Home உறவு-காதல் மன இறுக்கத்தில் இருக்கும் காதலனை கூலாக்க சில டிப்ஸ்…

மன இறுக்கத்தில் இருக்கும் காதலனை கூலாக்க சில டிப்ஸ்…

28

இன்றைய அவசர உலகில் அனைவரும் விரைவில் சோகத்திலும், மன இறுக்கத்திலும் உள்ளாகிறோம். இந்த மாதிரியான நிலைமை வந்தால் மிகவும் கஷ்டம். சில நேரங்களில் இத்தகைய சோகம் அல்லது மன இறுக்கமானது, காதல் தோல்வி அல்லது அலுவலகத்தில் அதிகப்படியான வேலை அல்லது குடும்ப கஷ்டம் போன்ற சில காரணங்களால் இருக்கும். சில நேரங்களில் காரணமே இல்லாமல் மனமானது கஷ்டமாக இருக்கும். இத்தகைய கஷ்டத்தினால் ஏற்படும் மன இறுக்கத்தை நம்மிடம் பழகுபவரிடம் ஒருசில செயல்கள் மூலம் வெளிப்படுத்துவோம். குறிப்பாக இந்த மாதிரியான நிலைமை நமக்கு மிகவும் நெருக்கமானவருக்கும் இருக்கும். அது தாய், தந்தை அல்லது காதலனுக்கு கூட ஏற்படலாம். இவ்வாறு மன இறுக்கத்தில் இருக்கும் போது, அவர்களை கூர்ந்து கவனித்தால், அவர்களது நடவடிக்கைகளில் ஒருசில மாற்றங்கள் தெரியும். அதில் சரியாக பேசாமல் இருப்பது, எங்கும் வெளியே செல்லாமல் இருப்பது,அப்படியே வெளியே சென்றாலும் முன்பு போல் சந்தோஷாமாக இல்லாமல் இருப்பது போன்றவற்றைக் கொண்டு அறியலாம். இவ்வாறெல்லாம் செய்தால், செய்பவரின் மேல் அனைவருக்குமே கோபம் வரும். சில நேரங்களில் இந்த செய்கைகளால், காதலனுக்கு தம்மை பிடிக்கவில்லை போலும். அதனால் இவ்வாறெல்லாம் நடக்கிறார் என்று நினைப்பதுண்டு. ஆனால் இந்த செய்கைக்கு பின்னால் மன இறுக்கம் என்ற ஒன்றும் உள்ளது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். மன இறுக்கமானது ஒருவருக்கு வந்தால்,அவர்களின் நடவடிக்கைகள் மிகவும் கொடியதாக இருக்கும். ஆனால் மன இறுக்கத்தால் பாதிக்கப்பட்டு தான் நடந்து கொண்டார் என்று தெரிந்தால், அதனை அவர்களிடம் இருந்து வெளியேற்றி அவர்களை சந்தோஷமாக வைத்துக கொள்ள வேண்டியது ஒவ்வொரு காதலியின் கடமையாகும்.

இப்போது அவ்வாறு மன இறுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள காதலனிடம் எப்படி நடந்து கொண்டு, அவர்களது மன இறுக்கத்தை போக்குவது என்று சில டிப்ஸ்களைக் கொடுத்துள்ளோம். அதைப் படித்து அவற்றை பின்பற்றி,உங்கள் காதலனை சந்தோஷமாக வைத்துக் கொள்ளுங்கள்.

காரணத்தை கண்டறியுங்கள்

உங்கள் காதலன் மன இறுக்கத்தில் இருந்தால், முதலில் என்ன காரணம் என்று தெரிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் தற்போதுள்ள காலத்தில் வேலை கிடைப்பது கஷ்டமாக இருப்பதால், ஆண்கள் தங்களது எதிர்காலத்தை நினைக்கும் போது கேள்விக்குறியாக உள்ளது. எனவே வாழ்க்கையை நினைத்து பல ஆண்கள் விரைவில் மன இறுக்கத்திற்கு ஆளாகின்றனர். ஆகவே உங்கள் காதலன் எதற்கு மனம் உடைந்துள்ளார் என்ற காரணத்தை கண்டறியுங்கள்.

