பொது மருத்துவம்:முதுகில் மேல்பகுதி, நடுப்பகுதி, கீழ்பகுதி என மூன்று வகையான கட்டமைப்புகளில் வலி ஏற்படுகிறது.
புகை பிடிக்கும் பழக்கம் உடையவர்கள் முதுகுவலி பாதிப்புக்கு அதிகம் ஆளாவார்கள். தொடர்ந்து புகை பிடிப்பதன் மூலம் முதுகெலும்பில் சிதைவு ஏற்படக்கூடும். சிகரெட்டில் இருக்கும் நிகோடின் நச்சுத்தன்மையை ஏற்படுத்தி முதுகெலும்பை பலவீனப்படுத்தும். முதுமை பருவத்தை எட்டும்போது அதன் பாதிப்பு அதிகமாகும். கடும் முதுகுவலியால் அவதிப்பட நேரிடும்.
மன அழுத்தமும் முதுகுவலியை ஏற்படுத்தும். மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகும்போது முதுகு தசைகள் இறுக்கமடைய ஆரம்பித்துவிடும். முதலில் முதுகுவலி குறைவாக இருக்கும். நேரம் செல்ல செல்ல வலியின் தீவிரம் அதிகமாகும்.
உடல் எடையை கட்டுக்கோப்பாக பராமரிக்க விரும்புபவர்களில் பெரும்பாலானோர் ஜிம்முக்கு சென்று அதற்கான பயிற்சிகளை மேற்கொள்கிறார்கள். அதற்காக இப்போது நிறைய பேர் வீடுகளிலேயே சைக்கிளிங் பயிற்சி மேற்கொள்ள தொடங்கிவிட்டார்கள். அந்த பயிற்சியை முறையாக மேற்கொள்ளாவிட்டால் முதுகு தசைகள் அழுத்தத்திற்கு உள்ளாகும். தசைகளின் செயல்பாடு அளவுக்கு அதிகமாகும்போது முதுகுவலி தோன்றும்.
உடல் தசைகள் முழுவதும் சீராக அமைந்து உடல் எடையை சுமப்பதற்கு ஏற்பவே முதுகெலும்பு வடிவமைக்கப்பட்டிருக்கிறது. அதிக எடை அல்லது உடல்பருமனாக இருக்கும்போது அந்த கூடுதல் எடையை தாங்குவதற்கு முதுகெலும்பு கடினமாக உழைக்க வேண்டியிருக்கும். இறுதியில் எலும்பு தசைகள் சேதமடைந்து முதுகு வலியை ஏற்படுத்திவிடும்.
இரு கால்களின் நீளத்தில் வேறுபாடு கொண்டவர்களும் முதுகுவலியால் பாதிக்கப்படுவார்கள். கால்களின் நீளத்தில் மில்லி மீட்டர் அளவில் வேறுபாடு இருந்தால்கூட பாதிப்பை ஏற்படுத்திவிடும். கால்களின் உயரத்தை சீராக்கும் விதத்தில் ஷூக்களை அணிவது நல்லது.
தசை நார்களில் ஏற்படும் காயங்களுக்கும், முதுகுவலிக்கும் தொடர்பு இருக்கிறது. காயங்கள் வலியை ஏற்படுத்தும்போது முதுகெலும்பை சுற்றிலும் பாதிப்பு உருவாகும். அது வலியை அதிகப்படுத்திவிடும்.