அதிக உடல் எடை கொண்டவரா நீங்கள் ? கவலை வேண்டாம்…
அதற்காக பணத்தை விரயம் செய்யாமல் உடல் எடையைக் குறைக்க சில வழிகள். உடல் எடையைக் குறைக்க காலை உணவைத் தவிர்ப்பது தவறான செயல். ஏனெனில் காலை உணவுதான் நம் உடலுக்கு, அன்றைய தினத்திற்கு தேவையான ஆற்றலைக் கொடுக்கிறது. அவற்றைத் தவிர்ப்பதால் உடல் நலம்தான் பாதிக்கப்படும்.
தினசரி கடைபிடிக்க வேண்டிய உணவு முறைகள்:
* உடல் எடையைக் குறைக்க தேன் ஒரு சிறந்த மருத்துவப் பொருளாகும். காலை எழுந்தவுடன் 1- 2 டம்ளர். இளம் சூடான தண்ணீருடன் 2 டீஸ்பூன் எலுமிச்சை சாறு 1 டீஸ்பூன் தேன் மற்றும் சிறிது மிளகுத் தூள் சேர்த்து தினமும் குடிக்க வேண்டும்.
* வேக நடை, சைக்கிளிங், ஸ்க்கிப்பிங், குறைந்தது 35 நிமிடம் உடற் பயிற்சிகளை தினமும் செய்ய வேண்டும்.
* காபி, டீ அருந்தும் பழக்கம் உடையவராக இருந்தால் அதற்குப் பதிலாக (பால் சேர்க்காமல்) காபி அல்லது டீ-யில் எலுமிச்சை சாறு பிழிந்து அருந்தலாம்.பால் சேர்த்து அருந்த விரும்புவர்கள் பாலை நன்கு 3 அல்லது 4 முறை காய்ச்சி பால் ஆடையை நீங்கிய பின் அருந்தலாம். காரமான உணவுப் பொருள் இஞ்சி, மிளகு, இலவங்கப்பட்டை மிகவும் சிறந்தது. இஞ்சி டீயை 2 – 3 முறை குடிக்கலாம்.
* டயட்டில் இருக்கும் போது பச்சை காய்கறிகள், தக்காளி ,கேரட் போன்ற கலோரி குறைவான,அதிக வைட்டமின் மற்றும் கனிமச் சத்துக்கள் நிறைந்த உணவுகளை அதிகமாக உண்ண வேண்டும்.இதனால் உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, உடல் எடையும் விரைவில் குறையும். அதிக பசியும் எடுக்காமல் இருக்கும்.u
* காலை உணவு 8.00 – 9.00 மணிக்குள் உண்ண வேண்டும். வெண்ணெய் எடுத்த மோர் – 1 டம்ளர், அதனுடன் கொய்யா 3 துண்டு, வெண்ணெய் தடவாத இரண்டு ரொட்டி அல்லது இரண்டு இட்லி.
* மதிய உணவாக 2கரண்டி ஏதேனும் ஒரு வகை கீரை, நீர் சத்து நிறைந்த காய்கறிகள் ( வெண்பூசணி,புடலங்காய் ) பருப்பு சேர்த்து கூட்டு, ஒரு கரண்டி சாம்பார், ஒரு கப் சாதம் அல்லது எண்ணெய் சேர்க்காமல் இரண்டு கோதுமை சப்பாத்தியை 12.00 – 1.00 மணிக்குள் உண்ண வேண்டும்.
* இரவு உணவு 7.00 – 8.00 மணிக்குள் வேக வைத்த காய்கறிகள் 3கப் அல்லது சூப், பப்பாளி, அன்னாசிப்பழம் அல்லது ஆரஞ்சு 6 துண்டு, கொய்யா 3 துண்டு உணவாக எடுத்துக் கொள்ளலாம்.
* பகலில் உறங்குவதை தவிர்த்தல் நல்லது. எண்ணெய் பண்டங்கள் மற்றும் நொறுக்குத் தீனிகளை அறவே தவிர்க்க வேண்டும்.உப்புள்ள ஊறுகாய், சிப்ஸ், உப்பு பிஸ்கட் போன்றவற்றை தவிர்க்கவும். இரவில் உண்ட பின் சிறிது குறுநடை செய்த பின் உறங்கச் செல்லவும்.
* எப்போதும் உணவு உண்பதற்கு முன்பாக ஒரு துண்டு இஞ்சியை, எலுமிச்சை சாறு மற்றும் உப்பில் தொட்டு சாப்பிட்டால், அதிகமான அளவு உணவு உண்ணாமல், கட்டுபாட்டுடன் உண்ணலாம். இவ்வாறெல்லாம் செய்து வந்தால் நீங்களும் உடல் எடையைக் குறைத்து அழகான உடல் வடிவத்தைப் பெற்று ஆரோக்கியமாக வாழலாம்.