“சிறுவர், சிறுமியர்கள் பாலியல்ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்ளாவது அதிகரித்து வருகிறது. அவர்களுக்கு பாலியல்தொல்லை கொடுப்பவர்கள் பெரும்பாலும் அவர்களுக்கு நன்கு அறிமுகமானவர்களாகவோ, உறவினர்களாகவோ, அண்டை வீட்டுக்காரர்களாகவோ இருப்பார்கள். தாங்கள் மீது யாருக்கும் சந்தேகம் ஏற்படாத அளவுக்கு அவர்கள் மிகவும் நல்லவர்களாக தங்களை காட்டிக்கொள்வார்கள்.
குழந்தைகள் மீது மிகுந்த அக்கறை கொண்டவர் போல பழகி, அந்த குடும்பத்தினரின் நன்மதிப்பை பெற முயற்சிப்பார்கள். பெற்றோர்கள், குழந்தைகள் விஷயத்தில் மிகுந்த விழிப்புடன் இருந்தால்தான் இம்மாதிரியானவர்களை அடையாளங்கண்டு தண்டிக்க முடியும்”.
“குழந்தைகளுக்கு எதிரான பாலியல் பலாத்காரம் பற்றிய விழிப்புணர்வு முதலில் பெற்றோரிடம் ஏற்படவேண்டும். அவர்கள் பாலியல்ரீதியான விஷயங்களை விஞ்ஞானபூர்வமாக தெரிந்துவைத்துக்கொண்டு, குழந்தைகள் எழுப்பும் சந்தேகங்களுக்கு பக்குவமாக பதிலளிக்கவேண்டும். ‘இதை எல்லாம் குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டுமா?’ என்ற கோணத்தில் ஒருபோதும் சிந்திக்கக்கூடாது.
குறிப்பிட்ட வயது வரை குழந்தைகளை, பெற்றோர்தான் குளிப்பாட்டுவார்கள். அப்போதே உடல் பாகங்களை பற்றி குழந்தைகளிடம் விளக்கி கூறிவிட வேண்டும். ‘உன்னுடைய உடல் ஆரோக்கியத்திற்காக தவிர, வேறு காரணங்களுக்காக மற்றவர்கள் உன் உடல் பாகங்களை தொடுவதோ, பார்ப்பதோ, அவை பற்றி பேசுறதோ சரியானதல்ல’ என்பதையும் உணர்த்திவிட வேண்டும்”