ஒவ்வொரு தாயும் தன் குழந்தைக்கு போதிய ஊட்டச்சத்துக்கள் கிடைக்க வேண்டும் என்றே நினைப்பார்கள். பிறந்த குழந்தைக்கு தாய்ப்பாலின் வழியே தான் அச்சத்துக்கள் கிடைக்கும். பிரசவத்திற்கு பின் இயற்கையாகவே தாய்ப்பால் சுரக்கும். ஆனால் மார்பக அளவுகள் தான் தாய்ப்பால் சுரப்பை நிர்ணயிக்குமா என்று கேட்டால், உடல்நல நிபுணர்கள் இல்லை என்றே கூறுகிறார்கள்.
இக்கட்டுரையில் தாய்ப்பால் சுரப்பு குறித்து உங்களுக்கு இருக்கும் சந்தேகங்களுக்கான விடைகள் மற்றும் உண்மைகள் கொடுக்கப்பட்டுள்ளன. படித்து தெளிவாகிக் கொள்ளுங்கள்.
* தாய்ப்பால் சுரப்பு என்று வரும் போது, அதற்கும் மார்பக அளவிற்கும் சம்பந்தமே இல்லை என நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே உங்களுக்கு சிறிய அளவில் மார்பகங்கள் இருந்தால், குறைவாக தாய்ப்பால் சுரக்குமோ என்ற அச்சம் கொள்ளத் தேவையில்லை.
* மார்பகங்களில் உள்ள கொழுப்பு திசுக்களின் அளவைப் பொறுத்து தான் ஒருவரின் மார்பக அளவு உள்ளது. எனவே மார்பக அளவிற்கும், சுரக்கும் தாய்ப்பாலின் அளவிற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.
* கர்ப்பம் மற்றும் பிரசவத்திற்கு பின் உடலில் ஏற்படும் பல ஹார்மோன் மாற்றங்களின் விளைவால், மடிச்சுரப்பிகள் தூண்டப்பட்டு, தாய்ப்பால் உற்பத்தி செய்யப்படுகிறது.
* தாய்ப்பால் உற்பத்தியான பின், மார்பகங்களின் அளவு சற்று பெரிதாகும். இதற்கு காரணம் மடிச்சுரப்பிகளின் அளவு சற்று பெரிதாவது தானே தவிர, தாய்ப்பால் உற்பத்தி மார்பக அளவைப் பொறுத்தது அல்ல.
* தாய்ப்பால் உற்பத்தி மற்றொரு காரணியாலும் பாதிக்கும். அது என்னவெனில், குழந்தை அதிகளவில் தாய்ப்பாலைக் குடித்தால், தாய்ப்பால் உற்பத்தி அதிகரிக்கும்.
* கர்ப்ப காலத்தில் அல்லது பிரசவத்திற்கு பின் மார்பக அளவில் சிறிதும் மாற்றம் இல்லாவிட்டால், அப்பெண்ணிற்கு போதுமான சுரப்பி திசுக்கள் இல்லை என்று அர்த்தம். அத்தகைய பெண்களுக்கு போதுமான அளவில் தாய்ப்பால் சுரக்காமல் இருக்கும். இப்பிரச்சனையை மருத்துவ சிகிச்சையின் மூலம் சரிசெய்ய முடியும்.
* பெண்ணிற்கு போதுமான அளவில் தாய்ப்பால் சுரக்காமல் இருப்பதற்கு அதிகமாக பிறப்பு கட்டுப்பாட்டு மாத்திரைகளை எடுத்தது, மார்பக அறுவை சிகிச்சை மற்றும் புகைப்பிடித்தல் போன்றவைகள் காரணங்களாகும்.