கருப்பை வாய் மொட்டுக் கட்டி என்பது என்ன? (What are Cervical Polyps?)
கருப்பை வாய் என்பது கருப்பையின் அடிப்பகுதியாகும். இது பிறப்புறுப்புடன் இணைகிறது. கருப்பை வாய்ப்பகுதியில் விரல்கள் போன்று நீட்சிகள் (மொட்டு போன்று) உண்டாகும். இவையே கருப்பை வாய் மொட்டுக் கட்டிகள் எனப்படுகின்றன.
பெண்களில் 2-5% பேருக்கு இந்தக் கட்டிகள் உண்டாவதாகத் தெரிகிறது. பெரும்பாலும் இவற்றால் கெடுதல் எதுவும் இல்லை, இவை புற்றுநோய்க் கட்டிகளாகவும் இருப்பதில்லை.
காரணங்கள் (Causes)
கருப்பை வாய்ப்பகுதியில் சில செல்கள் வழக்கத்திற்கு மாறாக வளர்ச்சியடைவதால் இந்தக் கட்டிகள் உண்டாகின்றன. இந்த செல்கள் வழக்கத்திற்கு மாறாக வளர்வதற்கான சரியான காரணம் தெரியவில்லை. எனினும், பின்வருபவை இதற்குக் காரணங்களாக இருக்கலாம் என நம்பப்படுகின்றன:
நாள்பட்ட அழற்சி
கருப்பை வாய்ப்பகுதியில் நோய்த்தொற்று
ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகரித்தல்
இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுதல்
ஆபத்துக் காரணிகள் (Risk Factors)
மாதவிடாய் முற்றிலுமாக நிற்பதற்கு முந்தைய காலகட்டத்தில் இருப்பவர்களுக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் பெற்றவர்களுக்கும் இந்தக் கட்டிகள் வரும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
அறிகுறிகள் (Symptoms)
கருப்பை வாய் மொட்டுக் கட்டிகள் இருக்கும்போது அறிகுறிகள் எதுவும் ஏற்படுவதில்லை.
அறிகுறிகள் இருக்கும்பட்சத்தில் பின்வருபவை தென்படலாம்:
மிக அதிக மாதவிடாய்
உடலுறவுக்குப் பிறகு அல்லது அதிக நீர் பீய்ச்சியடித்து பெண்ணுறுப்பைக் கழுவிய பிறகு பெண்ணுறுப்பில் இரத்தம் கசிதல்
மஞ்சள் அல்லது வெள்ளை நிறத்தில் சளி போன்ற திரவம் வெளியேறுதல் (வெள்ளைப்படுதல்)
மாதவிடாய்க் காலத்தில் அல்லது மாதவிடாய் முற்றிலும் நின்றபிறகு வழக்கத்திற்கு மாறாக பெண்ணுறுப்பில் இரத்தப்போக்கு உண்டாதல்
நோய் கண்டறிதல் (Diagnosis)
பொதுவாக, மருத்துவர் கருப்பையை ஆய்வு செய்யும்போது, கருப்பை வாய்ப்பகுதியில் விரல் போன்ற மென்மையான, சிவப்பு அல்லது பர்ப்பிள் நிறத்திலான மொட்டு போன்ற கட்டிகள் இருப்பதை வைத்தே இந்தக் கட்டிகள் இருப்பதை உறுதிப்படுத்துவார்.
இந்தக் கட்டிகளின் சிறு பகுதியைக் கொண்டு திசுப்பரிசோதனை செய்யப்படலாம். சோதனை முடிவுகளில் பெரும்பாலும் அது சாதாரண, கெடுதலற்ற கட்டி என்றே தெரியவரும். மிக அரிதாக, சிலசமயம், புற்றுநோய் போன்ற வேறு பிரச்சனைகள் இருப்பதற்கான அடையாளங்கள் தெரியவரலாம்.
சிகிச்சை (Treatment)
வழக்கமாக, பாலிபெக்டாமி என்ற எளிய புறநோயாளிகள் செயல்பாட்டின் மூலமே இந்தக் கட்டிகள் அகற்றப்படும். இந்த முறையில், மருத்துவர் மொட்டுக் கட்டிகளை லேசாகத் திருகி, நீக்குவார்.
பிற வழிமுறைகள்:
அறுவை சிகிச்சை நூல்களைக் கொண்டு கட்டுவதன் மூலம் இரத்தப்போக்கு குறைக்கப்படும்.
எலக்ட்ரோக்காட்டரி: இந்த முறையில் மின்சாரம் பயன்படுத்தப்படும்.
திரவ நைட்ரஜன் கொண்டு கட்டி உறையவைக்கப்பட்டு அகற்றப்படும்.
லேசர் அறுவை சிகிச்சை
சிலசமயம், கட்டிகள் மிகப் பெரிதாக இருந்தால் அவற்றை அகற்ற அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருக்கலாம்.
தடுத்தல் (Prevention)
கருப்பை வாய்ப்பகுதியில் ஏதேனும் அழற்சி இருந்தால், உரிய நேரத்தில் அதற்கு சிகிச்சை எடுத்துக்கொள்வதன் மூலம் இந்தக் கட்டிகள் உருவாவதைத் தடுக்கலாம்.
சிக்கல்கள் (Complications)
சில கருப்பை வாய் மொட்டுக் கட்டிகள் கருப்பைப் புற்றுநோய் அல்லது கருப்பை வாய்ப் புற்றுநோயுடன் தொடர்புடையவையாக இருக்கின்றன.
அடுத்து செய்ய வேண்டியவை (Next Steps)
பெண்ணுறுப்பில் வழக்கத்திற்கு மாறான இரத்தப்போக்கு இருந்தால் அல்லது வெள்ளைப்படுதல் இருந்தால் உங்கள் மருத்துவரிடம் சென்று ஆலோசனை பெறவும். மருத்துவர் பரிந்துரைக்கும்படி பாப் சோதனைகள் செய்துகொள்ளவும்.