பொதுவாக பெற்றோhர் பெண் பிள்ளைகளின் உடல் நலனில் கவனம் செலுத்துவதை போல ஆண் பிள்ளைகளின் உடல் நலனில் கவனம் செலுத்துவது பெரும்பாலும் குறைவு. காரணம் அவன் ஆண் பிள்ளை தானே என சாதாரணமாக இருந்துவிடுவர்.
ஆனால், குறிப்பிட்ட ஒரு வயது வரைக்கும் ஆண் பிள்ளைகளின் உடல் நலனிலும் சிரத்தையுடன் இருப்பது மிகவும் முக்கியம். அதிலும் அவர்களின் ஆணுறுப்பு தொடர்பில் கொஞ்சம் அதிக கவனம் செலுத்துவது அவர்களின் ஆரோக்கியமான எதிர்கால வாழ்க்கைக்கு பயன் தரக்கூடியதாக இருக்கும்.
ஆண் பிள்ளைகளின் ஆணுறுப்பை பொறுத்த வரைக்கும் அதில் முன் தோல் காணப்படுவது இயல்பான ஒன்றாகும். சிலருக்கு அது அதிகம் வளர்ந்திருக்கும். சிலருக்கு அது சரியான அளவில் இருக்கும். எவ்வாறு காணப்பட்டாலும் குறித்த ஒரு வயதுக்குப் பின்னர் அதாவது, கிட்டத்தட்ட 5 வயதுக்குப் பின்னர் முன்தோலானது பின்நோக்கி செல்லும் தன்மையைக் கொண்டிருக்க வேண்டும்.
சிலருக்கு அது இறுக்கமாக இருக்கும். ஆனாலும் கிட்டத்தட்ட 4 – 5 வயதுகளில் அது சரியாகிவிடும். அவ்வாறு குறிப்பிட்ட வயதை அடைந்தும் ஆணுறுப்பின் முன்தோலானது பின்நோக்கி செல்லாமல் இருக்குமாயின் அது அவர்களின் ஆணுறுப்பில் பெரிய பாதிப்புக்களை ஏற்படுத்தும். ஏன், சிறுநீரகத்தையும் கூட அது பாதிக்கும்.
இவ்வாறு ஆணுறுப்பின் முன்தோலானது பின்னோக்கிச் செல்லாது இருக்குமாயின் சிலவேளைகளில் அது அவர்களின் சிறுநீரக துவாரத்தை சிறியதாக்கி விடும். இவ்வாறு சிறுநீரக துவாரம் சிறியதாக இருப்பதை மருத்துவர்கள் Phimosis எனச் சொல்கின்றார்கள். இதனால் சிறுநீரகம் வீக்கமடையும் வாய்ப்பு அதிகம். அத்துடன் சிறுநீரை கழிக்கும்போது அவர்களுக்குள் வலியும் ஏற்படும். இதனால் அவர்கள் கஷ்டப்பட்டு சிறுநீரைக் கழிப்பதுடன் இந்த வலிக்குப் பயந்துக் கொண்டு சிலர் சிறுநீரைக் கழிப்பதும் இல்லை.
இந்நிலைமை நீண்டகாலத்துக்கு நீடிக்குமாயின் அது சிறுநீரில் தொற்றை ஏற்படுத்துவதுடன் சிலவேளைகளில் சிறுநீரகத்திலும் பாதிப்புக்களை ஏற்படுத்தி விடுகின்றது. இது காலப்போக்கில் சிறுநீரகங்கள் செயலிழக்கும் அளவுக்கு ஆண் பிள்ளைகளை பாதிக்கின்றது.
எனவே பெற்றோர்கள் இது தொடர்பில் அவதானமாக இருப்பது அவசியமான ஒன்றாகும். ஆகக்கூடியது 5 வயதுக்குட்பட்ட உங்களின் ஆண் பிள்ளைகள் சிறுநீர் கழிப்பதில் ஏதேனும் பிரச்சினைகளை எதிர்நோக்கினால் உடனே அவர்களின் ஆணுறுப்பை கொஞ்சம் அவதானித்துப் பாருங்கள். அதன் முன்தோல் இலகுவாக பின்னோக்கிச் செல்கின்றதா? என நீங்களே சோதித்துப் பாருங்கள். காரணம் அவர்கள் உங்களிடம் சொல்லக் கூச்சப்படலாம்.
இதனை இரவு நேரங்களில் அவர்கள் சிறுநீர் கழிக்கச் செல்லும்போது உங்களால் தெளிவாக அவதானிக்க கூடியதாக இருக்கும். அவ்வாறு அவர்களின் ஆணுறுப்பின் முன்தோலானது பின்நோக்கி செல்வதில் ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் உடனே வைத்தியரை நாடுங்கள். சில அறுவை சிகிச்சைகளினூடாக அதனை மிகவும் இலகுவாக குணப்படுத்திக்கொள்ள முடியும். வெறுமனே சாதாரணமாக எடைபோட்டுவிடாதீர்கள், அது உங்கள் ஆண் பிள்ளைகளின் எதிர்காலத்தில் பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்திவிடும்.