Home குழந்தை நலம் குழந்தைகளுக்கு அவசர அவசரமாக உணவு ஊட்டக்கூடாது

குழந்தைகளுக்கு அவசர அவசரமாக உணவு ஊட்டக்கூடாது

28

Captureஒரு வயதுக்கு மேல் குழந்தைகளின் உணவு முறையில் நிறைய மாற்றங்கள் தேவைப்படும். இதனால் குழந்தையின் வளர்ச்சி சீராக இருக்கும். சிலர் குழந்தைகள் சாப்பிடுவதில்லை என்று கவலைப்படுவார்கள். முதலில் அதற்கு என்ன காரணம் என்பதை அறிந்துகொள்ளுங்கள்.

பொதுவாக குழந்தைகள் அழுது கொண்டிருக்கும் போதோ, கோபத்தில் இருக்கும் போதோ அவர்களுக்கு உணவு கொடுப்பதை தவிர்க்க வேண்டும். பெரியவர்களாகிய நாமே கோபத்தில் உள்ளபோது உண்ண மாட்டோம். குழந்தைகளும் இதற்கு விதிவிலக்கல்ல.

குழந்தை சாப்பிடவில்லையென்றால் உடனே குழந்தையை சில தாய்மார்கள் மிரட்டுவார்கள். சிலர் பயம் காட்டுவார்கள், சிலர் அடித்து சாப்பாடு ஊட்டுவார்கள்.

குழந்தைகளை மிரட்டும்போது அவர்கள் மன நெருக்கடியும், டென்சனையும் அனுபவிக்க நேரிடும். இதனால் குழந்தைகள் உணவை அறவே வெறுப்பார்கள். அந்த நேரத்தில் எந்த உணவை வாயில் வைத்தாலும் துப்பி விடுவார்கள்.

அதுபோல் குழந்தைகளுக்கு அவசர அவசரமாக உணவு ஊட்டக்கூடாது. தாயின் அவசரத்திற்கு தகுந்தபடி குழந்தையால் மின்னல் வேகத்தில் சாப்பிட முடியாது. சிறிதளவு உணவு கொடுத்தாலும், பொறுமையாகவும், நிதானமாகவும் ஊட்ட வேண்டும்.

குழந்தைகளை இயந்திரமாக நினைக்காமல் அவர்களை ஜீவன்களாக நினைத்து உணவு முதல் எல்லாவற்றிலும் அக்கறை எடுத்துக்கொண்டால் தான் எதிர்கால குழந்தை ஆரோக்கியமானதாகவும், அற்புத குணம் கொண்டதாகவும் வளரும்.

1 வயது முதல் குழந்தைகளுக்கு திட உணவுகளைக் கொடுக்க ஆரம்பிக்க வேண்டும். ஆரம்பத்தில் அதன் சுவையை அறியாமல் குழந்தை சாப்பிடாமல் துப்பும் அல்லது வாந்தி எடுக்கும். இதனால் குழந்தைக்கு பிடிக்கவில்லை என்று எண்ணி பழக்கப்படுத்தாமல் விட்டுவிடக்கூடாது. பொறுமையோடு மீண்டும் மீண்டும் கொடுத்துப் பார்க்கவேண்டும். அப்போதுதான் அதன் சுவை குழந்தைக்கு பிடித்து விருப்பத்தோடு சாப்பிட ஆரம்பிக்கும்.

உணவை சிறிது சிறிதாக கொடுக்க வேண்டும். இந்த திடமான உணவுகள் குழந்தைக்கு செரிமானம் ஆக 3 மணி நேரமாவது ஆகும். எனவே அடிக்கடி உணவைத் திணிக்கக் கூடாது.

ஆவியில் வேகவைத்த மாவு உணவுகள், அதாவது இட்லி, இடியாப்பம், வேகவைத்து மசித்த உருளைக் கிழங்கு, நன்கு வேகவைத்த முட்டை, ஆவியில் வேகவைத்த நேந்திரம் பழம் போன்றவற்றைக் கொடுக்கலாம்.

மிளகு கலந்து குழைய வேகவைக்கப்பட்ட வெண்பொங்கல், குழைத்த சாதத்துடன், மோர், இரசம், பருப்பு, கடைந்த கீரை இவற்றில் ஏதாவது ஒன்று சேர்த்து கொடுக்க வேண்டும்.

வேகவைத்து மசித்த காய்கறிகள், வேகவைத்த காரட், வேகவைத்த ஆப்பிள் போன்றவற்றை கொடுக்கலாம்.

இரவில் காய்ச்சிய பால் கொடுக்க வேண்டும்.

ஒன்றரை வயதுக்கு மேல் நன்கு வேகவைத்த ஆட்டிறைச்சி, ஈரல், மீன் போன்ற மாமிச உணவுகளை சிறிதளவு கொடுக்கலாம்.

சப்பாத்தி, ரொட்டி, பிரட் போன்றவற்றை குறைந்த அளவு கொடுக்கலாம்.

குழந்தைக்கு பல் முளைத்து மென்று சாப்பிடும் அளவு வந்தவுடன் வேகவைத்த பருப்புகள், தானிய வகைகளைக் கொடுக்க வேண்டும். காரட், காலிபிளவர், பசலை கீரை, வேகவைத்த முட்டை தொடர்ந்து கொடுக்க வேண்டும்.

பழத்துண்டுகள் தோல் நீக்கி கொடுக்க வேண்டும். பப்பாளி, ஆப்பிள், ஆரஞ்சு, திராட்சை போன்றவற்றையும் கொடுக்கலாம்.