Home ஆரோக்கியம் மார்பக புற்றுநோயை தவிர்க்க முன்னெச்சரிக்கை பரிசோதனை

மார்பக புற்றுநோயை தவிர்க்க முன்னெச்சரிக்கை பரிசோதனை

27

மார்பக புற்றுநோய் இந்தியாவில் முன்பை விட தற்போது அதிகரித்து வருகிறது. இது வெளிநாடுகளோடு ஒப்பிடுகையில் குறைவு தான். ஆனால், வெளிநாடுகளில் எந்தவொரு அறிகுறியும் இல்லாத நிலையில் பரிசோதனை விழிப்புணர்வு இருப்பதால் அங்கு மார்பக புற்றுநோயால் ஏற்படும் இறப்பு எண்ணிக்கை குறைவாக உள்ளது. இந்தியாவில் பரிசோதனை விழிப்புணர்வு குறைவாக இருப்பதாலும் பாதிக்கப்பட்டவர்கள் புற்றுநோய் முற்றிய நிலையில் மருத்துவமனையை அணுகுவதாலும் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது.

மார்பக புற்றுநோய் வருபவர்களில் 70 சதவீதம் பேருக்கு அது வருவதற்கான காரணம் இருப்பதில்லை. மீதி 30 சதவீத பேருக்கு வருவதற்கு தாமதமான குழந்தை பிறப்பு, தாய்ப்பால் சரியாக கொடுக்காதது, தாமதமாக மாதவிடாய் நிற்பது, சந்ததிரீதியான பாதிப்பு, முட்டைப்பை புற்றுநோய், உடல் பருமன், மது மற்றும் புகைபழக்கம் ஆகியவற்றில் எதாவதொன்றோ, பலதோ காரணமாக இருக்கலாம். இதனால் ஒவ்வொரு பெண்ணும் அறிகுறிகள் தெரியாத நிலையிலும் மார்பக புற்றுநோய் வரக்கூடும் என்பதையும் அதை ஆரம்ப நிலையிலேயே டிஜிட்டல் மேமோக்கிராம் மூலம் கண்டறிய முடியும் என்ற விழிப்புணர்வு பெறுதல் அவசியம்.

ஆரம்ப நிலையிலேயே கண்டறியப்படும் புற்றுநோயை முழுமையாக குணப்படுத்த முடியும். 20 வயதிற்கு மேற்பட்ட பெண்கள் ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் முடிந்த 10 நாள்களுக்குள் சுய பரிசோதனை மூலம் தங்கள் மார்பை சோதனையிடலாம். அவ்வாறு செய்யும் சோதனையில் சின்ன கட்டிகள் தென்பட்டாலோ, காம்பு உள்ளே சென்றிருந்தாலோ, காம்பில் கசிவு இருந்தாலோ உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.கட்டிகள் எதுவும் தென்படாவிட்டாலும் கூட 40 வயதிற்கு மேற்பட்டவர்கள் கட்டாயமாக ஆண்டுக்கு ஒரு முறை டிஜிட்டல் மேமோக்ராமி பரிசோதனை செய்ய வேண்டும்.

இவ்வாறு பரிசோதனையில் கண்டறியப்படும் கட்டிகள் சாதாரண கட்டிகளா அல்லது புற்றுநோய் கட்டிகளா என்பதை டிஜிட்டல் மேமோகிராம் மற்றும் சதை பரிசோதனையில் கண்டறிந்து கூற முடியும். புற்றுநோய் உறுதி செய்யப்பட்டால், மார்பகத்தில் உள்ள புற்றுநோய் பாதிக்கப்பட்ட பாகத்தை அறுவை சிகிச்சை நிபுணர் மூலம் அப்பாகத்தை மட்டும் அகற்றலாம். இதனால் முழு மார்பையும் அகற்ற வேண்டிய நிலை ஏற்படாது. மார்பக புற்றுநோய் கட்டியாக வந்த பின்னர் தான் சிகிச்சைக்கு வருகிறார்கள். இதனால் பலருக்கு பாதிக்கப்பட்ட மார்பை அகற்ற வேண்டிய நிலை ஏற்படுகிறது. இதை தவிர்க்க ஆரம்ப நிலையிலேயே புற்றுநோய் தாக்கத்தை கண்டறிய வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.