கோடைக்காலத்தில் சரும வறட்சி ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. கோடைக் காலத்தில் சருமப் பிரச்னைகளில் இருந்து காத்துக்கொள்வது பற்றிய தகவல்களை பார்க்கலாம்.
உடல் பராமரிப்பு :
கால் பாதங்களின் அடியில் உள்ள சூட்டை நீக்க, இளஞ்சூடான நீரில் கல் உப்பு, சிறிது எலுமிச்சைச் சாறு, பாதாம் எண்ணெய் போன்றவை கலந்த நீரில் 20 நிமிடங்கள் ஊறவைத்துப் பின்பு கழுவலாம்.
பாசிப்பயறை அரைத்துக் கால்களில் பூச வேண்டும். பின்பு, புளித்த தயிர் வைத்து நன்கு கால்களைத் தேய்த்துக் கழுவ வேண்டும்.
வெளியிடங்களுக்குச் செல்லும்போது முழு உடலையும் மூடும்படியான பருத்தி ஆடைகளைப் பயன்படுத்தலாம். இறுக்கமாக ஆடைகள் அணிவதைத் தவிர்க்கலாம்.
குளிக்கும் தண்ணீரில் முதல்நாள் இரவே, வேப்பிலையை ஊறவைத்து அந்த நீரை காலையில் பயன்படுத்தலாம். அதிக உடல் உஷ்ணத்தால் வயிற்றுவலி ஏற்படும்.
அதைச் சரி செய்ய, தொப்புள் பகுதியைச் சுற்றி விளக்கெண்ணெய் தடவலாம். அதேபோல், கண் இமைகளின் மேல்புறம் மற்றும் பாதங்களின் அடியில் விளக்கெண்ணெய் தேய்த்தால் உடல் சூடு தணியும்.
வெயிலிலோ அல்லது வெளியிலோ சென்றுவந்த பிறகு, ஈரமான துண்டை வயிற்றில் வைத்திருக்க வேண்டும். இதேநிலையில் 20 நிமிடங்கள் வரை இருந்தால் உடல் உஷ்ணம் குறையும்.
கூந்தல் பராமரிப்பு :
தர்பூசணி, கிர்ணி, மாதுளை, எலுமிச்சை, முலாம்பழம் போன்ற பழச்சாறுகளில் ஏதேனும் ஒன்றை தினமும் பருக வேண்டும்.
தலைமுடி வறட்சியைக் (dryness) குறைக்க வைட்டமின்-சி அதிகம் உள்ள பழச்சாறுகளைப் பருக வேண்டும். இது உடல் உஷ்ணத்தைக் குறைக்க உதவும்.
வெயில், மாசு கலந்த காற்று போன்றவற்றால் முடி உதிர்வு, வறண்ட கூந்தல், பொடுகுத்தொல்லை போன்றவை ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.
நீண்டதூரப் பயணம் செய்பவர்களுக்கு, சூழல் மாசு மற்றும் வியர்வை காரணமாக, மண்டையில் உள்ள துவாரங்கள் அடைபடும்.
இதைத் தடுக்க வாரம் ஒருமுறை ஆயில் மசாஜ் செய்யலாம். அதிக வீர்யம் இல்லாத ஷாம்பு மற்றும் கண்டிஷனர் பயன்படுத்தலாம். வாரத்துக்கு இரண்டுமுறை எண்ணெய் தேய்த்துக் குளிக்கலாம்.
சருமப் பராமரிப்பு :
கோடைக்காலத்தில் சரும வறட்சி ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன. அதைச் சரி செய்ய உணவு மட்டுமல்ல, பழக்க வழக்கங்களும் சரியாக இருக்க வேண்டும்.
அவகேடோவைத் தொடர்ந்து சாப்பிட்டுவர சருமம் பொலிவு பெறும். தோல் எரிச்சல், தோல் சிவந்து போவது, வறட்சி போன்ற சருமப் பிரச்னைகளைச் சரி செய்யும்.
அதிகமாக வியர்க்கும்போது அப்படியே விட்டுவிடக் கூடாது. சிறிது வியர்வை குறைந்தபிறகு அல்லது வியர்வையைத் துடைத்த பிறகு குளிப்பது நல்லது.
கற்றாழையில் உள்ள பசையை உடல் முழுவதும் தேய்த்து, சில நிமிடங்கள் கழித்துக் குளிக்கலாம். இது, அதீத வெயிலினால் ஏற்படும் தோல் கருமையை நீக்கி, புறஊதாக் கதிர்களின் தாக்கத்தைக் குறைக்கும்.
சருமத்தைப் பளபளப்பாக்கும். தண்ணீர் அதிகம் குடிப்பது, தினசரி மாதுளை, பீட்ரூட், கேரட் போன்றவற்றைச் சாப்பிடுவதன் மூலம் சரும வறட்சியைத் தடுக்கலாம்.
அவகேடோவை அரைத்து முகத்தில் தேய்த்து, சிறிது நேரம் கழித்துக் கழுவ முகம் பளபளக்கும்.