உங்கள் செல்லக் குழந்தையின் இரண்டாவது பிறந்தநாளை சந்தோஷமாகக் கொண்டாடிவிட்டீர்களா! மகிழ்ச்சி! அதே சமயம் உங்கள் பேச்சுக்கு மறுப்பு கூறும் அளவுக்கு அவர்களின் அறிவுத்திறனும் மொழித் திறனும் வளர்ந்திருக்கும். நீங்கள் சொல்வது எதையும் கேட்கமாட்டார்கள், அடங்கமாட்டார்கள், கஷ்டம் தான்!
இப்போதுதான் உங்கள் குழந்தை தனது மனதில் நினைப்பதை வெளிப்படுத்தக் கற்றுக்கொண்டிருக்கும், சில சமயம் அவர்கள் என்ன யோசிக்கிறார்கள், எப்படி யோசிக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வது கடினமாக இருக்கும், ஆம். ராக்கெட் எப்படி வேலை செய்கிறது என்பதைப் புரிந்துகொள்வதை விட இது கடினமாக இருக்கலாம்!
நீங்கள் அவர்களிடம் வாதாடலாம் அல்லது அவர்கள் கூறுவதற்கு மறுப்பும் கூறலாம். ஆனால் தேம்பி அழும் இரண்டு வயது குழந்தையைச் சமாளிப்பது மிகக் கடினம், அதுவும் அவர்களுக்கு என்ன பிரச்சனை என்பதை உங்களால் புரிந்துகொள்ள முடியாத சூழ்நிலையில் இது மிகவும் பெரிய சிரமமாக இருக்கும்.
என்ன தவறாகிப்போனது?அதிகம் செல்லம் கொடுத்ததால் இப்படிப் பிடிவாதம் பிடிக்கும் குணம் வந்துவிட்டதோ? அல்லது ஒருவேளை குழந்தைக்கு பாதுகாப்பற்ற உணர்வைத் தரும் ஏதேனும் பிரச்சனையைக் குறித்து கவனிக்காமல் விட்டுவிட்டோமா?
இப்படியெல்லாம் நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. இவை இரண்டுமே காரணமில்லை. இந்தப் பிரச்சனையை உங்களுக்குப் புரிய வைக்க முயற்சி செய்யவே இந்தக் கட்டுரை!
இந்த இரண்டு வருடங்கள் குழந்தையின் வாழ்க்கையில் சற்று சிக்கலான கட்டம், இப்போது அவர்களுக்கு சுதந்திரமாகச் செயல்பட்டு தனது ஆசைகளை நிறைவேற்றிக்கொள்ள வேண்டும் என்ற உந்துதல் அதிகமாக இருக்கும். பெற்றோர்களை நம்பி அவர்கள் சொற்படிக் கேட்க வேண்டும் என்ற கட்டாயத்திற்கும் அவர்களின் ஆசைக்கும் இடையே ஒரு பெரிய போராட்டம் எப்போதும் நடக்கும்.
இரண்டு வயதுக்குப் பிறகு நரம்பு மண்டல செயல்பாடுகள், உணர்வுகள், அறிவுத்திறன் ஆகியவற்றில் பல பெரிய மாற்றங்களை குழந்தைகள் எதிர்கொள்வார்கள். தன்னாலேயே ஒரு செயலைச் செய்ய முடியும் என்று அவர்கள் பிடிவாதமாக நம்புவார்கள், ஆனால் அவர்களால் செய்ய முடியாமல் சிரமப்படுவார்கள். இது அவர்களின் மனதில் பெரிய மன உளைச்சலை ஏற்படுத்தும். இது போன்று பல முறை நடக்கும்.இதுமட்டுமின்றி, அவர்கள் விரும்பும் அளவுக்கு வேகமாக அவர்களால் நடக்க, ஓட முடியாது, இந்த வயதில் அவர்களின் உணர்வுகளையும் கட்டுப்படுத்த முடியாது, அவர்கள் நினைப்பதையும் தெளிவாக நமக்குத் தெரியப்படுத்த முடியாது. இதன் விளைவாக, அவர்கள் அதிகம் அழுவார்கள், உங்களிடம் கோபத்தைக் காட்டுவார்கள்.
