Home ஆரோக்கியம் உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்த ஆறு குறிப்புகள்

உங்கள் கோபத்தைக் கட்டுப்படுத்த ஆறு குறிப்புகள்

25

பலருக்கு, கோபம் என்பது அவர்களின் ஓர் இயல்பாகவே இருக்கிறது. இத்தகைய நபர்கள் பெரும்பாலும் சில நிகழ்வு, நபர்கள் அல்லது அவர்களின் சாதனைகளுடன் மகிழ்ச்சியைத் தொடர்புடையதாக்கிக் கொள்கின்றனர். எனவே, அவர்களுக்கு மகிழ்ச்சி என்பது எதிர்காலத்திற்குத் தள்ளிவைக்கப்பட்ட ஓர் ஆடம்பர விஷயமாகிறது. இதனால், அவர்கள் சிறுசிறு எதிர்மறை நிகழ்வுகளின்போதும் எரிச்சலடைந்து, தங்கள் நிதானத்தை இழக்கின்றனர், அதிகமாக தூண்டும் காரணம் இல்லாமலேயே அவர்களுக்குக் கோபம் வெடிக்கிறது. கட்டுப்படுத்தாத கோபம் பெரும்பாலும், வன்முறையில் சென்று முடிகிறது.

உணர்ச்சி ஒன்று எழும்போது, அதைக் கட்டுப்படுத்துவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது போலத் தெரிகிறது. கோபத்திற்குள் சிக்கிக்கொண்டு தவறான முடிவுகளை எடுப்பதும் சூழ்நிலையை இன்னும் ஆபத்தானதாக மாற்றக்கூடியபடி பேசுவதும் மிக எளிது. உணர்ச்சி பற்றி விழிப்புணர்வுடன் இருந்து, படிப்படியாக மனதை அமைதி நிலைக்குக் கொண்டு செல்வதுதான் கடினம். அதைச் செய்வதற்கு உதவும் சில எளிய நுட்பங்களைப் பார்க்கலாம்:

நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள் என்பது முக்கியம்:

நீங்கள் சாப்பிடும் உணவின் தன்மைக்கு ஏற்ப உங்கள் மனம் எளிதாக கிளர்ச்சியடையலாம். உணவும் மற்றும் உணர்ச்சிகளும் நேரடியாக தொடர்புடையவை. மனதை நேரடியாகப் பாதிக்கும் காரமான, மசாலா அதிகமுள்ள உணவைத் தவிர்ப்பது நல்லது.

உடலுழைப்பு இருக்க வேண்டும், உடற்பயிற்சி செய்ய வேண்டும்:

கோபம் உங்கள் தசைகளை இறுக்கமாக்குகிறது. உங்கள் தினசரி வாழ்வில் உடல் செயல்பாடுகளுக்கு என்று சிறிது நேரம் ஒதுக்கி வைத்துக்கொள்ளவும். உங்கள் கோபம் அதிகரிக்கிறது என்று நீங்கள் நினைக்கும் போதெல்லாம், ஒரு சுற்று ஓடிவிட்டு வரலாம் அல்லது சிறிது தூரம் நடந்துவிட்டு வரலாம். உங்கள் மூச்சுடன் சீராக ஒத்திசையும் சில யோகாசனப் பயிற்சிகளைச் செய்யுங்கள். இது உடலில் இருந்து இறுக்கத்தை நீக்க உதவும், உங்கள் ஆற்றலை அதிகமாக வைத்திருக்கவும் மனநிலையை நல்லதாக்கும் என்டோர்பின் வெளியிடவும் உதவும்.

உங்கள் மூச்சைப் பயன்படுத்துங்கள்:

ஆழமாக சுவாசியுங்கள். உங்களுக்கு ஒருவர் மீதோ அல்லது ஒரு சூழ்நிலையின்போதோ கோபம் அதிகமாவது போல் தெரிந்தால், அவர்களை துவம்சம் செய்துவிட வேண்டும் என்பதுபோல் தோன்றினால், மெதுவாகவும் ஆழமாகவும் மூச்சை இழுத்து விடவும்.இப்படி சுவாசிப்பது உடனடியாக உங்கள் மன அழுத்தம் குறைய உதவும், உங்கள் தசைகள் ஆசுவாசமாகி கோபம் தணியவும் உதவும்.

ஒவ்வொருநாளும் குறைந்தது 6-8 மணி நேரம் தூங்க வேண்டும்:

போதிய ஒய்வு இல்லாவிட்டால் அடிக்கடி எரிச்சலடைவீர்கள். நீங்கள் இரவில் நீண்ட நேரம் கண் விழித்திருப்பவர் எனில் எளிதில் கோபமடைவீர்கள்.

போதைப்பொருள் பயன்படுத்துவதையும் மதுவையும் தவிர்க்கவும்:

நீங்கள் அடிக்கடி மது அருந்துபவர் என்றால், இது அதனை விட்டொழிக்க வேண்டிய நேரமாகும். போதை மருந்துகளைப் பயன்படுத்துவதும், மது அருந்துவதும் நிலைமையை இன்னும் மோசமாக்கும்.

தியானம் உதவும்:

தினமும் 20 நிமிடங்கள் முழு விழிப்புணர்வுத் தியானம் செய்வது, மனதை அமைதிப்படுத்தவும் யாரிடமும் நீங்கள் கட்டுப்பாடிழந்து கோபப்படுவதைத் தவிர்க்கவும் உதவும். அது உடலில் எழும் அனைத்து உணர்வுகளையும் மனதில் தோன்றும் உணர்வுகளையும் விழிப்புணர்வுடன் கவனிக்கும் திறனை உங்களுக்கு அளிக்கும். இதனால் நீங்கள் இன்னும் சிறப்பான முடிவுகளை எடுக்க முடியும்.

சில சமயம், உங்கள் உணர்வுகளை தாளில் எழுதுவதும், சூழ்நிலையை உங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டவர உதவலாம். சிறிது காலம் கழித்து, இத்தகைய சிறு சிறு விஷயங்களுக்கெல்லாம் கோபப்பட்டது முட்டாள்தனம் என்று உங்களுக்கே தோன்றக்கூடும். அமைதியற்ற, எந்த நேரம் எப்படி யோசிக்கும் என்று கணிக்க முடியாத மனதைக் கட்டுபடுத்துவது கடினம். சூழ்நிலையை விழிப்புணர்வுடன் கவனித்துப் புரிந்துகொள்வதும், ஏற்றுக்கொள்வதும் கோபத்திற்கான காரணத்தைப் புரிந்துகொள்ளவும் கோபத்தைக் கட்டுப்படுத்தவும் உதவும்.