கறுப்பாக இருப்பது ஒரு குற்றமா? கறுப்பாக இருப்பவர்கள் மட்டும் தான் ஒதுக்கப்படுவார்கள். மற்றவர்கள் தான் விரும்பப்படுவார்கள் என்று நினைப்பது குழந்தைத்தனமல்ல முட்டாள்தனம். பொதுவாக எந்த மனிதர்களுமே மற்றவர்களின் தோற்றத்திற்கு அவ்வளவாக முக்கியத்துவம் கொடுத்து நடப்பதாக நான் நினைக்கவில்லை.
பார்ப்பதற்கு கம்பீரம் இல்லாமலும், தெளிவு இல்லாமலும் இருப்பவர்களை முதன்முதலாக பார்க்கிற போது வேண்டுமானால், பொறுப்புகளை கொடுப்பதற்கு நம்பிக்கை வராமல் இருக்கலாம். ஆனால் பேசிப்பார்த்து அறிவுத்திறமையையும், செயல் திறமையையும் உணர்ந்த பிறகு யாரையும் அழகாக இல்லை என்று ஒதுக்குவதற்கு இன்று யாருமே கிடையாது.
ஆனால் கறுப்பாக இருப்பவர்கள், தன்னை அழகற்றவர்கள் என்று கருதுபவர்கள், தேவை இல்லாமல் இந்த குறைகளுக்காக வருத்தப் படுகிறார்கள் என்றே நான் நினைக்கிறேன். ஒரு பையன் நான் கண்ணாடி போட்டிருக்கிறேன் அதனால் ஆசிரியர் எனக்கு சரியாக பாடம் எடுப்பதில்லை என்று சொன்னால் அதை நம்ப முடியுமா? எந்த ஆசிரியரும் அப்படி இருப்பார்களா?
முதலில் யதார்த்தத்தை புரிந்து கொள்ளுங்கள். எடுத்தவுடன் நீங்கள் மதிக்கப் படுவது உங்கள் ஆடையை வைத்து. அதன் பிறகு நாகரீகமான உங்கள் நடையுடை பாவனையை வைத்து, மூன்றாவதாக உங்கள் அடக்கமான பேச்சை வைத்து, அதன் பிறகு தான் உங்கள் அறிவே மதிப்பீடு செய்யப் படுகிறது. ஒரு மனிதனை சிறந்தவனாக கருதுவதற்கு அழகு ஒரு காரணமே தவிர மற்ற ஒன்பது காரணங்கள் வேறு இருக்கிறது.
எனவே கறுப்பை பற்றி கவலைப்படுவதை விட்டு விட்டு அடுத்த வேலையை பாருங்கள். இருந்தாலும் பரிகாரம் என்று கேட்கும் போது அதை சொல்ல வேண்டியது எனது கடமை. இந்த விஷயத்திற்கு பரிகாரங்கள் செய்வதற்கு முன்பு சில ஆகார முறைகளை கவனிக்க வேண்டும்.
காரம், எண்ணெய் மற்றும் மசாலா பொருட்கள் உண்ணுவதை குறைக்க வேண்டும். சமைக்காத பச்சைக்காய்கறிகளை அதிகமாக பயன்படுத்த வேண்டும். பழச்சாறுகளை அடிக்கடி அருந்த வேண்டும். தினசரி இரவு நேரம் பாலில் குங்குமப்பூ சேர்த்து சாப்பிடும் பழக்கத்தை ஏற்படுத்தவும்.
இப்போது பரிகாரத்திற்கு வருகிறேன் மனிதனின் தேஜசை கட்டுப்படுத்தும் தெய்வம் முருகன். அவருக்கு செவ்வாய்க்கிழமை தோறும் விரதமிருந்து “ஓம் சரவணபவ” என்ற ஆறெழுத்து மந்திரத்தை ஜபம் செய்து வணக்கம் செலுத்த வேண்டும். தீப்புண், முகவாதம் போன்றவைகள் வந்தவர்களுக்கு ஆடைகள் வழங்கி அவர்களிடம் ஆசி பெற வேண்டும். இப்படி செய்தால் கறுப்பர்கள் எல்லோரும் சிவப்பர்கள் ஆவார்களோ என்னவோ தெரியாது நிச்சயம் உங்களிடம் ஒரு கவர்ச்சி பிறக்கும்.