இந்தச் சூழ்நிலையை எப்படிச் சமாளிப்பது? (So how do you diffuse the situation?)
வீட்டில் (At home)
அமைதியாக இருங்கள், அவர்களின் ஒரு குறிப்பிட்ட செய்கையை மாற்றித் திருத்த, மீண்டும் மீண்டும் வற்புறுத்தக்கூடாது.
அவர்களுக்கு சவால் விடாதீர்கள், அவர்களைப் பார்த்து கேலியாக சிரிக்கக்கூடாது.
குழந்தைகள் பெற்றோரிடம் இருந்து தான் எல்லாவற்றையும் கற்றுக்கொள்கிறார்கள் என்பதை எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். எனவே நீங்கள் கோபப்பட்டால், நீங்கள் பெரியவராகவும் அவர்கள் குழந்தைகளாகவும் இருப்பதால் வேறு வழியின்றி ஏதோ ஒரு சில சூழ்நிலைகளில் அதைக் கண்டு அவர்கள் அடங்கலாம், ஆனால் ஒருபோதும் இதைச் செய்யாதீர்கள் ஏனெனில் இப்படிச் செய்வது அவர்களுக்குள் இருக்கும் கோபத்தை இன்னும் தீவிரப்படுத்தலாம்.
அவர்கள் அமைதியடையும் வரை, அவர்களின் கண்களைப் பார்க்காமல் கண்டுகொள்ளாமல் இருக்கவும்.
அவர்கள் சாந்தமானதும், அமைதியாக அவர்களிடம் பேசி, கோபப்படாமல், ஆர்ப்பாட்டம் செய்யாமல், அழாமல் தனக்கு என்ன வேண்டும் என்பதை எபபடிக் கூற வேண்டும் என்பதை அவர்களுக்குப் புரியவைக்க முயற்சி செய்யவும். இப்படிச் செய்யும்போது, அவர்களை நீங்கள் மிகவும் நேசிக்கிறீர்கள் என்பதை அவர்கள் உணரும் வகையில் அன்பாக நடந்துகொள்ள வேண்டும், கொஞ்ச வேண்டும்.
பொது இடங்களில் (At a public place):
குழந்தையை வெளியே ஏதேனும் பார்ட்டி அல்லது ஷாப்பிங் மாலுக்கு நீங்கள் அழைத்துச் சென்று இருக்கையில், அங்கே குழந்தை திடீரென்று அடம்பிடித்து அழ ஆரம்பித்தால் உங்களுக்கு சங்கடமாகத்தான் இருக்கும்.
இந்தச் சூழ்நிலையில் கோபம் கொள்ளாமல் இருங்கள்.அதற்குப் பதிலாக, குழந்தையை தனிமையான ஒரு இடத்திற்கு அழைத்துச் செல்லுங்கள், ஒரு தனி அறைக்கோ அல்லது உங்கள் காருக்கோ அழைத்துச் செல்லலாம். பிறகு குழந்தையின் அழுகை நிற்கும் வரை குழந்தையை கட்டி அணைத்துக்கொள்ளுங்கள், முன்பு கூறியது போலவே, எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று குழந்தைக்கு அறிவுரை கூறுங்கள்.
உங்கள் குழந்தை கேட்பதற்கு ஒப்புக்கொண்டு இறங்கி வராதீர்கள், இப்படிச் செய்வதால் ஒவ்வொரு முறையும் இதுவே நடக்கும், அதாவது இப்படி அடம்பிடித்து ஆர்ப்பாட்டம் செய்தால் நமக்கு வேண்டியது கிடைத்துவிடும் என்று அவர்கள் புரிந்துகொண்டால், பிறகு ஒவ்வொரு முறையும் அதையே ஆயுதமாகப் பயன்படுத்துவார்கள். குழந்தைகள் மிகப் புத்திசாலிகள்!
