உடல் கட்டுப்பாடுகள்:சமஸ்கிருதத்தில், பவனா என்றால் காற்று என்றும், முக்தா என்றால் விடுவித்தல் என்றும் பொருள். மலச்சிக்கல், வாயுத்தொல்லை போன்ற பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு பவனமுக்தாசனம் மிகுந்த பலனளிக்கும் ஆசனமாகும். ஒவ்வொரு முறையும் ஒரு காலுக்கு மட்டும் பயிற்சி கொடுக்கும் இந்த ஆசனம், முதலில் மேல்நோக்கிச் செல்லும் பெருங்குடலுக்கும் பிறகு கீழ்நோக்கிச் செல்லும் பெருங்குடலுக்கும் அழுத்தம் கொடுக்கிறது. இந்த ஆசனம், வயிற்றுக்குள் சிக்கியிருக்கும் காற்றை விடுவிக்கிறது, செரிமானத்தைத் தூண்டுகிறது. இந்த ஆசனம் மிகுந்த நிவாரணமளிக்கக்கூடியது, தொடர்ந்து பயிற்சி செய்துவந்தால் வியக்கத்தக்க பலன்களை அளிக்கும்.
செய்முறை
கால்களை ஒன்றாக வைத்து நீட்டியபடி மல்லாந்து படுத்துக்கொள்ளவும்.
மூச்சை உள்ளிழுத்து வெளிவிடவும். மூச்சை வெளிவிடும்போது, வலது முழங்காலை மார்பை நோக்கிக் கொண்டுவரவும். காலைச் சுற்றி கைகளைக் கோர்த்துக்கொண்டு காலை கீழ்நோக்கி அழுத்தவும், இதனால் உங்கள் தொடை வயிற்றை அழுத்தும்.
ஆழ்ந்து மூச்சை உள்ளிழுக்கவும். மூச்சை வெளிவிடும்போது தலை, கழுத்து மற்றும் மார்புப் பகுதியை தரையிலிருந்து மேலே தூக்கி, உங்கள் தாடையால் முழங்காலைத் தொட முயற்சிக்கவும்.
சில வினாடிகள் இந்தத் தோரணையில் இருந்துகொண்டே ஆழ்ந்து சுவாசிக்கவும்.
மூச்சை வெளிவிட்டுக்கொண்டே மீண்டும் ஆரம்ப நிலைக்கு வரவும்.
இதே பயிற்சியை மற்றொரு காலைக்கொண்டு செய்யவும். பிறகு இரண்டு கால்களையும் கொண்டு செய்யவும்.
இந்த ஆசனம் செய்யும் போது மனதில் கொள்ள வேண்டிய விஷயங்கள்
கால்விரல்கள் நீட்டியபடி இருக்க வேண்டும்.
இந்தத் தோரணையில் இருக்கும்போது தொடர்ந்து ஆழ்ந்து சுவாசிக்க வேண்டும். நீங்கள் மூச்சை வெளிவிடும்போது, முழங்காலைப் பிடித்திருக்கும் கைகளால் நன்கு அழுத்தி, மார்புப் பகுதியில் முழங்கால் நன்றாக அழுத்தும்படி செய்ய முயற்சிக்கவும்.
இரு கால்களையும் கொண்டு இதைச் செய்யும்போது, முன்னும் பின்னுமாகவும், பக்கவாட்டிலும் உருளலாம்.
பயிற்சி செய்து முடிக்கும் வரை, எப்போதும் உங்கள் அடிமுதுகு யோகா பாயில் அல்லது தரையில் பட்டுக்கொண்டே இருக்க வேண்டும்.
பவனமுக்தாசனத்தின் நன்மைகள்
வயிற்றுப் பகுதியில் முறையான அழுத்தம் கொடுக்கப்படுவதால், வயிற்றில் சிக்கியிருக்கும் வாயு வெளியேறுகிறது.
மலச்சிக்கலைப் போக்கி செரிமானத்தை மேம்படுத்துகிறது.
அடிமுதுகை வலுப்படுத்துகிறது.
வயிற்றிலும் இடுப்பிலும் உள்ள கொழுப்பைக் குறைக்கிறது என்று கருதப்படுகிறது.
கழுத்து மற்றும் முதுகை நன்கு விரிவடையச் செய்கிறது.
கல்லீரல், மண்ணீரல், சிறுகுடல் மற்றும் பெருங்குடலைத் தூண்டி நன்கு செயல்படவைக்கிறது.
அடிவயிறு, தொடைகள் மற்றும் இடுப்புப் பகுதித் தசைகளை டோனிங் செய்கிறது.
எச்சரிக்கை (Caution)
இது மாதவிடாய் நாட்களிலும் கர்ப்பத்தின்போதும் இந்த ஆசனத்தை செய்யக்கூடாது.
உயர் இரத்த அழுத்தம் அல்லது இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனை உள்ளவர்கள் இந்த ஆசனத்தை செய்யக்கூடாது.
குடலிறக்க நோய், முதுகெலும்பு வட்டு விலகல், விரைச்சிரை முறுக்கம் அல்லது நெஞ்செரிச்சல் (அசிடிட்டி) போன்ற பிரச்சனைகள் இருப்பவர்கள் இந்த ஆசனத்தைத் தவிர்க்க வேண்டும்.
முதுகெலும்பில் அடிபட்டவர்கள் அல்லது ஸ்கையாட்டிக்கா பிரச்சனை உள்ளவர்கள் இந்த ஆசனத்தைச் செய்ய முயற்சிக்கக்கூடாது.