இரட்டை குழந்தையை பெற்ற பெற்றோரா நீங்கள்? கடவுள் உங்களைக் கூடுதலாக ஆசிர்வதித்திருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். ஆனால் இரண்டு குழந்தையையும் ஒரே நேரத்தில் எப்படி சமாளிப்பது என்றும் நீங்கள் தெரிந்து கொண்டே ஆக வேண்டும்.
இரட்டை குழந்தைகளை வளர்ப்பது கொஞ்சம் சவாலான வேலை தான். அவர்களை சமாளிப்பது எப்படி எனக் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம்.
அட்டவணை போட்டுக் கொள்ளுங்கள் தினசரி குழந்தைகளுக்காக செய்ய வேண்டிய வேலைகளைப் பட்டியல் போட்டுக் கொள்ளுங்கள்.
இரண்டு குழந்தைகளுக்கும் அடுத்தடுத்து பணிவிடைகளை செய்யுங்கள். குறிப்பாக, ஒரே நேரத்தில் இரண்டு குழந்தைகளையும் கவனிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்.
நாப்கின் மாற்றுவது, குளிக்க வைப்பது, உணவு கொடுப்பது போன்றவற்றை ஒரே நேரத்தில் செய்யுங்கள். அப்போதுதான் இரண்டு குழந்தையின் மீதும் சமமான அக்கறையும் கவனமும் இருக்கும்.
சுகாதாரம் முக்கியம்
ஒரு குழந்தை என்றாலே பார்த்துப் பார்த்து செய்ய வேண்டியிருக்கும். இரண்டு குழந்தைகள் ஒரே வீட்டில் வளரும்போது நோய் தொற்றுக்கள் உண்டாவதற்கான வாய்ப்புகள் அதிகம்.
இரட்டை குழந்தைகளைப் பொருத்தவரையில், ஒரு குழந்தைக்கு எதாவது உடல்நலக் கோளாறு தோன்றினால் மற்றொரு குழந்தைக்கும் பரவிவிடும்.
அதனால் இருக்கும் இடம், உணவு என எல்லாவற்றிலும் கவனமாக இருக்க வேண்டும். முடிந்தால் இரண்டு குழந்தைகளையும் தனித்தனி அறையில் வைத்து வளர்ப்பது நல்லது. மருத்துவ நிபுணர்களும் இதையே பரிந்துரைக்கிறார்கள்
தனித்தனி நபராக பார்க்க வேண்டும்
பெற்றோர்கள் பெரும்பாலும் தங்கள் குழந்தைகள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றுதான் விரும்புவார்கள். அதுவும் குறிப்பாக, இரட்டைக்குழந்தைகள் என்றால் ஒரே மாதிரி செயல்பட வேண்டும் என்ற விருப்பம் இருக்கும்.
ஆனால் அது முற்றிலும் தவறான அணுகுமுறை. ஏனென்றால் ஒவ்வொருவருக்கும் தனித்துவம் இருக்கும். அதனால் இருவரையும் வேறு வேறு நபராக தனித்தனியே அணுகுங்கள். இருவருக்கும் உள்ள தனித்தனியான விருப்பு, வெறுப்புகளை முக்கியமாக கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஒப்பிடுவதை தவிர்க்கவும்
நிச்சயமாக ஒரு குழந்தையை மற்றொரு குழந்தையோடு ஒப்பிட்டுப் பார்ப்பதைத் தவிர்த்துவிடுங்கள். அது உங்கள் குழந்தைகளை எரிச்சலூட்டும். அதனாலேயே ஒருவரை மற்றொருவர் வெறுத்துவிடுவார்கள்.
அது நாளாக, நாளாக பகையாகக்கூட மாறிவிடும். அதில் பெற்றோர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டியது அவசியம்.இவற்றையெல்லாம் சரியாக செய்து வந்தால் போதும். இரட்டைக் குழந்தைகளை மிக எளிதாக உங்களால் சமாளிக்க முடியும்.