இது போன்ற சூழ்நிலைகளை எப்படித் தவிர்ப்பது? (How to avoid such situations?)
பொதுவாக, உங்கள் குழந்தை அடம்பிடித்து ஆர்ப்பாட்டம் செய்வதற்கு ஏதேனும் குறிப்பிட்ட காரணம் உள்ளது; குழந்தை பசியாக இருக்கலாம், தூக்கம் வரலாம், அல்லது சலிப்பாக இருக்கலாம். நீண்ட நேரம் நாம் ஷாப்பிங் செய்யும் சமயங்களில் குழந்தைகள் தங்களைக் கட்டுப்படுத்த முடியாமல் அழுது பிரச்சனை செய்வதற்கு அவர்கள் சலிப்பாவதே முக்கியமான காரணம்.உங்கள் குழந்தை வார்த்தைகளால் வெளிப்படுத்தாத இந்த விஷயங்களை நீங்கள் தான் அவர்களைக் கூர்ந்து கவனித்து அறிந்துகொள்ள வேண்டும். அவர்கள் அழுது பிரச்சனை செய்யும் முன்பு, அவர்களுக்கு சாப்பிட ஏதேனும் கொடுங்கள், அல்லது வெளியே அழைத்துச் சென்று தூங்க வையுங்கள்.உடனே, மொபைல் அல்லது லேப்டாப்பை அவர்களிடம் கொடுத்து அமைதிப்படுத்தலாம் என்று நினைக்காதீர்கள்! அது நல்லதல்ல.
இதுபோன்ற சூழ்நிலைகளை எப்படிக் குறைப்பது? (How to reduce these episodes?)
குழந்தைக்கு எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்று நீங்கள் அறிவுரை கூறும்போது, எது சரி எது தவறு என்ற வித்தியாசத்தை அவர்களுக்கு புரியவைக்க வேண்டியதும் முக்கியம். அவர்கள் வாழ்க்கையை அவர்களின் விருப்பம் போல வாழவும் சிறிதளவு அனுமதிக்க வேண்டியது முக்கியம். நீங்கள் சொல்வதையே செய்ய வேண்டும் என்று நினைக்காதீர்கள், பல விருப்பங்களை முன்வைத்து, அவர்கள் விரும்புவதைத் தேர்ந்தெடுக்க விடுங்கள். உதாரணமாக, உங்கள் குழந்தை சாப்பிட மறுத்து அடம்பிடித்தால், சாப்பாடு வேண்டுமா சப்பாத்தி வேண்டுமா என்று அவர்களிடம் கேளுங்கள், அல்லது வெளியே சென்று சாப்பிடலாமா என்று கேளுங்கள். உங்கள் குழந்தைகள் எந்த ஆடை அணிய விரும்புகிறார்கள் என்று அவர்களிடம் கேளுங்கள்.
குழந்தை வெறுப்படையும்போது அவர்களுக்கு ஆதரவாக இருங்கள், எதனால் அப்படி ஆனது என்று கண்டறிந்து, அதைச் சரி செய்ய உதவுங்கள். இது உங்கள் குழந்தையின் வாழ்க்கையில் மிக முக்கியமான பகுதி, பிறரைச் சாராமல் எப்படி வாழ்வது எனும் திறனை அவர்கள் வளர்த்துக்கொள்ளும் ஒரு முக்கியமான பகுதி என்பதை எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் குழந்தைகளுடன் போதுமான அளவு நேரத்தை மகிழ்ச்சியாக செலவழியுங்கள். அவர்களின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள உதவினால், எதிர்காலத்தில் அது உங்களுக்கும் நல்லது அவர்களுக்கும் நல்லது!