சேதுபந்தாசனம் என்பது முதுகு வலி உள்ளவர்களுக்கு நல்ல பலன்களை அளிக்கும் ஆசனமாகும்.
செய்யும் முறை:
கீழே மல்லாந்து படுத்துக்கொள்ளவும்.
கால்களை ஒன்றுடன் ஒன்று அருகருகே கொண்டு வரவும், அதே போல் கைகளையும் உடலின் பக்கவாட்டில் கொண்டு வரவும்.
உள்ளங்கைகள் தரையை நோக்கியபடி இருக்க வேண்டும், கூடுமான வரை கணுக்கால்களைப் பிடித்துக்கொள்ள வேண்டும்.
மூச்சை ஆழமாக உள்ளிழுத்து, உள்ளங்கைகளை அழுத்தி தலையைத் தூக்காமல் இடுப்பை மட்டும் எவ்வளவு உயர்த்த முடியுமோ அவ்வளவு மேலே உயர்த்தவும்.
இயல்பாக சுவாசித்துக்கொண்டே இதே நிலையில் சிறிது நேரம் இருக்கவும்.
மீண்டும் ஆழமாக சுவாசித்து, மூச்சை வெளியே விடும்போது இடுப்பை கீழே கொண்டு செல்லவும்.
இதை ஐந்து முறை அல்லது அதற்கு மேல் செய்யலாம், உங்களால் எத்தனை முறை செய்ய முடிகிறதோ, அதற்கேற்ப செய்யலாம்.
உங்கள் உடலின் திறனைத் தாண்டி, அதிகமாக வளைக்கக்கூடாது என்பதை நினைவில் கொள்ளவும்.
பலன்கள்:
உடலுக்கு:
கழுத்து, நெஞ்சுப்பகுதி, முதுகு மற்றும் கால் தசைகளைத் தளர்த்துகிறது.
முதுகுவலி உள்ளவர்களுக்கு நிவாரணம் கிடைக்க உதவுகிறது.
உடல் முழுவதையும் ஆசுவாசப்படுத்துகிறது.
மனதிற்கு:
மனதை அமைதிப்படுத்தி, மனக் கலக்கத்தைக் குறைக்கிறது.
உணர்ச்சி:
உணர்வுகளில் சமநிலை பெற உதவுகிறது.
யாரெல்லாம் செய்யக்கூடாது?
கழுத்து, தோள் அல்லது முதுகுத்தண்டு தொடர்பான பிரச்சனைகள் உள்ளவர்கள் இந்தப் பயிற்சியைத் தவிர்க்க வேண்டும்.