Home குழந்தை நலம் குழந்தைகளை கண்டித்து வளர்ப்பது சரியா?

குழந்தைகளை கண்டித்து வளர்ப்பது சரியா?

64

குழந்தை நலம்:குழந்தைகளைக் கண்டிக்கவே கூடாதா? அவர்கள் போக்கிலேயே சீரழிய விடுவதா என்றால், கட்டாயம் கண்டிக்கத்தான் வேண்டும். கடிவாளம் இல்லாத குதிரைபோல்தான் கண்டித்து வளர்க்கப்படாத குழந்தைகளும். ஆனால், கண்டிப்பது என்பது பலரும் நினைப்பதுபோல் கண்மூடித்தனமாக அடித்தோ திட்டியோ தண்டிப்பது அல்ல.

குழந்தைகள் இயல்பாகவே தங்களுக்குப் பிடித்த செயல்களை மட்டுமே செய்வார்கள். ஆகவே, நீங்கள் எதிர்பார்க்கும் செயலைச் செய்ய வேண்டுமானால் அதை அவர்களுக்குப் பிடித்ததாக மாற்ற வேண்டும். அதேபோல் நமக்குப் பிடிக்காத செயல் ஒன்றை அவர்கள் செய்யாமல் இருக்க வேண்டுமானால், அதைவிட சுவாரசியமான ஒரு செயலைச் செய்யச் சொல்ல வேண்டும்.

ஒரு செயலைக் கண்டிக்கும்போது அச்செயல் மட்டும்தான் நமக்குப் பிடிக்கவில்லை, அந்தக் குழந்தையையே ஒட்டுமொத்தமாக வெறுக்கவில்லை என்பதை அந்தக் குழந்தைக்குப் புரியவைக்க வேண்டும். ‘இதை மட்டும் செய்யாமல் இருந்தால், நீ எவ்வளவு நல்ல பையன் தெரியுமா?’ என்பதற்கும் ‘நீ எதற்குமே லாயக்கில்லாதவன்’ என்பதற்கும் வித்தியாசம் இருக்கிறதல்லவா?

அதுபோல் குழந்தைகளுக்கு ஒழுக்கங்களையும் நல்ல பழக்கங்களையும் எவ்வளவு சீக்கிரம் அறிமுகப்படுத்துகிறோமோ, அவ்வளவு நல்லது. ஐந்தில் வளைக்காமல் ஐம்பத்து எட்டில் ரிட்டயர் ஆகும்போது, வளைக்க நினைத்தால் ஒடிந்துவிடும்.

ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு தனித்தன்மை உண்டு. அதை உணர்ந்து பொதுமைப்படுத்திப் பிறருடன் ஒப்பிடாமல் இருப்பதும் முக்கியம். குழந்தைகளை இயல்பாக விடுவதற்கும் நமது வழிக்குக் கொண்டுவருவதற்கும் இடையே உள்ள சமநிலையை அடைய முடிந்தால் அதுவே நலம்தரும்.