வீட்டில் இருக்கும் பெரியவர்களிடம் பொறுப்பாக குழந்தையை ஒப்படைத்துவிட்டு வேலைக்கு சென்றாலும், கூடவே இருந்து குழந்தையை பார்த்துக்கொள்ளமுடியவில்லையே என்ற ஏக்கம் அவர்களை பின்தொடரும். அதனால் நிறைய அம்மாக்கள் வேலைக்கு தற்காலிக ஓய்வு கொடுத்துவிடுகிறார்கள். ஆனால் குழந்தை ஓரளவு வளர்ந்து ஆளாகி பள்ளிக்கு செல்ல தொடங்கிய பிறகு, வீட்டில் தனிமையை உணருவார்கள்.
அப்போது மீண்டும் வேலை தேடலாமா? என்று பல பெண்கள் யோசிப்பார்கள். குழந்தைகளின் படிப்பு, எதிர்காலம், குடும்ப சூழ்நிலை போன்றவை அவர்களை மீண்டும் வேலைக்கு அழைத்து சென்றுவிடும். அப்படி வேலைக்கு செல்லும் பெண்களிடம், ‘குழந்தை சாப்பிட்டானா? பள்ளி முடிந்து பத்திரமாக வீட்டுக்கு வந்துவிட்டானா?’ என்பன போன்ற எண்ணங்கள் ஓடிக்கொண்டிருக்கும்.
வேலைக்கு செல்லும் பெண்கள் குழந்தைகளுடன் போதுமான நேரத்தை செலவிட முடியவில்லையே? என்ற ஏக்கம் தோன்ற இடம் கொடுத்துவிடக்கூடாது. குழந்தைகளுடன் எப்படியெல்லாம் நேரத்தை செலவிடலாம் என்று திட்டம் வகுத்து செயல்பட வேண்டும். இல்லாவிட்டால் வேலையில் முழுமனதுடன் ஈடுபட முடியாமலும், குழந்தையுடனும் நேரத்தை செலவிட முடியாமலும் மன அழுத்தத்திற்கு ஆளாக வேண்டியிருக்கும்.
குழந்தையுடன் நேரத்தை செலவிடுவது அம்மாக்களின் கையில்தான் இருக்கிறது. குழந்தைகளிடம் அதிகாலையில் தூங்கி எழும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். அது காலை வேளையில் குழந்தையுடன் செலவிடும் நேரத்தை அதிகப்படுத்தும். வேலைக்கு செல்லும் அவசரத்தில் குழந்தைகள் செய்யும் சிறிய தவறுகளை பார்த்து எரிச்சல் அடைவதோ, கண்டிப்பதோ கூடாது. இன்முகத்துடன் குழந்தைகளுக்கு புரிய வைக்க வேண்டும்.
மாலையில் வீடு திரும்பி வந்தவுடன் குழந்தை களுடனேயே முழு நேரத்தையும் செலவிட வேண்டும். டி.வி பார்ப்பது, செல்போனில் நேரத்தை செலவழிப்பது போன்றவற்றை வரைமுறைப்படுத்த வேண்டும். வார இறுதி நாட்களை குழந்தைகளுக்கு பிடித்தமான பொழுதுபோக்கு நேரமாக மாற்றிவிட வேண்டும். பூங்காக்கள், அருங்காட்சியங்கள் போன்ற வெளி இடங் களுக்கு சென்று வரலாம்.
குழந்தை வளர்ப்பில் தந்தைக்கும் பங்கு இருக்கிறது. கணவன்-மனைவி ஒருவருக்கொருவர் வீட்டு வேலைகளை பகிர்ந்து கொள்வது குழந்தைகளுடன் செலவிடும் நேரத்தை அதிகப்படுத்தும். அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பும் வரையிலான இடைப்பட்ட நேரங்களை செல்போன் உரையாடல்கள், இணையதள தகவல் பரிமாற்றங்களுக்கு செலவிடலாம்.
வீட்டிற்குள் நுழைந்த பிறகு அதற்கு செலவிடும் நேரத்தை குழந்தைகளுக்கு ஒதுக்கிவிடலாம். குழந்தைகளை தூங்க வைப்பதற்கு முன்பு அவர்களுக்கு அறிவுப்பூர்வமான தகவல்கள், நீதி கதைகளை சொல்லலாம். பள்ளியில் நடந்த சம்பவங்களை கேட்கலாம். அது பெற்றோர்-குழந்தைகள் இடையேயான நெருக்கத்தை அதிகப்படுத்தும். குழந்தைகளுடன் போதுமான நேரத்தை செலவிட்ட மன திருப்தியும் ஏற்படும்.
மகப்பேறு கால ஓய்வுக்கு பிறகு மீண்டும் வேலைக்கு செல்லும் பெண்கள் சந்திக்கும் பிரச்சினைகள் ஏராளம். அவர்கள் வேலையில் கவனத்தை செலுத்தினாலும் மனம் சுலபமாக குழந்தையிடம் இருந்து மீண்டுவிடுவதில்லை. குழந்தையின் சின்ன சின்ன அசைவுகள், அழுகை, மழலை சிரிப்புகள், ரசிக்க வைக்கும் சேட்டைகள், அடம்பிடித்து அழுது சாதிக்கும் விதம் என பிஞ்சுக்குழந்தைகளின் ஒவ்வொரு செய்கைகளையும் உடனிருந்து ரசிக்கவே அம்மாக்கள் விரும்புகிறார்கள்.