தாய் ஆகுதல்:கர்ப்பம் தரிப்பதற்கு, பெண்களுக்கு உடல்ரீதியாக மிக ஏதுவான வயது 22- 26. இதற்கு விதி விலக்குகளும் உண்டு. இந்த வயதுக்கு அப்புறம் வயது அதிகரிக்க அதிகரிக்க கர்ப்பமாகும் வாய்ப்பு குறைந்து கொண்டே போகும்.
பெண்கள் பிறக்கும் போதே, அவர்களுக்கு கருமுட்டையின் எண்ணிக்கையும் ஆரோக்கியமும் நிர்ணயிக்கப்படுகின்றன. இந்தக் கருமுட்டைகள் வயதாக வயதாக, எண்ணிக்கையிலும் ஆரோக்கியத்திலும் தரம் குறைந்து போய் விடும். ஆனால் ஆண்களைப் பொறுத்த வரை, அவர்களுக்கு விந்துக்கள் தினம் உருவாகும். ஆண்களுக்கும் விந்து உற்பத்தி மற்றும் ஆரோக்கியம் வயதாக, ஆக, குறையும்.
பெண் வயதுக்கு வந்த பின், சராசரியாக இருபதெட்டு நாட்களுக்கு ஒரு முறை அந்த முட்டைகள் வளர்ச்சி பெற்று பால்லோபியன் குழாய் (Fallopian tube) வழியாய் கீழிறங்கும். இதனை முட்டை வெளியீடு என்று அழைப்பார்கள், ஆங்கிலத்தில் இதற்கு ஓவுலஷன் (ovulation) என்று பெயர்.
கர்ப்பம் தரிக்க ஏதுவான நாட்கள் எவை: எந்த நாட்களில் நீங்கள் உடலுறவில் ஈடுபடுகிறீர்கள் என்பது தான் இதற்கு முக்கியம். கரு முட்டை, கருப்பையில் இருந்து வெளிவந்து, 18- 24 மணி நேரத்துக்குள் ஆணின் விந்துவை சேர வேண்டும். அதனால் இந்த கால கட்டத்தில் உங்கள் பால்லோபியன் குழாய்களில் (Fallopian tube) விந்து இருக்க வேண்டும். ஆணின் விந்து (sperm) சராசரியாக 3 – 5 நாட்கள் வரை பெண்ணின் பெண்ணுறுப்பில் உயிரோடு இருக்கும்.
உடலுறவின் போது நீங்கள், எண்ணெய், எச்சில், ஜெல் போன்றவை பயன்படுதினால், அவற்றை நிறுத்தி விடுங்கள். ஏனென்றால் இவை விந்துவுக்கு ஆபத்து விளைவிக்கும். குழந்தைகளுக்கான எண்ணெய் (baby oil) தான் ஓரளவு ஆபத்து இல்லாதது. முடிந்த வரை எந்த விதமான லூப்ரிகன்ட் (Lubricant) பொருட்களை உபயோகிக்காமல் இருப்பதே நல்லது.
பல பெண்கள் உடலுறவு முடிந்ததும் தங்கள் பெண்குறியை சுத்தம் செய்ய பல திரவங்களையும், தண்ணீரையும் உபயோகிக்கிறார்கள். இதை Vaginal Douche என்று ஆங்கிலத்தில் என்று சொல்லுவார்கள். நீங்கள் கர்ப்பம் அடைய நினைக்கும் கட்டத்தில் இதனை கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். இத்திரவங்கள் விந்துவைக் கொல்வதுடன், பெண்ணுறுப்பில் உள்ள திரவங்களின் தன்மையையும் மாற்றி கர்ப்பமடைய விடாமல் தடுக்கும்.