Home குழந்தை நலம் குழந்தைகளுக்கு பல்துலக்க கற்று கொடுங்க

குழந்தைகளுக்கு பல்துலக்க கற்று கொடுங்க

22

உங்கள் குழந்தைகள் ஆரோக்கியமாக வளரவேண்டும் என்றால், அடிப்படையான ஆரோக்கிய விஷயங்களை அவர்களுக்கு கற்றுக்கொடுக்கவேண்டும். அவைகளை பொறுமையாக, நிதானமாக கற்றுக்கொடுத்து மனதில் பதியச்செய்யவேண்டும்.

நிறைய தாய்மார்கள் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளை காலையில் எழுப்பி, அப்படியே பாத்ரூமில் கொண்டு போய் நிறுத்தி, பிரஷ்ஷில் பேஸ்ட்டைவைத்து கையில் கொடுத்து, பல்லை துலக்கும்படி வற்புறுத்துவார்கள். குழந்தைகள் அதை ஒரு வேலையாக நினைத்து எரிச்சலடைவார்கள். ‘ஏன் இப்படி எல்லாம் எங்களை தொந்தரவு செய்கிறீர்கள்?’ என்பதுபோல் பார்ப்பார்கள்.

‘ஏன் பல்துலக்கவேண்டும்?’ என்பதற்கான காரணத்தை அவர்கள் மனதில் பதியவைத்துவிட்டால், எரிச்சலடையாமல் அவர்களாகவே பல்துலக்கத் தொடங்கிவிடுவார்கள்.

ஏன் பல் துலக்கவேண்டும் என்ற கேள்வியை உங்களிடம் கேட்டால், என்ன பதில் சொல்வீர்கள்?

“நேற்று இரவு நீ உணவருந்திவிட்டு தூங்கினாய். அந்த உணவின் துணுக்குகள் பற்களின் இடுக்குப் பகுதிகளில் தங்கியிருக் கும். கிட்டத்தட்ட எட்டு மணி நேரம் நீ தூங்கி யிருக்கிறாய். அப்போது அந்த துணுக்குகளில் நுண்கிருமிகள் வளர்ந்திருக்கும். அவைகளில் ‘ஈகோலி’ மற்றும் ‘ஸ்டாபில்கோலி’ ஆகிய இருவகை நுண்கிருமிகளும் அதிக பாதிப்பை உருவாக்கக்கூடியவை. ஈகோலியால் வயிற்றுப்போக்கு தோன்றும்.

ஸ்டாபில்கோலியால் சருமத் தொற்றுநோய் உருவாகும். பற்களில் இருக்கும் கழிவுகளால் வேறுபல நோய்களும் உருவாகும். அத்தகைய நோய்கள் உனக்கு உருவாகாமல் இருக்கவே உன்னை தினமும் காலையில் பல்துலக்க சொல்கிறேன்” என்று தெளிவாக குழந்தைகளிடம் கூறுங்கள். எல்லா உணவுப் பொருட்களையும் ரசித்து, ருசித்து, மென்று சாப்பிடுவதற்கு பற்கள் மிக அவசியம். ஜீரணத்திற்கும் பற்கள் அத்தியாவசியம் என்பதை எடுத்துக்கூறுங்கள்.

‘ஒரு நாள் எத்தனை தடவை பல் துலக்கவேண்டும்?’ என்ற கேள்வியை உங்கள் குழந்தை எழுப்பும்.

சிறுவயதில் இருந்தே தினமும் இருமுறை பல்துலக்கவேண்டும் என்று கூறுங்கள். அதிக நேரம் தேவையில்லை. ஒருமுறை, இரண்டு நிமிடங்கள் மட்டும் துலக்கினால்போதும். ஒரு பட்டாணி அளவு பேஸ்ட் போதுமானது.

‘எந்த பகுதியில் இருந்து பற்களை துலக்கதொடங்கவேண்டும்?’ என்ற கேள்வியை எழுப்பினால், அதற்கும் பொறுமையாக பதில்கூறி, எப்படி துலக்கவேண்டும் என்றும் சொல்லிக்கொடுங்கள்.

கடைவாய் பற்களில் இருந்து துலக்கத் தொடங்கவேண்டும். மேல்வரிசை பற்களுக்கும்- கீழ் வரிசை பற்களுக்கும் இடையே இடைவெளிவிட்டு துலக்கினால் பற்களில் இருக்கும் கழிவுகள் வாய்க்குள் செல்லும். பின்பு நன்றாக வாயை கொப்பளித்து அந்த கழிவுகளை வெளியேற்றவேண்டும். பற்களை மேலும் கீழுமாக துலக்குவதுதான் சரியான முறை.