எதற்கெடுத்தாலும் கோபம் கொள்ளும் குழந்தையை கையாளுவது ஒன்னும் லேசுபட்ட காரியம் அல்ல. அவர்களை மாற்றுவதற்கு நீண்ட காலம் எடுக்கும். அதற்கு முக்கியமாக தேவைப்படுவது பொறுமையும் நீடித்து நிலைக்கும் திறனும். அதிகமாக கோபப்படும் குழந்தையை கையாள வேண்டும் என்றால், அவ்வகையான சூழ்நிலைகளில் அவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதை முதலில் தெரிந்து கொள்வது அவசியம்.
அமைதியாக அழுதல் அல்லது மூர்க்கத்தனமாக நடந்து கொள்ளுதல் என எப்படி வேண்டுமானாலும் அவர்கள் அவர்களின் கோபத்தை வெளிக்காட்டுவார்கள். இது போக உங்களை அடிக்கலாம், கூச்சலிடலாம், அழலாம் அல்லது கடிக்க கூட செய்யலாம். இவைகளில் எதையாவது அவர்கள் அடிக்கடி தொடர்ச்சியாக செய்தால், அதிக கோபம் கொள்ளும் உங்கள் குழந்தையை கையாள நேரம் வந்து விட்டது என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்.
குழந்தைகள் அடம் பிடித்து சண்டித்தனம் செய்யும் போது பெற்றோர்களுக்கு மன அழுத்தமும் எரிச்சலும் ஏற்படும். இதனை நடத்தை பிரச்சனையின் ஒரு பகுதியாக எடுத்துக் கொள்ளலாம். நிலையான அக்கறையும் மன ஒருமித்தலும் இருந்தால் போதும், உங்கள் குழந்தையின் இந்த குணத்தை மாற்றிவிடலாம்.
அவர்கள் தங்களின் கோபத்தை வெளிப்படுத்தி அமைதியான பிறகு அவர்களுடன் பேசுங்கள். இது ஒரு தீய பழக்கம் என்று புரிய வையுங்கள். இவ்வகை சூழ்நிலைகளை சமாளிக்க சில டிப்ஸ்களை நீங்கள் அறிந்திருந்தால் இந்த வேலையை சுலபமாக செய்து முடிக்கலாம். அதிகமாக கோபம் கொள்ளும் குழந்தையை கையாள, இதோ உங்களுக்காக சில டிப்ஸ்.
காரணத்தை கண்டுபிடியுங்கள்
உங்கள் குழந்தைக்கு கோபம் வருவதற்கான காரணத்தை முதலில் கண்டறிய முற்படுங்கள். சில நேரம் உங்கள் கவனத்தை ஈர்க்க அவர்கள் தங்களின் கோபத்தை வெளிக்காட்டலாம். அல்லது அவர்கள் தேவைகள் நிராகரிக்கப்படும் போதும் அவர்கள் தங்களின் கோபத்தை வெளிக்காட்டலாம். உங்கள் குழந்தைக்கு கோபத்தை உண்டாக்கும் சூழ்நிலைகள் திரும்ப ஏற்படாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
சில விதிமுறைகளை போடுங்கள்
செயல்பாட்டில் இறங்குவதற்கு முன்பு சரியாக திட்டமிடுவது மிகவும் முக்கியம். அதனால் களத்தில் இறங்கும் முன் முதலில் சில விதிமுறைகளை போடுங்கள். குழந்தையின் சில தேவையை நீங்கள் நிராகரிப்பதற்கான சரியான காரணத்தை அவர்களுக்கு புரிய வையுங்கள். அதே நேரம் அவர்களின் அனைத்து தேவைகளையும் நீங்கள் நிராகரிக்காதபடி பார்த்துக் கொள்ளுங்கள்.
சீக்கிரமாக செயல்படுங்கள்
உங்கள் குழந்தைக்கு அதிக அளவில் கோபம் வருவதை நீங்கள் கண்டறிந்தால், அதற்குரிய நடவடிக்கைகளில் உடனே இறங்குங்கள். இதனால் அதிக கோபம் கொள்ளும் உங்கள் குழந்தையை சுலபமாகவும் வேகமாகவும் சரி செய்து விடலாம்.
அவர்களுக்கு வழிகாட்டுங்கள்
பிஸியாக இருக்கும் பெற்றோர்கள் தங்கள் குழந்தையின் குணத்தை மேம்படுத்த போதிய நேரம் ஒதுக்குவதில்லை. குழந்தைகள் எதற்கெடுத்தாலும் கோபப்படுவதற்கு இதுவும் கூட ஒரு முக்கிய காரணமாக விளங்குகிறது. அதனால் உங்கள் குழந்தைகளுடன் போதிய நேரம் செலவழித்து எது சரி எது தப்பு என்பதை அவர்களுக்கு புரிய வையுங்கள்.
புறக்கணித்தல்
சில நேரங்களில் உங்கள் குழந்தையின் முன் கோபத்தை கையாள அவர்களின் கோபத்தை புறக்கணிப்பதே சிறந்த வழியாக விளங்கும். அவர்களின் தேவை எல்லாம் அவர்களின் பிடிவாதத்தால் நிறைவேறும் என்று அவர்கள் தெரிந்து கொண்டால், தொடர்ந்து பிடிவாதம் பிடித்துக் கொண்டே தான் இருப்பார்கள்.
பொறுமையாக இருங்கள்
நீங்கள் எடுக்கும் நடவடிக்கைகளால் உடனடி பலன் கிடைக்கு என்று எதிர்பார்க்காதீர்கள். அதற்கு சிறிசு காலம் எடுக்கும். நீங்கள் எடுக்கும் நடவடிக்கைகளில் தொடர்ச்சியான பொறுமையை நீங்கள் கண்டிப்பாக கடைப்பிடிக்க வேண்டும். உங்கள் குழந்தையின் முன் கோபத்தை கையாள இதுவும் உங்களுக்கு உதவி புரியும்.
தொழில் ரீதியான உதவியை நாடுங்கள்
குழந்தையின் முன் கோபத்தை கட்டுப்படுத்த இதுவும் ஒரு சிறந்த வழியாகும். குழந்தைகளின் பிடிவாதங்கள் மற்றும் கோபங்களை கையாள பல தனித்தன்மையான தெரப்பிகள் உள்ளது. தொழில் ரீதியான ஆலோசனை மூலம் இவ்வகை சூழ்நிலைகளை சிறப்பாக கையாளலாம்.
அவர்களை பார்த்து கத்தாதீர்கள்
உங்கள் குழந்தை கோபத்தை எப்படி வெளிப்படுத்தினாலும் சரி, அவர்களை பார்த்து கத்தாதீர்கள். உங்களின் கவனத்தை ஈர்க்கவே அவர்கள் இப்படி நடந்து கொள்ளும் போது, நீங்கள் அவர்களை பார்த்து கத்துவது அவர்களுக்கு கூடுதல் சுவாரசியத்தை உண்டாக்கிவிடும்.