கீழே விழுந்து அடிபட்டால் முதலில் பாதிக்கப்படுவது மணிக் கட்டாகத்தான் இருக்கும். மணிக்கட்டு முறிவு அடிக்கடி நாம் கேள்விப்படுவதுண்டு. இதற்கு காரனம் அங்கே தசைகள் அதிகம் இல்லாமல் இருப்பதால்தான். வெறும் எலும்புகள் மட்டும் கூடும் அந்த இடத்தில் வேகமாய் தாக்கும்போது முறிவு ஏற்படுகிறது. மணிக் கட்டைப் போலவே இன்னும் பலமாக காக்கப்படவேண்டிய பகுதி நமது முதுகு. முதுகு திடமாக இருந்தால், நம்மால் எதையும் தாங்கும் சக்தி கிடைக்கும். உடலுக்கு பக்க பலமாகவும் ஆதாரமாகவும் இருப்பது முதுகுதான். இன்றைய கால கட்டத்தில் தவறான முறையில் அமர்ந்து, அல்லது போதிய உடற்பயிற்சி தராததால், சீக்கிரம் நோய்வாய்படுகிறோம். நல்ல ஆரோக்கியமான உணவு, யோகா ஆகிய்வற்றை தினமும் கடைபிடித்தால் 100 வயதிலும் திடமாக இருக்கலாம். யோகாவில் முதுகிற்கும், மணிக்கட்டிற்கும் ஒருசேர பலமளிக்கும் ஆசனம் உள்ளது தெரியுமா? தொடர்ந்து படியுங்கள்.
பூர்வோத்தனாசனா : பூர்வ என்றால் சமஸ்கிருதத்தில் கிழக்கு என்று அர்த்தம் உத்தன என்றால் தீவிரமாக வளைத்தல் என்று பொருள். முதுகை வளைத்து பின்பக்கமாய் கைகளை வளைப்பதால் இந்த பெயர் பெற்றது.
பூர்வோத்தனாசனா : இந்த ஆசனத்தை செய்யும்போது, மணிக்கட்டிற்கும், முதுகிற்கும் அதிக ரத்த ஓட்டம் பாய்வதால் விளையாட்டு வீரர்கள் இதனை செய்தால் மிகுந்த பலத்தை பெறலாம்.
பூர்வோத்தனாசனா : யோகாவை புதிதாக செய்பவர்களுக்கு ஆரம்பத்தில் இந்த ஆசனத்தை செய்வது கடினமாகத்தான் இருக்கும். ஆனால் செய்தால் பழக பழக மிகுந்த தைரியத்தையும் , முதுகு வலி , கழுத்து வலி வராமலும் உங்களை பாதுகாக்கும். அதோடு உங்கள் உடலிற்கு நெகிழ்வுத் தன்மையை தரும்.
செய்முறை : முதலில் கால் நீட்டி அமருங்கள். முதுகை வளைக்காமல் நிமிர்ந்து இருங்கள். இடுப்பிற்கு அருகே உள்ளங்கைகள் தரையோடு பதிந்திருக்க வேண்டும்.
செய்முறை : இப்போது கைகளையும், பாதங்களையும் தரையோடு உந்தி, இடுப்பை மேலே தூக்குங்கள். மெதுவாக உடலையும் சேர்த்து தூக்கி, கைகளாலும் , பாதங்களாலும் பேலன்ஸ் செய்து கொள்ளுங்கள். சில நொடிகள் அப்படியே இருந்து விட்டு மெதுவாக இயல்பு நிலைக்கு வாருங்கள்.
பலன்கள் : முதுகு வலிமை பெறும். மணிக்கட்டு பலம் பெறும். கால், தோள்பட்டைகளில் உள்ள தசைகள் இறுக்கமடைகின்றன. மார்புக் கூடு விரிவடையும். மனது புத்துணர்வு பெறும். இறுக்கம் குறையும்.