மனம் விட்டு அழுவதற்கு தோள் கொடுங்கள்

ஆண்கள் எப்போதும் தங்களது ஈகோவை அவ்வளவு எளிதில் விடமாட்டார்கள். எவ்வளவு தான் மனம் உடைந்து போயிருந்தாலும், முகத்தை மட்டும் நன்கு ஸ்ட்ராங்காக வைத்திருப்பார்கள். ஆனால் காதலன் எவ்வளவு தான் வெளியே சோகத்தை வெளிப்படுத்தாமல் இருந்தாலும், காதலிக்கு அவர்களின் நிலை சொல்லாமலேயே புரியும். எனவே அந்த நிலையில் “அவர்களிடம் நான் உனக்கு இருக்கிறேன், என்ன பிரச்சனை” என்று கேட்டு, அவர்கள் மனம் விட்டு அழுவதற்கு தோள் கொடுங்கள்.

பொறுமையாக இருங்கள்

மன இறுக்கத்தினால் பாதிக்கப்பட்ட ஆண்களுக்கு கோபம் அதிகம் வரும். அவர்கள் தேவையில்லாமல் கத்துவார்கள். எனவே அப்போது அவர்களிடம் வாக்குவாதம் செய்யாமல், அவர்கள் என்ன சொன்னாலும் பொறுமையாக இருங்கள்.

தேவையில்லாமல் அட்வைஸ் பண்ணாதீர்கள்

ஒருவர் கடுமையான மன கஷ்டத்தில் இருக்கும் போது, அவர்களுக்கு அதிகப்படியான அட்வைஸ் செய்யாமல், அவர்கள் சொல்வதை கொது கொடுத்து கேட்டு,அவர்களுக்கு ஆதரவாக இருங்கள். இதனால் அவர்கள் மனம் ரிலாக்ஸ் ஆகும்.

உங்கள் காதலே அருமையான மருந்து

தேவையில்லாமல் மன இறுக்கத்தில் இருக்கும் காதலனிடம், நீங்கள் அவர்களை எவ்வளவு காதலிக்கிறீர்கள் என்று சொல்லுங்கள். இதனால் ஆரம்பத்தில் எரிச்சல் அடைந்தாலும், பின் அதை கேட்க கேட்க அவர்களது மனம் அமைதியாகி,உங்கள் மீது அன்பு அதிகரித்து, உங்களது பாசத்திற்கு ஏங்குவார்கள். இந்நேரத்தில் அவர்களிடம் காதலுடன் பேசுங்கள். இதனால் அவர்களை மன இறுக்கத்தில் இருந்து விடுவிக்கலாம்.

அதிகம் எதிர்பார்க்காதீர்கள்

காதலன் மன இறுக்கத்தில் இருக்கும் போது, அவர்களை அவர்களாக இருக்க விடுங்கள். அவர்கள் உங்களை கண்டு கொள்ளவில்லை என்றால், நீங்கள் அவர்களை அளவுக்கு அதிகமாக அக்கறை கொள்ளுங்கள். மேலும் நீங்கள் பேசுவதை கேட்க வற்புறுத்தாதீர்கள். பொறுமையாக இருந்து அவர்களது போக்கில் இருக்க விடுங்கள். இதனால் நாளடையில் உங்கள் ஞாபகம் வந்து,உங்களை காண வருவார்கள்.

தனிமையில் விடாதீர்கள்

காதலன் மன இறுக்கத்தில் இருக்கிறான் என்று அவர்களை கண்டு கொள்ளாமல் இருக்க வேண்டாம். அவ்வப்போது அவர்களுக்கு போன் செய்வது, மெசேஜ் செய்வது என்று இருங்கள். “என்ன செய்து கொண்டு இருக்கிறாய், சாப்பிட்டாயா” என்பன போன்றவற்றை கேளுங்கள். இதனால் அவர்களுக்கு எந்நிலையிலும் நீங்கள் இருக்கிறீர்கள் என்ற எண்ணம் உருவாகி,மன இறுக்கத்தில் இருந்து விடுபடுவார்கள்.