அடர்த்தியான மார்பகங்கள் என்றால் என்ன? (What are dense breasts?)
அடர்த்தியான மார்பகங்கள் என்பதைப் பற்றி நன்றாகப் புரிந்துகொள்ள, முதலில் பெண்களின் மார்பக உடற்கூறு அமைப்பை அறிந்துகொள்ள வேண்டும். பெண்ணின் மார்பகம் பின்வரும் பகுதிகளைக் கொண்டது:
பால் சுரப்பிகள்: இவையே தாய்ப்பால் சுரக்கும் பகுதிகள்.
குழல்கள்: பால் சுரப்பிகளில் இருந்து சுரக்கும் பாலை முலைக்காம்பிற்குக் கொண்டு செல்லும் குழல் அமைப்புகள்
கொழுப்பு மற்றும் நார்த்திசு: இவை மற்றத் திசுக்களை இறுக்கமாகப் பிணைத்து வைத்து, மார்பகங்களுக்கு வடிவத்தையும் பருமனையும் அளிக்கின்றன
மார்பகத்தில் அதிக நார்த்திச்சுக்களும் சுரப்புஅதனை அடர்த்தியான மார்பகம் என்கிறோம். பெண்களின் வயதுக்கேற்ப மார்பக அடர்த்தி மாறலாம், ஒவ்வொரு பெண்ணுக்கும் இந்த அடர்த்தி வேறுபடலாம்.
அடர்த்தியான மார்பகங்கள் உள்ளது என்பதை எப்படிக் கண்டுகொள்வது? (How does one know that they have dense breasts?)
உங்கள் மார்பகம் கெட்டியாக இருப்பதை வைத்து மட்டுமே, உங்களுக்கு அடர்த்தியான மார்பகம் உள்ளது என்று நீங்களே முடிவு செய்துகொள்ள முடியாது.
அடர்த்தியான மார்பகம் என்பது மார்பகத்தின் வடிவத்துடனோ, கெட்டித் தன்மையுடனோ சம்பந்தப்பட்டதல்ல. மம்மோக்ராம் சோதனை செய்தால் மட்டுமே, உங்களுக்கு அடர்த்தியான மார்பகம் உள்ளதா இல்லையா என்பதை உறுதிப்படுத்த முடியும். இந்தச் சோதனையில் கொழுப்புத் திசு எப்படிப் பரவியுள்ளது என்பது கண்டறியப்படும். அதன் அடிப்படையில் சோதனையின் முடிவு இருக்கும்.
மம்மோக்ராம் சோதனையின்படி மார்பக அடர்த்தியை பின்வரும் வகைகளாகப் பிரிக்கலாம்:
கிட்டத்தட்ட கொழுப்பு நிறைந்தவை: மார்பகத்தில் கிட்டத்தட்ட முழுதுமே கொழுப்புத் திசுக்களே உள்ளன, சுரப்புத் திசுக்களும் நார்த்திசுக்களும் சொற்பமாகவே இருக்கும்.
விரவிய அடர்த்தி: நார்த்திசுக்களும் சுரப்புத்திசுக்களும் நிறைந்த பகுதிகள் ஆங்காங்கே காணப்படும், சிறிதளவு கொழுப்புத் திசுக்களும் இருக்கும்.
சீரான அடர்த்தி: நார்த்திசுக்களும் சுரப்புத் திசுக்களும் சீரான விதத்தில் பரவியிருக்கும், இதனால் கட்டி போன்ற திரள் அமைப்புகள் இருப்பதைக் கண்டறிவது சிரமமாக இருக்கும்.
அதிக அடர்த்தி: இவ்வகை மார்பகங்களில் மிக அதிக அளவில் நார்த்திசுக்களும் சுரப்புத் திசுக்களும் காணப்படும். இவ்வகை மார்பகங்களில் கட்டிகள் இருப்பதைக் கண்டறிவது மிகக் கடினமாகிறது.
மார்பக அடர்த்தி முக்கியமா? (What is the significance of breast density?)
அடர்த்தியான மார்பகங்களைக் கொண்டுள்ள பெண்களுக்கு, மார்பகப் புற்றுநோய் வரும் அபாயம் நான்கிலிருந்து ஆறு மடங்கு அதிகம் என்று ஓர் ஆராய்ச்சி தெரிவித்துள்ளது.
மார்பகம் அடர்த்தியாக இருந்தால், புற்றுநோய்க் கட்டிகள் இருந்தாலும் அவை அடர்த்தியான மார்பகத்தின் திசுக்களைப் போலவே வெண்ணிறமாகத் தோற்றமளிக்கும், இதனால் மார்பகப் புற்றுநோய் இருப்பதைக் கண்டறிவது கடினமாகிறது. கொழுப்புத் திசுக்கள் கருப்பாகக் காட்சியளிக்கும், வெண்ணிறப் பின்புலத்தில் கட்டிகளை எளிதில் கண்டுகொள்ள முடியும்.
மார்பகங்கள் அடர்த்தியாக இருக்கக் காரணங்கள் என்னென்ன? (What causes dense breasts?)
சில பெண்களுக்கு மார்பகங்கள் அடர்த்தியாக இருக்க என்ன காரணங்கள் என்பது துல்லியமாகத் தெரியவில்லை. எனினும், மார்பகத் திசுக்கள் அடர்த்தியாக அமைந்திருப்பதற்கும் பின்வரும் காரணிகளுக்கும் தொடர்பிருக்கலாம் என்று கருதப்படுகிறது:
தாய்க்கு அடர்த்தியான மார்பகங்கள் இருந்தால், மகளுக்கும் அதே போல் இருக்க வாய்ப்பு அதிகரிக்கிறது (மரபியல் காரணி)
பிறக்கும்போது, வளரும் பருவத்தில் அல்லது வளர்ந்த பிறகு உடல் எடை அதிகமாக இருப்பது
நடுத்தர வயது (40-50)
மாதவிடாய் நிற்பதற்கு முன்பான காலகட்டத்தில் இருந்தால்
ஹார்மோன் சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்தால் (மாதவிடாய் நிற்பது தொடர்பாக)
அடர்த்தியான மார்பகங்கள் இருந்தால் என்ன செய்வது? (What do I do if I have dense breasts?)
உங்களுக்கு அடர்த்தியான மார்பகங்கள் இருப்பதாக உறுதியானால், பின்வரும் வழிகாட்டல்களைப் பின்பற்றவும்:
ஒவ்வொரு மாதமும் மார்பக சுய பரிசோதனை செய்துகொள்ளவும்
ஆண்டுக்கு ஒருமுறை மருத்துவரிடம் சென்று மார்பகப் பரிசோதனை செய்துகொள்ளவும்
40 வயது தொடங்கி, ஆண்டுக்கு ஒருமுறை மம்மோக்ராம் சோதனை செய்துகொள்ளவும்
பின்வரும் நடவடிக்கைகளை எடுத்து, வாழ்க்கை முறையை ஆரோக்கியமானதாக மாற்றிக்கொள்ளவும்:
உடல் எடையை ஆரோக்கியமான அளவில் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ளவும்
தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள்
ஆரோக்கியமான ஊட்டச்சத்துள்ள உணவுப் பழக்கத்தைப் பின்பற்றுங்கள்
மது அருந்துவதைத் தவிர்க்கவும்
புகைபிடிப்பவர் எனில், புகைப்பழக்கத்தை விடவும்