. அதில் ஓரினச்சேர்க்கையும் அடங்கும். (ரோமர் 1:26, 27; கலாத்தியர் 5:19-21) இப்படிப்பட்ட பழக்கத்தைக் கடவுள் அறவே வெறுக்கிறார் என்று பைபிள் திட்டவட்டமாகச் சொல்கிறது. அதே சமயத்தில், “கடவுள், தம்முடைய ஒரே மகன்மீது விசுவாசம் வைக்கிற எவரும் அழிந்துபோகாமல் முடிவில்லா வாழ்வைப் பெறுவதற்காக அவரைத் தந்து, இந்தளவுக்கு உலகத்தின் மீது அன்பு காட்டினார்” என்றும் சொல்கிறது.—யோவான் 3:16.

எனவே, ஓரினச்சேர்க்கையை உண்மைக் கிறிஸ்தவர்கள் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும், எல்லாரிடமும் அவர்கள் கனிவையும் இரக்கத்தையும் காட்டுகிறார்கள். (மத்தேயு 7:12) கிறிஸ்தவர்களாகிய நாம் “எல்லா விதமான ஆட்களையும் உயர்வாக மதிக்க” வேண்டுமென கடவுள் எதிர்பார்க்கிறார். அதனால், உண்மைக் கிறிஸ்தவர்கள் ஓரினச்சேர்க்கையாளர்களை வெறுப்பதில்லை.—1 பேதுரு 2:17.

9 ஃபோன் செக்ஸ், “செக்ஸ்டிங்,” சைபர்செக்ஸ்—தவறா?

▪ பதில்: ஃபோன் செக்ஸ் என்பது காம உணர்ச்சியைத் தூண்டும் விஷயங்களை அப்பட்டமாக ஃபோனில் பேசுவதையோ கேட்பதையோ குறிக்கிறது. “செக்ஸ்டிங்” என்பது ஆபாசப் படங்களை அல்லது காம உணர்ச்சியைத் தூண்டும் விஷயங்களை மற்றவர்களுக்கு மெசேஜ் செய்வதாகும். சைபர்செக்ஸ் என்பது இன்டர்நெட் மூலம் ஆபாசமான விஷயங்களை மற்றொருவரோடு பகிர்ந்துகொள்வதை அர்த்தப்படுத்துகிறது.

பைபிள் எழுதப்பட்ட சமயத்தில் இப்படிப்பட்ட பழக்கங்கள் இருக்கவில்லை; எனவே, இந்த நவீன யுகத்தில் தோன்றிய இத்தகைய பழக்கங்களைப் பற்றி பைபிள் குறிப்பிட்டுச் சொல்வதில்லை. ஆனால், இந்த எச்சரிக்கையைக் கொடுக்கிறது: “பாலியல் முறைகேடு, எல்லா விதமான அசுத்தம், பேராசை ஆகியவற்றைப் பற்றிய பேச்சுக்கூட உங்கள் மத்தியில் இருக்கக் கூடாது. இவை பரிசுத்தமான மக்களுக்கு தகுந்தவை அல்ல. அவ்வாறே, வெட்கக்கேடான நடத்தை, முட்டாள்தனமான பேச்சு, ஆபாசமான கேலிப் பேச்சு ஆகியவை உங்கள் மத்தியில் இருக்கக் கூடாது.” (எபேசியர் 5:3, 4) ஃபோன் செக்ஸ், “செக்ஸ்டிங்,” சைபர்செக்ஸ் போன்றவை மக்கள் மனதில் செக்ஸ் பற்றிய வக்கிரமான எண்ணங்களை ஊக்குவிக்கின்றன; திருமணம் செய்யாமலேயே செக்ஸ் இன்பத்தை ருசிக்கத் தூண்டுகின்றன. இத்தகைய பழக்கங்கள், காம உணர்வுகளைக் கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக சுயநலத்தோடு அப்படிப்பட்ட ஆசைகளைத் தீர்த்துக்கொள்ளத் தூண்டுகின்றன.

10 சுய இன்பப் பழக்கத்தைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது?

▪ பதில்: சுய இன்பப் பழக்கம் என்பது ஒருவர் தன்னுடைய பாலுறுப்புகளைத் தீண்டி உச்சக்கட்ட பரவசத்தை அடைவதாகும். இந்தப் பழக்கத்தைப் பற்றி பைபிள் குறிப்பிட்டுச் சொல்வதில்லை. என்றாலும், கடவுளுடைய புத்தகமாகிய பைபிள் இவ்வாறு கட்டளையிடுகிறது: “பாலியல் முறைகேடு, அசுத்தமான நடத்தை, காமப்பசி, தீய ஆசை . . . ஆகியவற்றைத் தூண்டுகிற உங்கள் உடலுறுப்புகளை மரத்துப்போகச் செய்யுங்கள்.”—கொலோசெயர் 3:5.

சுய இன்பப் பழக்கம் செக்ஸைப் பற்றிய வக்கிரமான எண்ணத்தை ஏற்படுத்துகிறது, செக்ஸ் இன்பத்தைத் தானாகவே தீர்த்துக்கொள்ளத் தூண்டுகிறது. இந்தப் பழக்கத்தை உதறித்தள்ள நிஜமாக முயற்சி செய்கிறவர்களுக்குக் கடவுள் “இயல்புக்கு மிஞ்சிய சக்தி” அளிப்பார் என்று பைபிள் உறுதியளிக்கிறது.—2 கொரிந்தியர் 4:7; பிலிப்பியர் 4:13