Home குழந்தை நலம் குழந்தைகள் அதிக நேரம் செல்போனில் விளையாடுவதால் ஏற்படும் விளைவுகள்

குழந்தைகள் அதிக நேரம் செல்போனில் விளையாடுவதால் ஏற்படும் விளைவுகள்

46

குழந்தை நலம்:குட்டீஸ், உங்களுக்கு மிக மிகப் பிடித்த விளையாட்டுப் பொருள் என்றால், அது அம்மாவின் செல்போன்தானே. உங்களைப்போலவே உங்கள் தோழிகளும், நண்பர்களும் அம்மாவின் போன்களில் விளையாடுவதாக பெற்றோர்கள் வருத்தத்துடன் கூறுகிறார்கள். நீங்கள் செல்போனில் விளையாடுவதை சந்தோஷமாக நினைக்கிறீர்கள், ஆனால் அதன் மூலமாக உங்களுக்கு என்னென்ன பாதிப்புகள் வரும் என்று தெரியுமா?

செல்போனில் விளையாடும் நீங்கள் ஓடி விளையாட மறந்து வருகிறீர்கள். அதன் மூலம் கிடைக்கும் பயனையும் இழந்து வருகிறீர்கள். கிரிக்கெட், செஸ், கேரம், கால்பந்து, பேட்மிட்டன் போன்ற இன்னும் பல பாரம்பரிய விளையாட்டுகள் ஆரோக்கியம் தரக்கூடியவை. ஆனால் இந்த விளையாட்டுகளை செல்போன், கணினியில் விளையாடுவதால் எந்த பயனும் இல்லை. புதையல் எடுத்தல், ஷூட்டிங், குக்கிங், டெம்பிள்ரன், ரேஸ் என செல்போனில் நீங்கள் விளையாடும் அத்தனை விளையாட்டுகளும் சுவாரஸ்யமானவைதான். அவை உங்கள் மூளை வளர்ச்சியைத் தூண்டும் வேகத்தைப்போலவே மன அழுத்தத்தை ஏற்படுத்தும் வேகமும் அதிகமாக இருக்கிறது.

“குழந்தைகளின் மூளை வளர்ச்சி, முதல் மூன்று வயது வரை வேகமாக இருக்கும் இருக்கும்.. அப்போது மூளையைத் தூண்டிவிடும் விளையாட்டுகளை விளையாடும் போது குழந்தைகளின் கற்பனைத்திறன், கூர்ந்து கவனிக்கும் திறன் மேம்பட்டுப் படைப்பாளியாக மாறுவார்கள். ஆனால், டிவி, கணினி, செல்போன் போன்ற சாதனங்கள், குழந்தைகளை முடக்கினால் ஒரு ரோபோ போல உருவாகி எதிர்காலத்தில் யாரிடம் எப்படி பேசவேண்டும், பழக வேண்டும் எனத் தெரியாமல் தவறான முடிவு எடுப்பவர்களாக மாறும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்” என்று நிபுணர்கள் வருத்தத்துடன் கூறுகிறார்கள்.

கணினி மற்றும் போன்களை அதிகம் பயன்படுத்துபவர்களுக்கு முதலில் ஏற்படுவது பார்வைக் கோளாறுதான். தொடர்ச்சியாக திரையைப் பார்ப்பதால் கண் எரிச்சல், தலைவலி ஏற்படும். இமைக்காமல் விளையாடுவதே இதற்கு காரணமாகும். சிறுவயதில் கண்ணாடி போடுபவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு செல்போன் விளையாட்டுகளே முக்கிய காரணமாக இருக்கிறது. அதேபோல காதுகளையும் வெகுவாகப் பாதிக்கிறது.

விளையாடும்போது ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பதால் கொழுப்பு சேர்ந்து உடல் பருமன் அதிகரிக்கும். எலும்புகளின் பலம் குறைந்து எலும்பு தேய்மானம், முதுகு வலி, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

அது உங்கள் கவனத்தை இழுத்து மற்றவற்றில் உங்கள் மனதை ஈடுபடாத மனச்சிதைவை உண்டாக்குகிறது, நட்பை பாழாக்குகிறது, உறவுகளையும் சிதைக்கிறது. இன்னும் பல ஆரோக்கியப் பிரச்சினைகளுக்கு அடித்தளம் அமைக்கிறது. செல்போன் கதிர்வீச்சுகள் இதயம், மூளை, சிறுநீரகத்தை பாதிப்பதாக அறிவுறுத்தப்படுகிறது.

செல்போன் விளையாட்டுகளின் தோல்வியும், அம்மா போனை வாங்கிக் கொண்டால் வரும் ஏக்கமும், கோபமும், நாளைடைவில் மன பாதிப்பை உருவாக்குகிறது. அது தனிமைப்படவும், தன்னம்பிக்கை இழந்த மனிதராக நீங்கள் வளரவும் காரணமாக அமைகிறது. இரவில் விளையாடுவதால் தூக்கம் கெடுகிறது. அது மறுநாள் பள்ளிப்பாடங்களை எழுதுவது படிப்பது, பள்ளியில் பாடங்கள் கவனிப்பது போன்ற அனைத்தையும் பாதிக்கிறது. இதுபோன்ற தொடர்பாதிப்புகளால் கண்ணுக்குத் தெரியாமலே உங்கள் எதிர்காலம் பாழாகிறது.

இப்படி பல வழிகளிலும் பாதிப்பை உருவாக்கும் செல்போன்களையும், செல்போன் விளையாட்டுகளையும் ஒதுக்கி வைப்பது புத்திசாலித்தனமாகும். நீங்கள் சமர்த்துக்குட்டி, இனி அதிகமாக செல்போனில் விளையாட மாட்டீர்கள்தானே!