மாதவரம் கே.கே.ஆர். கார்டனில், உள்ள பூங்காவில் மாலை நேரங்களில் ஏராளமான ஆண்களும், பெண்களும் நடைபயிற்சி மேற்கொள்வார்கள்.
பூங்காவில் குழந்தைகள் விளையாடுவதற்கு ஊஞ்சல், சறுக்கு உள்ளிட்ட விளையாட்டு பொருட்களும் உள்ளன. இதனால் இங்கு வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறுவர்கள்-சிறுமிகளின் கூட்டமும் அதிகமாக இருக்கும்.
நேற்று இரவு 7.30 மணி அளவில் இந்த பூங்காவில் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது பூங்காவினுள் கொஞ்சம் இருட்டான பகுதியில் வாலிபர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். அவர் நடைபயிற்சி சென்ற பெண்ணை பார்த்து ஆபாசமான செயலில் ஈடுபட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த பெண் அலறியடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்தார்.
பூங்காவில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தவர்களிடம் பதட்டத்துடன் சென்று அப்பெண் முறையிட்டார். வாலிபரின் தகாத செயல்பற்றி கூறினார்.
இதனால் பயந்து போன வாலிபர் நைசாக நழுவி பூங்காவைவிட்டு வெளியில் வேகமாக சென்றார். இதையடுத்து அந்த வாலிபரை பிடிக்க அந்த பெண்ணும், பொது மக்கள் சிலரும் விரட்டிச் சென்றனர்.
அதற்குள் பூங்கா அருகில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர், வாலிபரிடம் விசாரணை நடத்திக் கொண்டிருந்தார்.
பூங்காவில் நடந்த சம்பவம் பற்றி எதுவும் அறிந்திராத நிலையில், அந்த வாலிபரிடம் சப்-இன்ஸ்பெக்டர் சாதாரணமாகவே விசாரித்தார். இதற்கிடையே வாலிபரின் செயலால் மனஉளைச்சலுக்குள்ளான இளம் பெண் விரைந்து சென்று சப்-இன்ஸ்பெக்டரிமும் முறையிட்டார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் வாலிபரை விசாரணைக்காக போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றார். பிடிபட்ட மாணவர் கல்லூரி மாணவர் என்பது தெரிய வந்தது.
இதுபற்றிய தகவல் பரவியதும் அப்பகுதி மக்களும் பூங்கா முன்பு திரண்டனர்.
குடியிருப்புகளுக்கு மத்தியில் அமைந்துள்ள இந்த பூங்காவுக்கு சமீபகாலமாக காதல் ஜோடிகளும் அதிக அளவில் வரத் தொடங்கி உள்ளனர். அவர்கள், எல்லை மீறும் சம்பவங்களும் சில நேரங்களில் நடக்கின்றன. இதனை கட்டுப்படுத்த போலீசாரும் பூங்காவுக்குள் அவ்வப்போது வந்து கண்காணிப்பில் ஈடுபடுகிறார்கள்.
இதுபோன்ற ஒரு நிலையில்தான் கல்லூரி மாணவர் ஒருவர் பூங்காவினுள் அநாகரீகமான செயலில் ஈடுபட்டிருப்பது அப்பகுதி மக்கள் மத்தியிலும், பூங்காவுக்கு தினமும் செல்பவர்களிடையேயும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று முன்தினம் இரவில் பூங்காவில் குவிந்திருந்த இளைஞர்கள் சிலர், பொதுமக்கள் அமரும் இடத்தில் தேவையில்லாமல் ‘ஸ்கெட்ச் பென்’ மூலமாக எழுதி அந்த இடத்தையே அசிங்கப்படுத்தி வைத்துள்ளனர். எனவே, பூங்காவில் நடைபெறும் இதுபோன்ற அத்துமீறல்களை கட்டுப் படுத்த வேண்டும் என்கிற கோரிக்கை வலுப்பெற்றுள்ளன.